இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை ‘இந்து வளர்ச்சி விகிதம்’ என்று அழைத்தது, அடிமை மனநிலையின் அடையாளம் என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பேசிய அவர் “உலகளவில் வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதாரமாக இன்று இந்தியா உள்ளது. ஆனால், அதை யாராவது இந்து வளர்ச்சி விகிதம் என இன்று அழைக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
அவர் கூறுகையில், “‘இந்து வளர்ச்சி விகிதம்’ என்ற வார்த்தை இந்தியா இரண்டு முதல் மூன்று சதவிகித வளர்ச்சி விகிதத்தை எட்ட விரும்பிய போது உருவாக்கப்பட்டது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அந்நாட்டு மக்களின் நம்பிக்கை மற்றும் அடையாளத்துடன் தொடர்புபடுத்துவது அடிமை மனநிலையின் வெளிப்பாடு.” என்றார்.
“ஒட்டுமொத்த சமூகம் மற்றும் முழு கலாசாரமும் அந்நாட்டின் வறுமையுடன் தொடர்புபடுத்தப்பட்டது. இந்தியாவின் மெதுவான வளர்ச்சி விகிதத்திற்கு காரணம், இந்து நாகரிகமும் இந்து கலாசாரமும் தான் என என நிரூபிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்போது, எல்லாவற்றிலும் வகுப்புவாதத்தைக் காணும் அறிவுஜீவிகள், ‘இந்து வளர்ச்சி விகிதம்’ என்பதில் அதைப் பார்க்கவில்லை” என்றார்.
சமீபத்திய வளர்ச்சி விகித புள்ளிவிவரங்களை மேற்கோளிட்டு பேசிய மோதி, இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். அந்த புள்ளிவிவரங்களின்படி, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.2 சதவிகிதமாக உள்ளது.
‘இந்து வளர்ச்சி விகிதம்’ என்பது என்ன, இந்த வார்த்தை எப்போது தொடங்கியது என்பதை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
வளர்ச்சி விகிதம் என்பது என்ன, அது எப்படி கணக்கிடப்படுகிறது?
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, ஜிடிபி வளர்ச்சி விகிதம் மொத்த உற்பத்தி மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பின் மூலம் கணக்கிடப்படுகிறது
‘இந்து வளர்ச்சி விகிதம்’ என்பது என்ன என்பதை புரிந்துகொள்வதற்கு முன்பு, வளர்ச்சி விகிதம் என்பது என்ன, அது எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை அறியலாம்.
ஒரு நாட்டின் வளர்ச்சி எந்த வேகத்தில் இருக்கிறது என்பதுதான் வளர்ச்சி விகிதம்.
பொருளாதார பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், “உதாரணமாக, ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது 100 ஆக இருக்கிறது என்றால், அடுத்தாண்டு 105 ஆக மாறலாம், அப்படியென்றால் வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதம்.” என்றார்.
வளர்ச்சி விகிதம் பல வழிகளில் கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக, பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது ஒரு நாட்டின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது மற்றும் இது பொதுவாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் என அழைக்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி பெரும்பாலும் இரு வழிகளில் அளவிடப்படுகிறது: பெயரளவு வளர்ச்சி விகிதம் (nominal) மற்றும் உண்மையான வளர்ச்சி விகிதம் (real)
பெயரளவு வளர்ச்சி விகிதத்தில் பணவீக்கமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். விலையேற்றம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பாகவும் இதை விளக்கலாம்.
உண்மையான வளர்ச்சி விகிதம் பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்த பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுகிறது. இது அந்தாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பைக் கணக்கிடுகிறது, அதாவது கார்கள், இயந்திரங்கள், தானியங்கள், உடை ஆகியவற்றின் உற்பத்தி இதில் அடங்கும்.
இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படி இருந்துள்ளது?
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, சுதந்திரத்திற்கு பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் வளர்ச்சி விகிதம் வெவ்வேறாக இருந்துள்ளது.
இந்திய பொருளாதாரம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கட்டங்களை சந்தித்துள்ளது.
பேராசிரியர் அருண் குமார் விளக்குகையில், பிரிட்டிஷ் காலனித்துவ காலகட்டத்தில் 1900 மற்றும் 1950ம் ஆண்டுக்கு இடையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்தது. தோராயமாக 0.75 சதவிகிதமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமாக அதிகரித்து வந்தது.
இதற்கான காரணம் குறித்து விளக்கிய அவர், “காலனித்துவ காலகட்டத்தின் போது, இந்தியாவின் வளங்களை கொள்ளையடிப்பதை பிரிட்டன் வழக்கமாக கொண்டிருந்ததால் இந்தியாவில் முதலீடுகள் மற்றும் சேமிப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன.” என்றார்.
அவரை பொறுத்தவரை, 1950 மற்றும் 1965 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சற்று வேகமாக இருந்ததாக குறிப்பிட்டார். ஆறு முதல் ஏழு மடங்கு உயர்ந்து 4 சதவிகிதம் என்ற நிலையை அடைந்தது அந்த சமயத்தில் மிக சிறந்த வளர்ச்சி விகிதமாக கருதப்பட்டது என்றார்.
ஆனால், 1965 மற்றும் 1975 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியை சந்தித்தது. இதற்கு சில காரணங்கள் உள்ளன: 1965-66ல் கிழக்கு இந்தியாவில் ஏற்பட்ட பட்டினி கொடுமை, 1965 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட போர்கள் ஆகியன.
