1
தன்னுடைய குரலால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும்’ பாம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இயக்குநர்கள் இரா. பார்த்திபன் – கார்த்திகேயன் மணி- சண்முக பிரியன்- லோகேஷ் – ஸ்ரீ கணேஷ் – சிபி சக்கரவர்த்தி- நடிகர் மணிகண்டன் – ஆகியோர் அதிதிகளாக பங்கு பற்றி சிறப்பித்தனர்.
இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாம் ‘ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , ஷிவாத்மிகா ராஜசேகர் , காளி வெங்கட் , நாசர் , அபிராமி , சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பி. எம் . ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி .இமான் இசையமைத்திருக்கிறார். எளிய மக்களின் கடவுள் நம்பிக்கைகள் குறித்த அவல நகைச்சுவை படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கெம்பிரியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதா சுகுமார் – சுகுமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 12ம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த முன்னோட்டத்தில் ஒரு கதாபாத்திரத்தின் வாயு பிரிதலை முதன்மையான உள்ளடக்கமாக்கி.. அவர் உயிருடன் உள்ளார் என்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகள் ரசிகர்களை சிறந்த அவல நகைச்சுவை படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” நண்பர்களுடன் தேநீர் விடுதியில் அமர்ந்து விவாதித்த கதை இது. ஒரு ஐடியாவை டெவலப் செய்திருக்கிறோம். அன்பு என்றால் என்ன? என்பதை நேரடியாக சொல்லாமல் கதாபாத்திரம் மூலம் விவரிக்க முயற்சித்திருக்கிறோம்.
இந்த ஐடியாவை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளருக்கும், ஒத்துழைப்பு வழங்கிய நடிகர், நடிகைகள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் பனிரெண்டாம் திகதியன்று வெளியாகிறது. ரசிகர்கள் அனைவரையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.