துபையில் நடந்த விமானக் கண்காட்சியின்போது இந்திய போர் விமானமான தேஜஸ் கீழே விழுந்து நொறுங்கியதில் விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால் உயிரிழந்தார்.
இந்த விபத்து துபையின் அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணி அளவில் நேர்ந்தது. இந்த விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. தேஜஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிவது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
விமானி நமான்ஷ் ஸ்யால் இமாச்சல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
நமான்ஷின் புகைப்படத்தை இணைத்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு. அதில், “துபை விமானக் கண்காட்சியில் நடந்த தேஜஸ் விமான விபத்தில், இமாச்சல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த நமான்ஷ் ஸ்யாலின் மரணச் செய்தி சோகமானதாகவும், மனதை நொறுக்குவதாகவும் அமைந்திருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
“நம் நாடு தைரியம் மிக்க, அர்ப்பணிப்பு நிறைந்த, துணிச்சலான ஒரு விமானியை இழந்துவிட்டது. துயரில் வாடும் அவரது குடும்பத்துக்கு நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்யால் அவர்களின் அடங்காத வீரம், அர்ப்பணிப்பு மற்றும் தேச சேவைக்கான அர்ப்பணிப்புக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலி” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விபத்து பற்றி இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில், “இந்திய விமானப்படையைச் சேர்ந்த தேஜஸ் என்ற ஒரு விமானம், ‘ஏரோபேட்டிக்’ (Aerobatic) காட்சியின்போது விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் விமானி தன் உயிரை இழந்தார். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது; இந்த துயரமான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய, விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிடப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் கண்காட்சி நிகழ்வின்போது தேஜஸ் விமானம் (நவம்பர் 20ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்)
விமான கண்காட்சியின் வீடியோவைத் தேடிய தந்தை
முன்னணி பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ், நமான்ஷின் தந்தை ஜகன் நாத் ஸ்யாலிடம் பேசியது. அந்தப் பத்திரிகையிடம் பேசிய ஜகன் நாத் ஸ்யால், “கடைசியாக நான் என் மகனுடன் வியாழக்கிழமை பேசினேன். விமான கண்காட்சியை தொலைக்காட்சியிலோ யூ-டியூபிலோ பார்க்கச் சொல்லியிருந்தான்” என்று கூறினார்.
மேலும், “வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு விமான கண்காட்சி வீடியோவை நான் யூ-டியூபில் தேடிக்கொண்டிருந்தேன். அதன்பின் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது பற்றிய செய்தியைப் பார்த்தேன். உடனே நான் என் மருமகளை அழைத்து என்ன நடந்தது என்று விசாரிக்கச்சொன்னேன். ஏனெனில், அவரும் ஒரு விங் கமாண்டர் தான். சில நிமிடங்களிலேயே விமானப் படையைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அப்போதே ஏதோ சரியில்லை என்று உணர்ந்தேன்” என்றும் அவர் கூறினார்.
ஜகன் நாத் ஸ்யால் ஒரு ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின்படி ஜகன் நாத் ஸ்யால், அவரது மனைவி வீனா ஸ்யால் இருவரும் தற்போது கோவையில் தங்கள் மகன் நமனின் வீட்டில் இருக்கிறார்கள்.
தங்கள் பேத்தி ஆர்யா ஸ்யாலை பார்த்துக்கொள்வதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு காங்ராவில் இருந்து கோவை வந்ததாக அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரகைக்குத் தெரிவித்தார். நமனின் மனைவி கொல்கத்தாவில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
2009ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அகாடெமியில் இருந்து தேர்ச்சி பெற்று ராணுவத்தில் இணைந்தார் நமான்ஷ் ஸ்யால். அவர் படிப்பில் மிகவும் சிறந்தவர் என அவரது தந்தை கூறினார்.
