நாள்: செப்டம்பர் 20- 21, 2025 (சனிக்கிழமை- ஞாயிற்றுக்கிழமை) நேரம்- நள்ளிரவு 1.15.
கன்னியாகுமரியிலிருந்து 16 கடல் மைல்கள் (சுமார் 29 கிமீ) தூரத்தில் தென்கடலில், கடும் அலைகளுக்கு நடுவே மிதந்துகொண்டிருந்தார் சிவமுருகன். கடலுக்கு மீன்பிடிக்க நண்பர்கள் மற்றும் சகோதரருடன் வந்த அவர், படகிலிருந்து தவறி கடலில் விழுந்து 5 மணிநேரம் கடந்திருந்தது.
“என் கண் முன்னே, ஒரு கடல் மைல் தொலைவில் (1.8 கிமீ) சில படகுகள் என்னைத் தேடிக்கொண்டிருந்தன. தொண்டைக்குள் கடல் நீர் சென்று, புண்ணாகி இருந்தது, உதவிகேட்டு கத்த முடியவில்லை. அமாவாசை இரவில், கடல் நீரிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு நான் தவிப்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை. சில மணிநேரங்களில் அந்த படகுகள் கரைக்கு திரும்பிச் சென்றன. நான் அங்கேயே மிதந்து கொண்டிருந்தேன்” என பிபிசி தமிழிடம் அன்று நடந்ததை விவரித்தார் சிவமுருகன்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் எனும் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சிவமுருகன்.
கடந்த மாதம் 20ஆம் தேதி, கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, நண்பர்கள் மற்றும் சகோதரர் என 16 பேருடன் ஒரு விசைப் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற சிவமுருகன், கடலில் தவறி விழுந்து, தத்தளித்து, 26 மணிநேரங்களுக்குப் பிறகே மீட்கப்பட்டார்.
நடந்தது என்ன?
பட மூலாதாரம், Getty Images
இந்தச் சம்பவத்திற்கு 2 வாரங்கள் முன் தான் முதல்முறையாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லத் தொடங்கியிருந்தார் சிவமுருகன்.
“வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு செட்டிகுளத்தில் இருந்து கிளம்பி, 4.30 மணிக்கு சின்னமுட்டத்திலிருந்து மீன்பிடிக்க படகில் புறப்படுவோம். சனிக்கிழமையும் (செப்டம்பர் 20) அப்படிச் சென்று, வலை விரித்து, மீன் பிடித்துவிட்டு, மாலை 6 மணிக்கு கரைக்குத் திரும்பத் தொடங்கினோம்.”
“இரவு 8 மணிக்கு, சிறுநீர் கழிக்கலாம் என படகின் ஒரு ஓரத்திற்கு வந்தேன். ஜிபிஎஸ் கருவி மூலம் கடைசியாகப் பார்த்தபோது, நாங்கள் கன்னியாகுமரி கரையிலிருந்து 15 கடல் மைல்கள் தொலைவில் இருந்தோம். அப்போது திடீரென ஒரு பெரிய அலை படகைத் தாக்கியது. படகு குலுங்கியதும், நான் நிலைதடுமாறி கடலில் விழுந்துவிட்டேன். விழுந்ததும், நீச்சல் அடித்து, தண்ணீருக்கு மேலே வந்து கத்தினேன். ஆனால், படகின் எஞ்சின் சத்தத்தில் யாருக்கும் எதுவும் கேட்கவில்லை.” என்கிறார் சிவமுருகன்.
