2
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரா திகழும் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2 ‘எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ மூக்குத்தி அம்மன் 2 ‘ எனும் திரைப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு ,ரெஜினா கசாண்ட்ரா, சுனில், ஊர்வசி, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு , சிங்கம் புலி, அர்ஜெய், விச்சு விஸ்வநாத் , சுவாமிநாதன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். சமூக பக்தி படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருக்கிறது. இது தொடர்பான பிரத்யேக காணொளியில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்பில் பணியாற்றியதாக இயக்குநர் சுந்தர் சி குறிப்பிட்டு, அனைவருக்கும் நன்றி ‘ தெரிவித்திருக்கிறார். விரைவில் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டு, படத்தின் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.