0
திரைப்பட இயக்குநரும், தமிழின உணர்வாளரும், நடிகருமான வ.கௌதமன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்தியேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் வ.கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், வ.கௌதமன், பூஜிதா, சமுத்திரக்கனி, மன்சூர் அலிகான், ‘ஆடுகளம்’ நரேன், ‘பாகுபலி’ பிரபாகர், மதுசூதனராவ், சாய் தீனா, சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி, ‘நிழல்கள்’ ரவி, இளவரசு , ‘தலைவாசல்’ விஜய், ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வெற்றிவேல் மகேந்திரன் மற்றும் கோபி ஜெகதீஸ்வரன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சாம்.சி.எஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கும் இத்திரைப்படத்தை விகே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் முதல் காட்சி – டீசர்- பாடல்கள் ஆகியவை வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே ‘கனவே கலையாதே’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநரும், ‘மகிழ்ச்சி’ படத்தின் மூலம் நடிகராகவும் உயர்ந்த வ.கௌதமன் – சிறிய இடைவெளிக்குப் பிறகு கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கிறார்.
இந்தத் திரைப்படம் அவருடைய தேசிய தமிழின உணர்வாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.