தொடர்ந்து பேசிய அவர், “10-15 நிமிடத்திற்கு மேல் ஆகியும் நான் திரும்பி வராததால், என் தம்பி வெளியே வந்து என்னைத் தேடியுள்ளான். நடந்ததைப் புரிந்துகொண்டு, சத்தம் போட்டு அனைவரையும் அழைத்து, ஜிபிஎஸ் கருவி மூலம் வந்த பாதையை கணக்கிட்டு, படகை திருப்பிக் கொண்டுவந்து என்னைத் தேடினார்கள். ஆனால், அதற்குள் அலைகள் என்னை 1 கடல் மைல் தூரம் வரை இழுத்துச் சென்றிருந்தன”
“அவ்வளவு பெரிய கடலில், அதுவும் அமாவாசை இரவில், தலையை நீட்டிக்கொண்டு, கைகளை உயர்த்தி கத்திக்கொண்டிருந்த என்னை அவர்களால் பார்க்க முடியவில்லை. டீசல் பிரச்னை காரணமாக அவர்கள் திரும்பிவிட்டார்கள். மீண்டும் சில படகுகளுடன் வந்து என்னை தேடினார்கள். படகுகளின் விளக்குகளைப் பார்த்து கத்தினேன், கைகளை அசைத்தேன், சில மணிநேரங்களில் அவர்கள் திரும்பிச் செல்லும்வரை அதையே செய்துகொண்டிருந்தேன்.” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
அதிகமாக கடல் நீர் வாய்க்குள் சென்றதால், தொண்டையில் புண்கள் ஏற்பட்டும், முகத்தில் தொடர்ந்து அலைகள் அடித்ததால் தோல் உரிந்தும், கண்களில் உப்பு நீர் பட்டு அதிக எரிச்சல் ஏற்பட்டும் அவதிப்பட்டதாகக் கூறுகிறார் சிவமுருகன்.
“அந்த இரவில் சுற்றி எந்த வெளிச்சமும் இல்லாத அந்த நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் இருந்த ஒரே எண்ணம், எப்படியாவது கரைக்கு சென்றுவிட வேண்டும், உயிர் இங்கேயே போய்விட்டால், குடும்பம் என்னவாகுமென்று கவலை. நீரில் எளிதாக மிதக்கும் வகையில், எடையைக் குறைக்க அணிந்திருந்த டி-ஷர்டை கழற்றி எறிந்தேன். அப்போது தான் உடலெங்கும் ஏதோ ஒன்று கடிக்கத் தொடங்கியது” என்று கூறிய அவர் தொடர்ந்து பேசினார்.
“புழுக்களைப் போன்ற ஜெல்லி மீன்கள் அவை. உடலில் ஒட்டிக்கொள்ளும், கொஞ்சம் விட்டால் தோலில் துளை போட்டு விடும் என ஊரில் சிலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்தேன். தொடர்ந்து கை, கால்களை அசைத்து மிதந்து கொண்டே இருந்ததால், உடல் சோர்வடையத் தொடங்கியது. சில சமயங்களில் நீரில் மூழ்கினாலும், தன்னிச்சையாக நீச்சல் அடித்து மேலே வந்துவிடுவேன். மறுநாள் காலை (செப்டம்பர் 21) சூரியனைக் கண்டதும், எப்படியும் நீந்தி கரையை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்தது.” என்கிறார்.
‘தென்கடல் மிகவும் ஆபத்தானது’
பட மூலாதாரம், Getty Images
கரையைத் தேடி நீந்தத் தொடங்கிய அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. எந்தத் திசையில் நீந்தினாலும் கடல் அலைகள் மற்றும் காற்று அவரை வேறு திசையில் தள்ளியது. பிடிப்பதற்கு ஒரு கட்டை கூட கண்ணில் தென்படாத நிலையில், அலைகளால் அங்குமிங்கும் வீசப்பட்ட அவர், நீந்தும் முயற்சியைக் கைவிட்டார்.
“எப்படி நீந்தினாலும் ஒரே இடத்தில் தான் இருக்கிறேன் என்று தோன்றியது. பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. குளிரில் கால்கள் மரத்துப் போயிருந்தன. சூரிய அஸ்தமனம் முடிந்து, இருள் சூழத் தொடங்கியதுபோது, உடலில் இருந்த தெம்பும், மன தைரியமும் மொத்தமாக போயிருந்தது. தென்கடலில் காணாமல் போன யாரும் பிழைக்க மாட்டார்கள் என ஏன் சொல்கிறார்கள் எனப் புரிந்தது. இதற்கு மேலும் அவதிப்படமுடியாது என தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். அப்போது எனக்கு தெரியாத ஒன்று, ஊருக்குள் நான் இறந்துவிட்டேன் என அறிவித்திருந்தார்கள். என் உடலாவது கிடைக்காதா என குடும்பத்தினர் அழுது கொண்டிருந்தார்கள் என்பது” என்றார்.
