0
‘ பேட்ட’, ‘ ஜிகிர்தண்டா 2’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்களில் நடித்து, ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் விது கதையின் நாயகனாக முதன்முறையாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு, ’29’ என பெயரிடப்பட்டு, அதற்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
கதாசிரியரும் இயக்குநருமான ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’29 ‘என்ற படத்தில் விது , பிரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
ஒவ்வொருவரின் 29 ஆவது வயது என்பது வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய தருணம் என்பதால் அதனை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்புராஜ் – கார்த்திகேயன் சந்தானம் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இந்தப் படத்திற்கு ’29’ என பெயரிடப்பட்டு, அதற்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில், ” ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் குறிப்பாக ஆண்களின் வாழ்க்கையில் 29 ஆவது வயதை கடந்து முப்பதாவது வயதை தொட்டு விட்டால் இவர்களுடைய ஜாதகம் புறக்கணிக்கப்படும். இவர்களுடைய வேலைக்கான விண்ணப்பம் தள்ளுபடி ஆகும்.
திரைப்படத்துறையில் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொன்னால் வயதை காரணம் காட்டி அவர்களுடைய திரைக்கதையையும் வாய்ப்பையும் தவிர்ப்பார்கள். இப்படி வாழ்க்கையில் பல விடயங்கள் 29 வது வயதில் நடைபெறும். இதனை மையப்படுத்தி தான் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தின் திரைக்கதையை முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷிடம் சொன்னேன். கதை நன்றாக இருக்கிறது. ஆனால் எம்மால் இதில் நடிக்க இயலாது. எம்மை விட வயதில் குறைந்த இளைஞரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.
அதன் பிறகு நடிகர் விதுவை தெரிவு செய்து அவருக்கு பயிற்சி அளித்து இப்படத்தில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்.
பக்கத்து வீட்டு பையனின் கதை தான் இது. ஆனால் அதனை வித்தியாசமான கோணத்தில் விவரித்து இருக்கிறேன். இதனை அனைத்து தரப்பு ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.