10
‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து மிரட்டும் ‘கொம்பு சீவி’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உன்ன நா பார்த்தா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
கிராமிய பின்னணியிலான பொழுதுபோக்கு திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் பொன். ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி ‘ எனும் திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த் , தார்னிகா, காளி வெங்கட், முனீஸ்காந்த், கல்கி ராஜா , ஜார்ஜ் மரியான், கு. ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். தமிழக கிராம பகுதியான உசிலம்பட்டியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ் த. செல்லையா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘உன்ன நா பாத்தா …சுத்துறேன் காத்தா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் யுக பாரதி எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார். கதையோட்டத்துடன் காதலையும் …ரம்மியத்தையும் … மெல்லிசையுடன் உருவாகி இருக்கும் இந்த பாடல்… அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.