“ஆனால், மூழ்க முயற்சி செய்தாலும், என்னால் மூச்சை அடக்க முடியாமல், மேலே வந்துகொண்டே இருந்தேன். எனவே அதிக கடல் நீரை குடித்தேன். இந்த முறை நிச்சயம் மூழ்கி விடலாம் என நினைக்கும்போது, தூரத்தில் ஒரு ஒளி தெரிந்தது.” என்கிறார் சிவமுருகன்.
சிவமுருகன் பிழைத்து வந்தது ஒரு அதிசயம் தான் எனக் கூறுகிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர் மற்றும் எழுத்தாளர் பவுலின். 50 வருடங்கள் மீன்பிடி தொழிலில் அனுபவம் கொண்ட இவர், பிற கடல் பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்கடல் மிகவும் ஆபத்தானது எனக் கூறுகிறார்.
“ராமநாதபுரத்தின் சேதுக்கரை, கீழக்கரை தொடங்கி குமரிக்கரை வரை விரிந்திருக்கிறது தமிழகத்தின் தென்கடல். அதில் ஒப்பீட்டளவில் ஆழம் குறைவு, ஆனால் காற்று அதிகமாக வீசும், ஆக்ரோஷமான சூழல் நிலவும். எனவே அலைகளின் உயரம் அதிகமாக இருக்கும். அத்தகைய கடற்பகுதியில் தவறி விழுந்த ஒருவர், 24 மணிநேரம் கடந்து உயிர்பிழைப்பது என்பது மிகவும் அரிது. காரணம், கடலின் அதீத குளிர் உடலை உருக்கிவிடும். கால்கள் மரத்துப் போய் மேற்கொண்டு மிதக்க முடியாமல், மூழ்கத் தொடங்கிவிடுவோம். உடல் சோர்வடைந்து கடல் நீரைக் குடிக்கத் தொடங்குவார்கள், அது உடலில் நீர் வற்றலை ஏற்படுத்தும்.” என்று கூறுகிறார்.
ஆழ்கடலின் நீரோட்டத்தால் எவ்வளவு நீந்தினாலும் கரையைக் கண்டறிவது கடினம் எனக்கூறும் பவுலின், “ஒரு கட்டை போன்று ஏதேனும் கிடைத்தால் அதைப் பிடித்துக்கொண்டே மிதப்பது நீண்ட நேரம் மிதக்க உதவும். ஆனால், 24 மணிநேரத்துக்கும் மேல் வெறுமனே கை, கால்களை அசைத்துக்கொண்டே மிதப்பது மிகவும் கஷ்டம். உடல் ஒரு கட்டத்தில் தளர்ந்து, மூழ்கி விடும்” என்கிறார்.
கடல் நீரில் தவறி விழுந்தால் ஏற்படும் பிரச்னைகள்
பட மூலாதாரம், Getty Images
கடல் நீரில் அதிக உப்பு உள்ளது. மனிதர்கள் கடல் நீரைக் குடிக்கும்போது, மனித உடலின் செல்கள் தண்ணீரையும் உப்பையும் உறிஞ்சிக் கொள்கின்றன. மனித சிறுநீரகங்கள் உப்பு நீரை விட குறைவான உப்புத்தன்மை கொண்ட சிறுநீரை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். எனவே, கடல் நீரைக் குடிப்பதன் மூலம் உறிஞ்சப்படும் அதிகப்படியான உப்பை அகற்ற, நீங்கள் குடித்ததை விட அதிக தண்ணீரை சிறுநீராக கழிக்க வேண்டும். இறுதியில், நீங்கள் நீரிழப்பால் உயிரிழக்க நேரிடும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் கடல் நீரைப் பருகக் கூடாது.
