சென்னை: நடிகர் ‘டெல்லி’ கணேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த திரைக்கலைஞர் ‘டெல்லி’ கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார்.
வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். கருணாநிதியின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார். தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “குணச்சித்திர நடிகர் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார் என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பன்மொழி திரைப்படங்களில் நடித்த ஆகச்சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர். அவரது இழப்பு கலைத்துறைக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி” என தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். சினிமா, மேடை நாடகம் எல்லை தாண்டி குருகுலம் போன்ற சமூக நலனுக்காகவும் குரல் கொடுத்த சிறந்த நற்பணி சீரிய நபர், அவரது மறைவு பேரிழப்பு “என குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல திரைப்பட மூத்த நடிகர் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
நாடக நடிகராக அறிமுகமாகி திரைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை தக்க வைத்திருந்த திரு.டெல்லி கணேஷ் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.