4
திருநெல்வேலியில் உள்ள பிள்ளையார் கோயில் மூன்றாவது தெருவில் உள்ள நர்மதாவின் வீட்டைச் சம்பத் கண்டுபிடித்துவிட்டார். தெரு அகலமாக இருந்தது. வீட்டிற்குச் சற்றுத் தள்ளிக் காரை நிறுத்தினார். காரிலிருந்து இறங்கினார். வீட்டின் முன் நின்றார். தன்னை எதிர்பார்த்திராத அவள் எப்படி உணர்வாள் என்பதைச் சம்பத்தால் கற்பனை செய்ய முடியவில்லை. திரும்பிச் சென்றுவிடலாமா என்றுகூட அவருக்குத் தோன்றியது. திடீரென்று கதவு திறந்தது.
நர்மதா நின்றிருந்தாள். அவள் முகத்தில் வியப்பு ஆச்சரியத்தைக் கண்டார். “வாங்க” என்றாள். பிறகு, “எப்படி அட்ரஸ் வாங்குனீங்க” என்றாள்.
“தற்செயலாக உன் தம்பி வீட்லே அன்னைக்கு உன்னைப் பார்த்தேன். அந்த வீட்டை நினைவுலே வைச்சிருந்தேன். ஒரு மாசம் கழிச்சி உன் தம்பியைப் பார்த்து உன் அட்ரஸ் வாங்கினேன்.”
உள்ளே சென்று எதிரெதிர் சோபாவில் உட்கார்ந்தார்கள்.
“என் தம்பி எப்படி உங்கள்ட்டே என் அட்ரைஸைக் கொடுத்தான்” என்றாள்.
“கைலதான் கொடுத்தாரு.”
“இந்த கிண்டல் இன்னும் உங்கள்ட்டேயிருந்து போகலை.”
“நான் தற்செயலா அந்தப் பக்கம் போன மாதிரி போனேன். நான் நினைச்ச மாதிரி உன் தம்பி வாசல்லே நின்னிட்டிருந்தாரு. வீட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போனாரு. அப்பதான் ஒரு மகளை நீ திருநவேலியிலே கட்டிக் கொடுத்திருந்தாலும் தனியா இருக்கறதா சொன்னாரு. நான் அன்னைக்கு உன் தம்பி வீட்டுக்குத் தற்செயலா வந்து பார்த்தபோது நீ ஒரு மகளை திருநவேலியிலும் இன்னொரு மகளைத் தம்பிக்கும் கட்டிக் கொடுத்திருப்பதாச் சொன்னே. அப்ப நீ தனியா இருக்கறது எனக்குத் தெரியாது. ரெண்டு மகள் வீட்லேயும் மாறிமாறி இருக்கறதாச் சொல்லியிருந்தே.”
“நமக்குன்னு ஒரு எடம் வேணுமில்லையா. வேணுங்கிறதைப் பொங்கிச் சாப்பிடலாம். டி.வி.யிலே நெனச்ச சேனலைப் பாக்கலாம். மகள் வீடுன்னாலும் இன்னொருத்தர் வீடு மாதிரிதானே. போயி ஒரு வாரம், பத்து நாள் இருந்து வருவேன்.”
“வீட்டுக்காரர் எப்ப இறந்தாரு.”
“நாலு வருசம் ஆச்சு. திடீர்னு இறந்து போனாரு. தூக்கத்திலேயே இறந்துபோயிட்டாரு. நீங்க உங்களைப் பத்தி எதுவும் சொல்லலையே.”
“ரெண்டு மகள்களும் கல்யாணமாகி வெளிநாட்டிலேயே இருக்காங்க. நானும் என் மனைவியும் தனியா இருக்கோம். வாழ்க்கை போரடிக்குது. உன் செல்போன் நம்பரைச் சொல்லு. பதிஞ்சுக்கிறேன்.”
“வேண்டாம். அப்புறம் ரெண்டு பேருக்கும் தொடர்ந்து பேசத் தோணும். இந்த வயசுக்கு மேலே வேண்டாம். நான் காபி கொண்டாரேன்.”
