0
நடிகர் கௌஷிக் ராம்- பிரதீபா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் அழுத்தமான காதல் கதையான ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் எஸ் ஜே என் அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ எனும் திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம்புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், ‘சில்மிசம்’ சிவா , ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர் .ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
யதார்த்தமான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் ஆர் .பிரபாகர் ஸ்தபதி தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை மிஸ்டர் டெல்டா கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் ஏழாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ் ஆர் பிரபாகரன் -விஜய் ஸ்ரீ -மைக்கேல் கே. ராஜா – ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் இசையை வெளியிட்டனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்தத் திரைப்படத்தில் இயல்பான கிராமத்து காதல் கதையை எதார்த்த மீறாமல் உணர்வுபூர்வமாக உருவாக்கி இருக்கிறோம். இப்படம் வெளியான பிறகு படத்தின் உச்சகட்ட காட்சி பேசப்படும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் என். ஆர். ரகு நந்தனின் பின்னணி இசை படைப்பை உயிர்ப்புள்ளதாக மாற்றி இருக்கிறது” என்றார்.