0
தமிழ் சினிமாவில் நம்பிக்கை வழங்கும் வகையில் நட்சத்திர நடிகராக வளர்ச்சி பெற்று வரும் நடிகர் வெற்றி முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு ‘எனும் திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் படப்பிடிப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
‘கொன்றால் பாவம்’, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகும் ‘லஷ்மி காந்தன் கொலை வழக்கு’ எனும் திரைப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, லிசி அண்டனி, ‘பருத்திவீரன்’ சரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், இளவரசு, கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.
கிரைம் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை 2 M சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வி. சபரீஷ் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”லட்சுமி காந்தன் கொலை வழக்கு என்பது இயல்பாக கடந்து செல்லக்கூடிய குற்றச் சம்பவம் அல்ல. தமிழ் சினிமாவின் வரலாற்றில் நடைபெற்ற அந்த உண்மை சம்பவத்தை – வித்தியாசமான கோணத்தில் விவரிக்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது ” என்றார்.