மேற்கு ஆசியாவில் நடைபெற்ற யோம் கிப்பர் போர் (Yum Kuper War) இந்தியாவின் பணவீக்கத்தை மேலும் அதிகரித்தது.
1971-ஆம் ஆண்டு போரின் போது, 1.25 கோடி அகதிகள் வங்கதேசத்திலிருந்து இந்தியா வந்தனர். இதனால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கடுமையாக குறைந்து, 2-2.5 சதவிகிதம் என்ற அளவை எட்டியது.
‘இந்து வளர்ச்சி விகிதம்’ என்பது என்ன?
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, 1970களில் இந்திய பொருளாதாரம் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது
பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், 1965 மற்றும் 1975-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்த போது டெல்லி பொருளாதார பள்ளியின் பேராசிரியர் ராஜ்கிருஷ்ணா அதற்கு ‘இந்து வளர்ச்சி விகிதம்’ என பெயரிட்டதாக தெரிவித்தார்.
பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், “தற்போது வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கவில்லை. இந்திய சமூகம் மிக குறைவான வேகத்தில் மாற்றங்களுக்கு உட்பட்டு வரும் நிலையில், அத்தகைய சூழலால் பாதிக்கப்படும் ஒன்றாக பொருளாதாரமும் உள்ளது.” என்றார்.
அவர் கூறுகையில், “சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் பல ஏற்ற, இறக்கங்கள் இருந்தன என தொடர்ந்து கூறிவந்தாலும், அதற்கான மிக தெளிவான காரணங்கள் இருந்தன. ‘இந்து வளர்ச்சி விகிதம்’ என்பது சரியான வரையறையாக இல்லை.” என்றார்.
பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், 1975-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய பொருளாதாரம் சில முன்னேற்றத்தைக் கண்டதாகவும் 1980களில் வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்ததாகவும் குறிப்பிட்டார்.
“1990க்குப் பிறகு புதிய பொருளாதார கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது வளர்ச்சி விகிதம், சுமார் பத்தாண்டுகளுக்கு ஏறக்குறைய ஒரேமாதிரியாக தான் இருந்தது. 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகே வேகமெடுக்க ஆரம்பித்தது, அதன்பின் 2008-ம் ஆண்டு வீட்டுக்கடன் நெருக்கடிக்கு பின்னர் (அமெரிக்காவில் ஏற்பட்ட பெரிய நிதி நெருக்கடி) 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்திய பொருளாதாரம் தடுமாறியது. அதன்பின் நிலைமை மேம்பட்டது. இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும் பொருளாதாரங்களுள் ஒன்றாக மாறியது.”
2025-26ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் உண்மையான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம்(ஜிடிபி வளர்ச்சி விகிதம்) 8.2 சதவிகிதமாக இருந்ததாக இந்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்த புள்ளிவிவரம், ‘இந்தியாவின் முன்னேற்றத்தின் புதிய பிரதிபலிப்பு’ என, சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.
அவர் கூறுகையில், “உலகளாவிய வளர்ச்சி விகிதம் வெறும் மூன்று சதவிகிதமாக உள்ள நிலையில் இந்த புள்ளிவிவரங்கள் வந்துள்ளன. ஜி7 பொருளாதார நாடுகள் சராசரியாக ஒன்றரை சதவிகிதம் எனும் விகிதத்தில் வளர்ந்து வருகின்றன.” என்றார்.
இந்தியாவின் ஜிடிபி கணக்கீடு குறித்து கேள்விகள் எழுந்தது ஏன்?
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, IMF-ன் தலைமை அலுவலகத்தில் அதன் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டாலினா ஜியார்ஜிவா
சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் ஜிடிபி கணக்கிடும் முறை குறித்து சில கேள்விகளை எழுப்பியது.
ஐஎம்எஃப் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் ஜிடிபி மற்றும் தேசிய கணக்குகள் (National Accounts) தரவுக்கு ‘சி’ எனும் தரநிலையை வழங்கியுள்ளது.
அந்த ஆய்வறிக்கையின்படி, தேசிய கணக்குகள் தரவு, கால அளவின்படி துல்லியமாகவும் போதிய விவரங்களை கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது. ஆனால், அதை கணக்கிடும் முறை அதன் கண்காணிப்பைத் தடுக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியா மொத்த விலை குறியீட்டை பயன்படுத்துவதாகவும் (WPI) மாறாக உற்பத்தியாளர் விலை குறியீட்டை (PPI) பயன்படுத்தவில்லை என்றும் இது தரவுகளில் முரண்பாடுகள் ஏற்பட வழிவகுக்கலாம் என்றும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இந்த தரவுகளை நான்கு பிரிவுகளாக பிரிக்கிறது. இதில் ‘சி’ தரநிலை என்பது சில குறைபாடுகள் இருப்பதையும், கண்காணிப்பு நடவடிக்கையை ஒருவகையில் அது பாதிப்பையும் உணர்த்துகிறது.
காங்கிரஸ் கட்சியும் இதுதொடர்பாக கேள்விகளை எழுப்பியுள்ளது. பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர் அமித் மாளவியா அதற்கு பதில் தெரிவிக்கையில், “இந்தியா குறிப்பிட்ட இடைவெளி மற்றும் சரியான நேரத்தில் செயல்படுவதற்கு ‘ஏ’ தரநிலை பெற்றுள்ளது, ஆனால் அது புறக்கணிக்கப்பட்டுள்ளது.” என்றார்.