“இந்த சம்பவம் பற்றி அறிவிக்க வந்த விமானப் படை அதிகாரியிடம் என் மகனின் உடல் எப்போது வரும் என்று கேட்டேன். அவரால் உறுதியாக ஒரு நேரத்தைச் சொல்ல முடியவில்லை. ஆனால் மீதமுள்ள நடைமுறைகள் முடிய இரண்டு நாள்கள் ஆகும் என்று கூறினார்” என நமான்ஷின் தந்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதி எம்பி-யான அனுராக் தாக்கூர் தன் வருத்தத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். “துபை கண்காட்சியில் நடந்த தேஜஸ் விமான விபத்தில் இமாச்சல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த நமான்ஷ் ஸ்யால் அவர்கள் உயிரிழந்த செய்தி பெரும் வலியை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் எழுதியிருந்தார்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் தன் எக்ஸ் பக்கத்தில், “துபை விமான கண்காட்சியில் ஏரோபேட்டிங் காட்சியின்போது ஒரு தைரியமான இந்திய விமானப்படை விமானி உயிரிழந்த செய்து பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வருத்தத்தில் வாடும் அவருடைய குடும்பத்துக்கு என்னுடைய அனுதாபங்கள். இந்தத் தருணத்தில் இந்த மொத்த தேசமும் அவருடைய குடும்பத்துடன் நிற்கும்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் சௌஹான் மற்றும் இந்திய ராணுவத்தின் அனைத்து நிலை அதிகாரிகளும் இந்த தேஜஸ் விமான விபத்து நிகழ்வுக்கு தங்கள் அஞ்சலியைத் தெரிவித்திருக்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஒற்றை எஞ்சின் கொண்ட தேஜஸ் போர் விமானம் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் நிறுவனத்தால் முழுக்கவும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘தேஜஸ்’
ஒற்றை எஞ்சின் கொண்ட தேஜஸ் போர் விமானம் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் நிறுவனத்தால் முழுக்கவும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
இந்த விமானம் தொலைதூரத்தில் உள்ள எதிரி விமானங்களைக் குறிவைக்கும் திறன் கொண்டது. மேலும் எதிரி ரேடாரைத் தகர்க்கும் திறனையும் பெற்றுள்ளது. இது, அதிக எடையுடைய சுகோய் விமானத்துக்கு இணையான அளவு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் ஏந்தும் திறன் கொண்டது.
2004ம் ஆண்டு முதல் மேம்படுத்தப்பட்ட F404-GE-IN20 எஞ்சினை தேஜஸ் விமானம் பயன்படுத்தி வருகிறது. தேஜஸ் மார்க் 1 ரக விமானம் F404 IN20 எஞ்சினைப் பயன்படுத்துகிறது.
மார்க் 1ஏ ரக விமானம் அதே எஞ்சினைப் பயன்படுத்தும். அதேசமயம் எதிர்காலத்தில் மார்க் 2 ரக விமானம் இன்னும் சக்தி வாய்ந்த F414 INS6 எலக்ட்ரிக் எஞ்சினைப் பயன்படுத்தும்.
தேஜஸ் போர் விமானம் சுகோய் போர் விமானங்களை விட எடை குறைவானவை. எட்டு முதல் ஒன்பது டன் வரை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. அவை மேக் (mach) 1.6 முதல் 1.8 வரை, அதாவது ஒலி வேகத்தில், 52,000 அடிவரை உயரத்தில் பறக்கக்கூடியவை.
மின்னணு முறையில் ஸ்கேன் செய்யப்படும் அதிர்வெண் ரேடார் (Electronically-Scanned Radar), கண் காணாத தூரத்தைக் கடந்தும் தாக்கும் திறன் கொண்ட BVR ஏவுகணைகள், மின்னணு போரியல் அமைப்பு (Electronic Warfare Suite), மற்றும் வானில் எரிபொருள் நிரப்பும் வசதி (Air-to-Air Refuelling) உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தேஜஸ் விமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 97 தேஜஸ் விமானங்களை வாங்குவதற்காக இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டது. 2027 முதல் அந்த விமானங்கள் பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்படும்.
முன்னதாக, 2021ம் ஆண்டு இவ்விரு தரப்புகளுக்கு இடையே 83 தேஜஸ் விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 2024ம் ஆண்டிலிருந்து டெலிவரி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஞ்சின்கள் போதுமான அளவு இல்லாததால் அது தாமதமானது.