• Thu. Apr 3rd, 2025

24×7 Live News

Apdin News

நத்தமாடிப்பட்டி ஜல்லிக்கட்டு: வீரர்களை உற்சாகப்படுத்திய நடிகர்கள் விக்ரம், துஷாரா | Actors Vikram and Thushara cheered on the athletes during the Jallikattu at Nathamadipatti

Byadmin

Mar 31, 2025


நத்தம்: நத்தம் அருகே நத்தமாடிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் பிடித்து பரிசுகளை பெற்றனர். நடிகர் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் பங்கேற்று மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே நத்தமாடிப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. ஆன்லைன் மூலம் 742 காளைகள், 300 மாடுபிடிவீரர்கள் பதிவு செய்யப்பட்டு, மருத்துவபரிசோதனைக்கு பிறகு களம் இறங்கப்பட்டனர். திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றேன.

முதலில் வாடிவாசல் வழியாக கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதன் பிறகு உள்ளூர் காளைகள், வெளியூர் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கி பரிசுகளை உடனுக்குடன் பெற்றனர். வீரர்களின் சிக்காமல் சீறிப்பாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சைக்கிள், குத்துவிளக்கு, அண்டா, கட்டில், குக்கர், சேர் உள்ளிட்ட அநேக பரிசுகளை வீரர்கள் பெற்றுச்சென்றனர்.

ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 25 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமுகாமில் உடனுக்குடன் சிகிச்சையளிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

வீரர்களை ஊக்குவித்த நடிகர்கள்: நத்தமாடிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் நடிகர் விக்ரம், நடிகை துஷாராவிஜயன் ஆகியோர் பார்வையிட்டனர். நடிகர் விக்ரம் பேசுகையில், “முதன்முதலாக ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்க்கிறேன். நமது பாரம்பரிய போட்டியை பார்ப்பதில் மகிழ்ச்சி, படத்தில் நான் தான் ‘வீரதீரசூரன்’ஆனால் இங்கு வந்து பார்த்தால் களத்தில் உள்ள அனைவருமே ‘வீரதீரசூரர்’கள் தான்” என்றார்.



By admin