அன்றைக்கு மாதிரியே காபி கொண்டுவர உள்ளே சென்றாள். சம்பத் அறையைப் பார்த்தார். சுவரில் மகள்களின் கல்யாண போட்டோ, கணவரின் போட்டோ மற்றும் சில போட்டோக்கள் இருந்தன. காபியைக் கொண்டுவந்து அன்னைக்கு மாதிரியே ஸ்டூலை இழுத்து அதன் மேல் காபி டவரா டம்பளரை வைத்தாள்.
நர்மதா ஏனோ சிரித்தாள். சிரிக்கும்போது அவள் கன்னத்தில் ஏற்படும் குழியை சம்பத் பார்த்தார். முகம் வசீகரமாக இருந்தது.
“நர்மதா என் நர்மதா” என்றார் சம்பத். அவள் வெட்கப்பட்டுத் தரையைப் பார்த்தாள். பின் நிமிர்ந்து சம்பத்தைப் பார்த்தாள்.
“நீ இன்னும் பழைய நர்மதா மாதிரிதான் இருக்கே. வயசுதான் ஆச்சு.”
“நீங்களும் அப்படித்தான்” என்றாள் நர்மதா.
“நீ என்னை நினைச்சுக்குவியா. நமக்கு இடையிலே தொடர்பு இல்லை. ஆனா உன் நினைவு, உன் தோற்றங்கள் எப்போதும் எனக்குள்ளே இருந்துகொண்டிருக்கிறது. நீ நல்லா பாடுவியே. இப்பவும் பாடுறதுண்டா.”
“தனியா இருக்கறப்ப எப்பவாவது பாடிக்குவேன்.”
“ஒரு பாட்டு பாடறியா”
அவள் மௌனமாக இருந்தாள். “ஒரு பாட்டை அடிக்கடி பாடுவேன். வரிகள் மறந்து போச்சு. நாலு வரிகள் மட்டும் நினைவிருக்கு. அதை மட்டும் பாடிக்குவேன்.”
“இப்பப் பாடறியா” என்றார் சம்பத்.
“ம்” என்றாள் நர்மதா. கண்களை மூடிக்கொண்டாள்.
“நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம்
நிறைந்திருக்கும் – எந்தன்
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம்
நிறைந்திருக்கும்.”
மூடியிருந்த நர்மதாவின் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. அவள் இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள். கண்களைத் திறந்தாள்.
அழுதுகொண்டே, “ஏன்டா சம்பத்து, ஏன்டா நாம ரெண்டு பேருக்கும் இடையிலே கல்யாணம் நடக்கலை” என்றாள்.
சம்பத்தும் எழுந்து நின்றார்.
*
பின்குறிப்பு: இந்தக் கதை உருவாகக் காரணமான ‘நர்மதாவின் சிரிப்பு’ என்ற கதை ‘தாரிணியின் சொற்கள்’ என்ற கதைத் தொகுப்பில் உள்ளது. அக்கதை கீழே கொடுக்கப்படுகிறது.
நர்மதாவின் சிரிப்பு
இப்படி ஒரு அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ ஏற்படும் என்று சம்பத் கற்பனைகூடப் பண்ணியதில்லை. அவர் ஒரு முகவரியைத் தேடித்தான் அந்த சத்யா நகருக்கு வந்தார். அவர் கூடப் பணிபுரிந்த தனசேகரன் உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்பதை அறிந்து அவரைப் பார்க்க வேறு ஒரு நண்பரிடம் முகவரியைப் பெற்றுக்கொண்டு வந்திருந்தார். வீட்டில் வாசலில் நின்றுகொண்டிருந்த ஒருவரிடம் அந்த முகவரியைப்பற்றி விசாரித்தார். அவர் சம்பத்தை உற்றுப் பார்த்தார். “நீங்கள் விருதுநகரைச் சேர்ந்த சம்பத் சார்தானே” என்றார். “ஆமாம். அதுதான் நான் பிறந்த ஊர். மதுரைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன” என்றார். சம்பத்தால் அவரை அடையாளம் காணமுடியவில்லை.
