• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

நடுநிலையான தீர்ப்பு வழங்க திருக்குறள் வழிகாட்டியாக திகழ்கிறது: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் பெருமிதம் | Thirukkural serves as a guide to giving impartial verdict hc Chief Justice

Byadmin

Feb 23, 2025


நாகர்கோயில்: நடுநிலையான தீர்ப்பு வழங்க நீதித்துறைக்கு வழிகாட்டியாக திருக்குறள் திகழ்கிறது என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தெரிவித்தார்.

பட்டியலின மற்றும் மலைவாழ் பிரிவினரின் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றத் திறப்பு விழா கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பி.கார்த்திகேயன் வரவேற்றார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் சிறப்பு நீதிமன்றத்தை திறந்துவைத்துப் பேசியதாவது: இந்த நீதிமன்றம் அமைந்திருப்பது சாதாரணக் கட்டிடம் அல்ல. இது அனைவருக்குமான சம நீதியை குறிக்கும் ஓர் அடையாளம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பட்டியலின, மலைவாழ் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கு இந்த நீதிமன்றம் உதவிபுரியும். அவர்களது உரிமைகளைக் காப்பதற்கான சட்டம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது. மேலும், அவர்களின் உரிமைகளைக் காப்பதற்கு இது ஒரு கருவியாகவும் விளங்குகிறது.

சமூகநீதி மேம்பாடு: மனிதநலப் பாதுகாப்பிலும், அனைவருக்கும் சமநீதி வழங்கப்படுவதிலும் நம் அனைவருக்கும் ஒருங்கிணைந்த கூட்டு பொறுப்பு உள்ளது என்பதை இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டதன் மூலம் சமூக நீதியை மேம்படுத்துவதில் நாம் சிறந்த முன்னேற்றம் அடைந்து வருகிறோம் என்பதை உறுதிபடுத்த முடிகிறது. சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் பயணத்தில் இது ஒரு மைல்கல்லாகும்.

திருக்குறளின் 111-வது குறளான ‘தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்’ என்பது நீதித்துறையின் நடுநிலையைக் குறிப்பிடுகிறது. அதாவது, பகைவர், நண்பர், அயலார் ஆகியோரிடத்தில் வேறுபாடின்றி, சம நீதி பின்பற்றப்படுமானால், அது நடுநிலைமையாகும் என்று நடுநிலை குறித்து தெளிவாக விளக்குகிறது. இன்றைய நவீனகாலத்தில் சமூக நீதியின் முன்னோடியாகவும், நீதித்துறையின் நடுநிலையான தீர்ப்புக்கு வழிகாட்டியாகவும் திருக்குறள் திகழ்கிறது. நீதி வழங்குவதில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் வழிகாட்டி விட்டார். ஒவ்வொரு பிரிவு மனிதர்களுக்கும் சமவாய்ப்பு கிடைத்தால், அதுதான் சிறந்த அறமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நீதிபதிகள் நிஷாபானு, அனிதா சம்பத், ஜெகதீஷ் சந்திரா, விக்டோரியா கவுரி, வடமலை, குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, எஸ்.பி. ஸ்டாலின், நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெயகுமார், செயலாளர் விஸ்வராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் சாமுவேல் பெஞ்சமின் நன்றி கூறினார்.



By admin