படக்குறிப்பு, இவை சாதாரண கற்களைப் போல தோன்றலாம், ஆனால் அவை மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதிநவீன கருவிகளாக இருந்தன, அவை மிகுந்த திறமையுடனும் துல்லியத்துடனும் செய்யப்பட்டன.கட்டுரை தகவல்
வடமேற்கு கென்யாவில் நடந்த ஒரு தொல்பொருள் ஆய்வில், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் கண்டுபிடிப்பாளர்களாக இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
நமோரோடுகுனன் என்ற தொல்பொருள் தளத்தில் 2.75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் 3,00,000 ஆண்டுகளுக்கு தொடர்ந்து கல் கருவிகளைப் பயன்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முந்தைய சான்றுகள், ஆதி மனித கருவிகளின் பயன்பாடு ஒழுங்கற்றதாக இருந்ததாகவும், கருவிகள் அவ்வப்போது தோன்றி, பின்னர் விரைவாக பயன்பாட்டில் இருந்து மறைந்ததாகவும் தெரிவிக்கின்றன.
நமோரோடுகுனன் கண்டுபிடிப்பு, இந்த தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான தலைமுறைகள் வழியாக மனிதர்களுக்கு கடத்தப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் முதல் கண்டுபிடிப்பாகும்.
நீண்டகாலத்திற்கு நடைமுறையில் இருந்துள்ளது
‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ இதழில் இந்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் பிரவுனின் கூற்றுப்படி, “இந்த கண்டுபிடிப்பு, மனித பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நமது புரிதலில் ஒரு தீவிரமான மாற்றத்திற்கான வலுவான ஆதாரங்களை வழங்குகிறது.”
“கருவிகளின் பயன்பாடு என்பது திடீர் திடீர் என்று நிகழ்ந்து பின்னர் மறைந்திருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். அது 3,00,000 ஆண்டுகள் ஒரே மாதிரியாக இருப்பதைக் காணும்போது, அதை நம்ப முடியவில்லை” என்று அவர் கூறினார்.
“அதன் பயன்பாடு நீண்டகாலத்திற்கு நடைமுறையில் இருந்துள்ளது. மனிதர்கள் மற்றும் மனித மூதாதையர்களிடையே, அந்தக் கருவி பயன்பாடு எங்கள் கணிப்பை விட மிகவும் சீக்கிரமாக தொடங்கியிருக்கலாம், தொடர்ச்சியாகவும் இருந்திருக்கலாம்.”
பட மூலாதாரம், David Braun
படக்குறிப்பு, அந்தக் கல் கருவிகள் மிகவும் கூர்மையாக இருந்தன.
நமோரோடுகுனானில் 10 ஆண்டுகள் பணியாற்றிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், ஆற்றுப் படுகைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பாறைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட 1,300 கூர்மையான ஃபிளேக்-குகள், ஹாம்மர் கற்கள் மற்றும் கல் கருவிகளைக் கண்டுபிடித்தனர். இவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்படும் செயல்முறை ‘ஓல்டோவன்’ (Oldowan) என்று அழைக்கப்படுகிறது.
இந்தச் செயல்முறை, கல் கருவிகளை உருவாக்குவதற்கு முதன்முதலில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட வழியாகும்.
ஒரே மாதிரியான கருவிகள் மூன்று வெவ்வேறு அடுக்குகளில் காணப்படுகின்றன. அந்த கருவி எவ்வளவு பழையதோ, அதற்கு ஏற்ற ஆழத்தில் அடுக்கும் உள்ளது.
பிரேசிலில் உள்ள சாவோ பாலோ பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவின் மூத்த புவியியலாளர், முனைவர் டான் பால்கு ரோலியர் கருத்துப்படி, “பல கற்கள் அவற்றின் தரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. இது ஆதி கண்டுபிடிப்பாளர்கள் அறிவார்ந்தவர்கள் மற்றும் தங்களின் தேவை என்ன என்பதைப் புரிந்துகொண்டே அவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் குறிக்கிறது.”
“இந்த தொல்பொருள் தளத்தில் நாங்கள் காண்பது, அவர்களுக்கு இருந்த வியக்கத்தக்க அளவிலான நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகிறது.” என அவர் கூறுகிறார்.
கென்யாவின் தேசிய அருங்காட்சியகங்களின் மூத்த விஞ்ஞானி ரஹாப் என். கின்யான்ஜுய், “இந்த மனிதர்கள் மிகவும் சாதுர்யமான புவியியலாளர்களாக இருந்துள்ளனர். சிறந்த மூலப்பொருட்களை எப்படி கண்டுபிடிப்பது என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது, இந்தக் கல் கருவிகள் மிகச்சிறந்தவை. இவற்றில் சிலவற்றைக் கொண்டு நம் விரல்களைக் கூட வெட்டலாம்.
காலநிலையில் ஏற்படும் தீவிர மாற்றங்களிலிருந்து தப்பிக்க கருவிகளின் பயன்பாடு இந்த மக்களுக்கு உதவியிருக்கலாம் என்று புவியியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.
நிலப்பரப்பு பசுமையான ஈரநிலங்களிலிருந்து வறண்ட, தீயால் சூழப்பட்ட புல்வெளிகள் மற்றும் அரை பாலைவனங்களுக்கு மாறியது,” என்று கூறினார்.
பொதுவாக, சுற்றுச்சூழலில் ஏற்படும் இந்த கடுமையான மாற்றங்கள் விலங்குகளின் இடமாற்றதிற்கோ அல்லது பரிணாம வளர்ச்சியின் மூலம் தகவமைத்துக் கொள்ளவோ வழிவகுக்கும்.
