0
தமிழ் சினிமாவின் மூத்த நடிகை மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70.
மகேந்திரன் இயக்கத்தில், 1979ம் ஆண்டு வெளியான ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தில் விஜயனின் தம்பியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மனோரமாவின் மகன் பூபதி.
இந்த படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
விசு இயக்கிய ‘மணல் கயிறு’, ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘ராணித் தேனீ’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
20க்கும் மேற்பட்ட படங்களில் நாயகன், வில்லன், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த பூபதியால், மாறிவந்த திரையுலகில் தனக்கான இடத்தை தக்கவைக்க முடியவில்லை.
இந்நிலையில், மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து, மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் சென்னை, தி.நகர் நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், தனது அம்மா மனோரமா பயன்படுத்திய கட்டிலிலேயே இன்று (அக்.23) காலை பூபதியின் உயிர் பிரிந்தது.
பூபதி உடலுக்கு, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
பூபதியின் இறுதிச் சடங்கு நாளை (அக்.24) மதியம் 3 மணிக்கு மேல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.