• Sat. May 31st, 2025

24×7 Live News

Apdin News

நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | Chief Minister Stalin, leaders, film industry pays tribute to actor Rajesh

Byadmin

May 30, 2025


சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ், உடல்​நலக் குறை​வால் சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 75. அவரது உடலுக்கு முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் அஞ்​சலி செலுத்​தினர். ஆளுநர் உட்பட பலரும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி​யில் கடந்த 1949-ம் ஆண்டு பிறந்​தவர் ராஜேஷ்.

1972-79 கால​கட்​டங்​களில் சென்​னை​யில் ஆசிரிய​ராக பணி​யாற்​றி​னார். இதற்​கிடையே, 1974-ம் ஆண்டு கே.​பாலசந்​தரின் ‘அவள் ஒரு தொடர்​கதை’ படத்​தில் நடிக​ராக அறி​முக​மா​னார். பின்​னர் ராஜ்கண்ணு தயாரிப்​பில் கே.​பாக்​ய​ராஜ் இயக்​கிய ‘கன்னி பரு​வத்​திலே’ படம் மூலம் கதா​நாயக​னாக அறி​முக​மா​னார்.

பின்​னர் குணச்​சித்​திர வேடங்​களில் நடிக்​கத் தொடங்​கி​னார். ‘அந்த 7 நாட்​கள்’, ‘அச்​சமில்லை அச்​சமில்​லை’, ‘சிறை’, ‘சத்​யா’, ‘மகாந​தி’, ‘விரு​மாண்​டி’, ‘யானை’ உட்பட 150-க்​கும் மேற்​பட்ட படங்​களில் நடித்​துள்​ளார். தமிழ் தவிர, தெலுங்​கு, மலை​யாள படங்​களில் நடித்​துள்​ளார். சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்ள இவர், சில படங்​களில் பின்​னணி குரலும் கொடுத்​துள்​ளார்.

கடந்த சில ஆண்​டு​களாக தனது யூ-டியூப் சேனலில், ஜோதிடர்​கள், மருத்​து​வர்​களை சந்​திக்​கும் நேர்​காணல் நிகழ்ச்​சிகளை நடத்தி வந்​தார். சமீபத்​தில் துபாய் சென்​றிருந்த ராஜேஷ், 2 நாட்​களுக்கு முன்பு சென்னை திரும்​பி​னார். இந்​நிலை​யில், அவருக்கு நேற்று திடீரென உடல்​நலக் குறைவு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, தனி​யார் மருத்​து​வ​மனைக்கு அழைத்து செல்​லப்​பட்​டார். அங்கு பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், அவர் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக தெரி​வித்​தனர்.

பின்​னர் அவரது உடல் ‘எம்​பாமிங்’ செய்​யப்​பட்​டு, சென்னை ராமாபுரத்​தில் உள்ள வீட்​டில் வைக்​கப்​பட்டது. ராஜேஷ் உடலுக்கு முதல்​வர் ஸ்டா​லின் அஞ்​சலி செலுத்​தி, குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் கூறி​னார். துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர் கே.என்​.நேரு, நடிகர்​கள் சத்​ய​ராஜ், பார்த்​திபன், எம்​.எஸ்​.​பாஸ்​கர் மற்​றும் ஏராள​மான திரை​யுல​கினர் அஞ்​சலி செலுத்​தினர்.

ஜூன் 1-ல் இறு​திச்​சடங்கு: மறைந்த ராஜேஷின் மனைவி கடந்த 2014-ம் ஆண்டு கால​மாகி​விட்​டார். அவர்​களுக்கு திவ்யா என்ற மகள், தீபக் என்ற மகன் உள்​ளனர். கனடா​வில் வசிக்​கும் திவ்​யா, தந்​தை​யின் மறைவு செய்தி அறிந்து சென்​னைக்கு வந்​து​கொண்​டிருக்​கிறார். இறு​திச்​சடங்கு ஜூன் 1-ல் நடை​பெற உள்​ளது. நடிகர் ராஜேஷ் மறைவுக்கு பல்​வேறு தலை​வர்​கள், திரை​யுல​கினர், இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: மூத்த தமிழ் நடிகர் ராஜேஷ் மறை​வால் ஆழ்ந்த வருத்​தம் அடைந்​தேன். அவரது குறிப்​பிடத்​தக்க பன்​முகத்தன்மை மற்​றும் பங்​களிப்​பு, பல தசாப்​தங்​களாக தமிழ் சினி​மாவை வளப்​படுத்​தி​யது. அவரது குடும்​பத்​தினர், நண்​பர்​கள், எண்​ணற்ற ரசிகர்​களுக்கு எனது இரங்​கல்​கள்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: நடிகர் ராஜேஷ் கருணாநிதி மீது அளவற்ற அன்​பும், மரி​யாதை​யும் கொண்டு விளங்​கி​னார். அவரை கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்​நாடு அரசு எம்​ஜிஆர் திரைப்​படம், தொலைக்​காட்சி பயிற்சி நிறுவன தலை​வ​ராக நியமித்​தோம். அவரது மறை​வால் வாடும் குடும்​பத்​தினர், திரைத்​துறை நண்​பர்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலை​யும், ஆறு​தலை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: அனை​வரிட​மும் அன்​பாக, இனிமை​யாக பழகக்​கூடிய​வர் அன்பு சகோ​தரர் ராஜேஷ். அவரது ஆன்மா இறைவன் திரு​வடி நிழலில் இளைப்​பாற பிரார்த்​திக்​கிறேன்.

ரஜினி​காந்த்: நெருங்​கிய நண்​பர் ராஜேஷின் மறைவு செய்தி அதிர்ச்​சி​யளிக்​கிறது. மிகுந்த மன வேதனையை தரு​கிறது. அரு​மை​யான மனிதர். அவரது ஆத்மா சாந்​தியடையட்​டும்.

மநீம தலை​வர் கமல்​ஹாசன்: அதி​கம் வாசிப்​ப​தை​யும், வாசித்​ததை சிந்​திப்​ப​தை​யும் வழக்​க​மாக கொண்​ட​வர் அன்பு நண்​பர் ராஜேஷ். தன் வாழ்​வின் இறு​திவரை உற்​சாக​மும், செயல்​பாடும் குறை​யாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்​தத்தை தருகிறது. இவ்​வாறு தெரி​வித்​துள்​ளனர்.

அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன், திக தலை​வர் கி.வீரமணி, இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் முத்​தரசன், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, பாமக செயல் தலை​வர் அன்​புமணி, நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், தென்​னிந்​தி​ய நடிகர்​ சங்​கம்​ சார்​பிலும்​ இரங்​கல்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



By admin