நெல்லை: ‘நன்றி கெட்டவர்கள் மத்தியில் நான் ஏன் இருக்க வேண்டும்?’ என பாஜகவில் இணைந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாங்குளத்தை சேர்ந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, இவரை ‘ராதா’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமானார்.
1993-ல் மதிமுகவிலும், பின்னர் அதிமுகவிலும் இணைந்தார். பின்னர், திமுக செய்தி தொடர்பாளராக இருந்தார். 2022-ம் ஆண்டு திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியை விட்டு விலகினார். இந்நிலையில், நெல்லையில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
அப்போது அவர் கூறும்போது, “தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று, 40 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கு தொடுத்து தீர்வு கண்டுள்ளேன். தமிழகத்தில் நெய்யாறு, அடவிநயினார், செண்பகவல்லி, அச்சங்கோயில் – பம்பை – வைப்பாறு, முல்லை பெரியாறு, ஆழியாறு, பாண்டியாறு புன்னம்புழா, காவிரி என 19 நதிநீர் பிரச்சினைகள் உள்ளன.
இவற்றுக்கு மத்திய அரசால்தான் தீர்வு காண முடியும். திமுகவிலிருந்து நான் விலகவில்லை. விலக்கப்பட்டேன். விளக்கம் கூட கேட்கவில்லை. திமுக சட்டப்படி பார்த்தால் நான் அங்கு உறுப்பினர்தான். நன்றி கெட்டவர்கள் மத்தியில் நான் ஏன் இருக்க வேண்டும்? எனது உழைப்பை திமுக வரலாறு சொல்லும்” என்று அவர் தெரிவித்தார்.