இருப்பினும், உயிரியல் தகவமைப்புகளை நம்புவதற்குப் பதிலாக, அப்பகுதியில் உள்ள கருவி தயாரிப்பாளர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலம் செழித்து வாழ முடிந்தது என்று முனைவர் பால்கு ரோலியர் கூறுகிறார்.
“கிழக்கு துர்கானாவின் இந்த ஆதிகால மக்களுக்கு, வேகமாக மாறிவரும் நிலப்பரப்பில் உயிர்வாழ தொழில்நுட்பம் உதவியது. ஆனால், தங்களைத் தகவமைத்துக் கொள்வதன் மூலம் அல்ல, மாறாக உணவைக் கண்டுபிடிக்கும் வழிகளை மாற்றியமைத்துக் கொண்டதன் மூலம்.”
வெவ்வேறு அடுக்குகளில் கல் கருவிகள் இருந்ததற்கான சான்றுகள், இந்த மக்கள் நீண்ட காலத்திற்கு, தொடர்ச்சியான முறையில், உயிரியல் பரிணாம வளர்ச்சியை எதிர்கொண்டு, உலகம் தங்களைக் கட்டுப்படுத்த விடாமல், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைக் கட்டுப்படுத்தும் வழியைக் கண்டுபிடித்தனர் என்பதைக் காட்டுகிறது.
அதுவும் மனிதகுல தோற்றத்தின் தொடக்க காலத்திலேயே இது நடந்தது என்று முனைவர் பால்கு ரோலியர் கூறுகிறார்.
“கருவிகளைப் பயன்படுத்தியதால், சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் உடல்களை தகவமைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை. அதற்கு பதிலாக, உணவைப் பெறுவதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை அவர்கள் உருவாக்கினர். அதாவது விலங்குகளின் சடலங்களைக் கிழித்து இறைச்சியை எடுக்க மற்றும் தாவரங்களைத் தோண்டி எடுப்பதற்கான கருவிகள்.”
பட மூலாதாரம், David Braun
படக்குறிப்பு, நமோரோடுகுனன் தொல்பொருள் தளம் கென்யாவின் துர்கானா படுகையில் அமைந்துள்ளது.
இதற்கான சான்றுகள் அந்த இடத்தில் உள்ளன: இந்தக் கல் கருவிகளால் விலங்கு எலும்புகள் உடைக்கப்படுள்ளன, அவற்றால் வெட்டப்பட்டுள்ளன. அதாவது இந்த மாற்றங்கள் மூலம், அவர்கள் தொடர்ந்து இறைச்சியை வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்த முடிந்தது.
“இந்த தொழில்நுட்பம் இந்த ஆதிகால மக்களுக்கு பெரும் நன்மையை அளித்தது” என்று முனைவர் பால்கு ரோலியர் கூறுகிறார்.
“தடைகளைத் தாண்டிச் சென்று புதிய உணவைப் பெறுவதற்கான தொழில்நுட்பம் அவர்களிடம் இருந்துள்ளது, எனவே அவர்களின் சுற்றுப்புறங்களும் உணவு மூலமும் மாறும்போது, அவர்களால் பல்வேறு வகையான உணவுகளை பெற முடிந்தது.”
பட மூலாதாரம், David Braun
படக்குறிப்பு, வடக்கு கென்யாவில் உள்ள நமோரோடுகுனன் என்ற இடத்தில் 2.58 மில்லியன் ஆண்டுகள் பழமையான இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வு பணிகளை மேற்கொண்டனர்.
இந்தப் பகுதியில் சுமார் 2.75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஒப்பீட்டளவில் சிறிய மூளைகளைக் கொண்ட ஆதி மனிதர்கள் சிலர் வசித்து வந்தனர்.
இந்த ஆதி மனிதர்கள் தங்கள் பரிணாம வளர்ச்சிக் கால மூதாதையர்களுடன் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. அதாவது, ஆஸ்ட்ராலோபிதெசின்கள் (Australopithecines) என்று அழைக்கப்படும் ஒரு ‘மனித தோற்றத்திற்கு முந்தைய’ குழு, பெரிய பற்கள் மற்றும் சிம்பன்சி-மனித குணாதிசயங்களின் கலவையைக் கொண்டிருந்தது.
நமோரோடுகுனனில் உள்ள கருவி பயனர்கள் பெரும்பாலும் இந்தக் குழுக்களில் ஏதேனும் ஒன்றை அல்லது இரண்டையும் கூட சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம்.
பேராசிரியர் பிரவுனின் கூற்றுப்படி, இந்தக் கண்டுபிடிப்பு, “தொடர்ச்சியான கருவி பயன்பாடு என்பது மிகவும் தாமதமாகத் தோன்றியது. அதாவது, 2.4 முதல் 2.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் ஒப்பீட்டளவில் பெரிய மூளைகளை கொண்டிருந்தபோது” என்ற மனித பரிணாம வளர்ச்சி தொடர்பாக பல நிபுணர்கள் முன்வைக்கும் கருத்திற்கு முரணானது.
“மனித பரிணாம வளர்ச்சியில், மூளையின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது என்பதுதான் வாதம். எனவே, கருவி பயன்பாடு இந்த மூளை வளர்ச்சிக்கு உதவியது என்பதே பெரும்பாலானோரின் கூற்று. ஆனால் நமோரோடுகுனனில் நாம் காண்பது என்னவென்றால், இந்த ஆதிகால கருவிகள் மனித மூளையின் அளவு அதிகரிப்பதற்கு முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளன.”
“இந்த ஆதிகால மனிதர்களையும் மனித மூதாதையர்களையும் நாம் மிகவும் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். 2.75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அநேகமாக அதற்கு முன்னதாகவே கூட, மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனித இனம் எப்படி உயிர் பிழைத்தது என்பதை நாம் அறியலாம்” என்கிறார் பேராசிரியர் பிரவுன்.