அதேபோல, குளிர்ந்த நீரில் (15°C க்கும் குறைவான எந்த வெப்பநிலையிலும்) இருக்கும்போது, உங்கள் உடல் ஒருவித அதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும். இது நடந்தால், சுவாசம் மற்றும் இயக்கத்தின் மீதான உங்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். குளிர்ந்த நீரால் ஏற்படும் அதிர்ச்சி உங்கள் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை விரைவாக அதிகரிக்கச் செய்து, மாரடைப்பை ஏற்படுத்தும்.
‘எந்த மாதிரியான நீர்நிலையில் தவறி விழுந்தாலும் முதலில் பதற்றப்படாமல் மிதப்பது மிகவும் முக்கியம், அதோடு நிதானமாக சுவாசிக்க முயற்சி செய்யுங்கள். தேவைப்பட்டால் மிதப்பதற்கு உதவ உங்கள் கைகளையும் கால்களையும் மெதுவாக நகர்த்தலாம். நிலைத்தன்மையை மேம்படுத்த உங்கள் கைகளையும் கால்களையும் விரிக்கவும், உங்கள் கால்கள் மூழ்கினாலும் பரவாயில்லை. முழு உடலும் மிதக்கவில்லை என்றாலும், நீருக்கு மேலே தலை பின்னோக்கி சாய்ந்து, முகம் மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும்’ என பிரிட்டனின், ராயல் நேஷனல் லைஃப் போட் இன்ஸ்டிடியூஷன் (RNLI) அறிவுறுத்துகிறது.
தான் பார்த்த அந்த ஒளி ஒரு படகின் முகப்பு விளக்கு என்பதைப் புரிந்துகொண்ட சிவமுருகன், அதன் பிறகு நடந்தவற்றை விவரித்தார்.
“முழு பலத்தையும் திரட்டி கைகளை அசைத்தேன். எப்படியோ அவர்களும் என்னைப் பார்த்துவிட்டார்கள். என்னை நோக்கி படகைத் திருப்பினார்கள். நானும் அவர்களை நோக்கி நீந்தினேன். கடலில் இருந்து யார் என்னை தூக்கினார்கள், என்ன பேசினார்கள் என ஒரு 30 நிமிடத்திற்கு ஒன்றும் புரியவில்லை. டீ, பிஸ்கட்டுகளை சாப்பிட்ட பின் தான் கண்களைத் திறக்க முடிந்தது. கூத்தன்குழி கிராமத்தைச் சேர்ந்த அருளப்பன் என்பவரின் படகு அது. அவரும் அவரது மீனவக் குழுவும், கடலில் விரித்திருந்த வலையை எடுக்க வந்திருந்தார்கள்.” என்கிறார்.
கடலிலிருந்து மீட்கப்பட்ட சிவமுருகனுக்கு, கரைக்கு வந்தபிறகு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
சிவமுருகனுக்கு திருமணமாகி ஐந்து வயதில் சிவராதேஷ் என்ற மகன் இருக்கிறார்.
“கடந்த ஒரு மாதத்தில், ஒருமுறை கூட கடலில் கால் வைக்கவில்லை. இனி கடலுக்கு செல்லக்கூடாது என மகன் தொடங்கி குடும்பத்தினர் அனைவரும் கூறிவிட்டார்கள். இன்னும் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எனக்கு இப்படி ஆன பின்பு எனது சகோதரன் வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிட்டான்.”
“அவ்வப்போது கரையில் நின்று கடலைப் பார்ப்பேன். உடலில் ஜெல்லி மீன்கள், தலையைச் சுற்றி மின்மினிப் பூச்சிகள் என அந்த இரவில் மிதந்தவாறு நான் பார்த்த கடல் தான் இப்போதும் எனக்குத் தெரிகிறது. அந்தக் காட்சியை மறக்கும் வரை என்னால் கடல் நீரில் கால்களை நனைக்க முடியாது.” என்கிறார் சிவமுருகன்.
(தற்கொலை எண்ணங்கள், மன சோர்வு உள்ளிட்டவை இருந்தால் தமிழக அரசின் 104 என்ற இலவச உதவி எண்ணை அழைத்து ஆலோசனைகளும், உதவியும் பெறலாம்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
