• Tue. Oct 21st, 2025

24×7 Live News

Apdin News

நடப்பாண்டில் 7-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: காவிரி ஆற்றில் விநாடிக்கு 30,000 கன அடி நீர் திறப்பு | Mettur Dam reaches full height for 7th time in this year

Byadmin

Oct 21, 2025


மேட்டூர்: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்துக்கு முன்கூட்டியே தொடங்கிய நிலையில், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அங்குள்ள அணைகள் நிரம்பிய நிலையில், உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டில் முதன் முறையாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 29-ல் நிரம்பியது. டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்திறப்பு காரணமாக, அணையின் நீர்மட்டம் குறைவதும், காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, அணை மீண்டும் நிரம்புவதுமாக இருந்து வருகிறது.

நடப்பாண்டில் 2-வது முறையாக கடந்த ஜூலை 5 தேதியும், ஜூலை 20-ம் தேதி 3-வது முறையும், ஜூலை 25-ம் 4 முறையும், ஆகஸ்ட் 20-ம் தேதி 5-வது முறையாகவும், செப்டம்பர் 2-ம் தேதி 6வது முறையாகவும் மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைகிறது. இதனால், அணைக்கு நேற்று மாலை விநாடிக்கு 20,000 கன அடியாகவும், இரவு 8 மணிக்கு 22,500 கன அடியாகவும், இரவு 11 மணிக்கு 30,000 கன அடியாக அதிகரித்து இருந்தது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து இருந்ததால், நேற்று மாலை 3 மணிக்கு மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை 7-வது முறையாக எட்டியது.

இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, நேற்று இரவு 11 மணிக்கு, அபாய ஒலி எழுப்பி 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. காவிரி ஆற்றில் விநாடிக்கு 30,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,300 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 7,700 கனஅடியும் என மொத்தமாக காவிரியில் 30,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 30,000 கன அடியாவும், நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

ஒரே ஆண்டில், மேட்டூர் அணை முழு கொள்ளளவை 7 முறை எட்டுவது இதுவே முதல் முறையாகும். அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால், கரையோர பகுதியில் வருவாய்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



By admin