“எஸ்ஐஆர் பணிகளை கண்டு திமுக பயப்படவில்லை. எங்களுக்கான வாக்குகள் திருடு போய்விடாமல் தடுக்கவே பாதுகாப்பு நடவடிக்கை களை எடுக்கிறோம்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து…
திமுக-வுக்கும் அதிமுக-வுக்குமாக மக்கள் மாறி மாறி வாக்களித்து வந்த நிலையில், தவெக-வின் வருகை அவர்களை குழப்புவதாக நினைக்கிறீர்களா?
குழப்பம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழக மக்கள் மிகவும் தெளிவாக வாக்களிக்கக் கூடியவர்கள். தேர்தலுக்குத் தேர்தல் பல்வேறு புதிய கட்சிகள் வருவதும், தேர்தல் முடிந்ததும் காணாமல் போவதும் வழக்கம். அதனால், மக்கள் எப்போதும் போல் தெளிவான முடிவையே எடுப்பார்கள்.
எஸ்ஐஆரைக் கண்டு திமுக அஞ்சுவது ஏன்… தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், தகுதியான ஒரு வாக்காளரை பட்டியலில் இருந்து எளிதில் நீக்கிவிட முடியுமா?
நாங்கள் பயப்படவில்லை. எங்கள் வாக்குகள் களவு போய்விடக்கூடாது என்பதுதான் எங்கள் கவலை. நம் வீட்டில் உள்ள பொருட்களைப் பாதுகாக்க வீட்டைப் பூட்டி வைக்கிறோம் அல்லவா? அதுபோல்தான் இதுவும். தமிழக மக்கள் திமுக-வுக்கு வாக்களிக்க தெளிவான முடிவோடு இருக்கிறார்கள். 2019-ல் இருந்து இது தொடர்கிறது. அந்த வாக்குகளை யாரும் திருடிவிடக் கூடாது என்பதற்காக எடுக்கும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கைதான் இது.
முதல்வரின் கொளத்தூர் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள் இருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறாரே..?
தேர்தல் ஆணையம் அவர்கள் கையில்தானே இருக்கிறது. உச்ச நீதிமன்றம் உட்பட இந்த நாடே தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத் தன்மையை இழந்து, பாஜக-வின் ‘பி டீம்’ போலச் செயல்படுவதாகச் சொல்கின்றனர். உண்மையிலேயே போலி வாக்குகள் இருந்தால் அவர்கள் நீக்கட்டும். அதை திமுக ஒருபோதும் எதிர்க்காது. அதிகாரம் கொண்ட நிர்மலா சீதாராமன், நேரடியாக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்து நடவடிக்கை எடுக்கட்டும். அப்படி எடுத்தால், அவரைப் பாராட்ட நான் தயாராக இருக்கிறேன்.
தவெக, நாதக ஆகிய கட்சிகளுக்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக இருப்பதை காணமுடிகிறது. அவர்களை ஈர்க்க திமுக என்ன செய்யப் போகிறது?
திமுக என்பதே இளைஞர்களை வைத்துத் தொடங்கப்பட்ட ஒரு மாபெரும் இயக்கம் தான். கட்சியைத் தொடங்கியபோது அண்ணாதுரைக்கு வயது 40. தொடக்கம் முதலே இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுக-வுக்கு மட்டும்தான் உண்டு. தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதே வேகத்துடன் இளைஞர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் நடத்தப்பட்ட ‘அறிவுத் திருவிழா’கூட அதன் ஒருபகுதி தான்.
திமுக மீதும், முதல்வர் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார் தவெக தலைவர் விஜய். ஆனால், முதல்வர் உள்ளிட்ட திமுக-வினர் யாரும் அவரது பெயரைக்கூட உச்சரிப்பதில்லையே..?
நாங்கள் எங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. திமுக ஓர் பெரிய ஆலமரம். அதன் நிழலுக்குப் பலரும் வருவார்கள்; சிலர் அதன் மீது கல்லெறிவார்கள். எல்லோருடைய விமர்சனத்துக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தால், நாங்கள் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க நேரம் இல்லாமல் போய்விடும்.
கோடநாடு கொலை – கொள்ளை வழக்கில் இருந்து இபிஎஸ்ஸை திமுக தான் காப்பாற்றி வருவதாக விமர்சனங்கள் வருகிறதே?
கோடநாடு வழக்கில் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. முந்தைய ஆட்சியாளர்கள், இந்த வழக்கில் பல்வேறு ஆதாரங்களை மறைத்துள்ளனர். அவற்றை சரிபார்த்து, குற்றவாளிகள் தப்பிவிடாதபடி வழக்கை நடத்த வேண்டியுள்ளது. அவசரகதியில் நடத்தி, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய நாங்கள் விரும்பவில்லை. உண்மைக் குற்றவாளிகள் யார் என்று நாட்டு மக்களுக்கு விரைவில் தெரியவரும்.
‘உடன்பிறப்பே வா’ ஒன் டு ஒன் சந்திப்பில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் மீது தலைமை பெரிதாக நடவடிக்கை எடுப்பதில்லை என திமுக-வினர் ஆதங்கப்படுகிறார்களே..?
அது உண்மையில்லை. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக நிர்வாகிகள் சொல்லும் கருத்துகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். குற்றம்பெரியதாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறு தவறுகளாக இருந்தால் திருத்திக் கொள்ள வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு எது சவலாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
எஸ்ஐஆர் உள்ளிட்ட எத்தனை சிரமங்கள் வந்தாலும், அதைச் சமாளிக்கும் திறமை திமுக-விடம் இருக்கிறது. நாங்கள் செய்த சாதனைகள்தான் எங்கள் பலம். நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மிதப்பில் இல்லை. மக்களவைத் தேர்தலில் பெற்றதைவிட, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற வேண்டும் என்ற இலக்குடன் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எனவே, திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.