“என்னைத் தெரியவில்லையா. நான் ஆனந்த குமார். டாக்டர் சுந்தரத்தின் மகன். மேல வெளிவீதியில் எங்கள் வீடு இருந்தது. என் அப்பாவும் உங்கள் அப்பாவும் ஒரே ஊர்க்காரர்கள். நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள். என் அப்பா இறந்ததற்கும் நீங்கள் வந்திருந்தீர்கள்” என்றார் அவர்.
மூளையில் சட்டென்று தோன்றியது. இவர் நர்மதாவின் தம்பியல்லவா. உடனே அவருக்குப் படபடப்பு ஏற்பட்டது.
“உள்ளே வாங்க. அம்மா இறந்துபோயிட்டாங்க. அக்கா ஊர்லேயிருந்து வந்திருக்காங்க” என்றார் ஆனந்த குமார்.
சம்பத் காரை லாக் செய்துவிட்டு படியேறப் போகும்போது நினைத்தார். ‘ஆனந்த குமாருக்கு இரண்டு அக்கா. ஒருத்தி நர்மதா. இன்னொருத்தி ரேவதி. எந்த அக்கா வந்திருக்கிறாள் என்று தெரியவில்லை.’ நர்மதா, நர்மதா என்று மனம் புரண்டது.
படியேறினார். உள்ளே நுழைந்தார். உட்கார்ந்திருப்பது நர்மதாதான். அவருக்குத் தடுமாற்றம் ஏற்படுவதுபோல் இருந்தது. ஆனந்த குமார் ஒருவருடன் வருவதைப் பார்த்த அக்கா எழுந்து நின்றாள்.
“இவரைத் தெரிகிறதா. இவர் சம்பத். இவரோட அப்பாவும் நம்ம அப்பாவும் ஒரே ஊர்க்காரங்க. கமர்ஷியல் டாக்ஸ் துறையிலே வேலை பாத்தவர். ஞாபகம் வருதா” என்றார் ஆனந்த குமார்.
சம்பத்தைப் பார்த்து நர்மதா வணங்கினாள். சம்பத் நாற்காலியில் உட்கார்ந்தார். “இது நர்மதா. மூத்த அக்கா” என்றார் ஆனந்த குமார்.
“தெரியுது. நல்லா இருக்கீங்களா. வீட்டுக்காரர் நல்லா இருக்காரா. ஒரு பெண்ணுக்கு கல்யாணம் ஆனது தெரியும். புள்ளைக எங்கே இருக்காங்க.”


“மூத்த மகளை தம்பிக்குத்த்தான் கட்டிக்கொடுத்தேன். கடைக்குப் போயிருக்கா. இன்னொரு பொண்ணை திருநவேலியிலே கட்டிக்கொடுத்தது. அங்கேதான் இருக்கா. வீட்டுக்காரரு போன வருஷம் தவறிப்போயிட்டாரு. எனக்கு ரெண்டும் பெண் குழந்தைகள்ங்கிறதுனாலே இங்கேயும் அங்கேயுமா இருக்கேன்.”
“நீங்க நல்லா இருக்கீங்களா. பெண்டாட்டி புள்ளைக நல்லா இருக்காங்களா.”
சம்பத் தன் குடும்பத்தைப்பற்றிச் சொல்லிக்கொண்டே அவளை நன்கு கவனித்தார். அவள் முகம் பார்த்துப் பேசினார். தலையின் இருபுறமும் நரை ஏற்பட்டிருந்தது. முகத்தில் வயதானது தெரிந்தது. நர்மதா நல்ல உயரம். அதற்கு ஏற்ப உடல்வாகு. அளந்து அமைந்தாற்போன்ற வடிவம். அந்தப் பழைய நர்மதா தற்போது வயதாகி உட்கார்ந்திருந்தாள்.
‘இன்று நல்ல உடைகள் உடுத்தியிருக்கிறோமோ. தலைமுடி கலைந்திருக்கிறதோ. முகத்தில் எண்ணெய் வழிகிறதோ. திடீரென்று நர்மதாவைப் பார்க்க நேர்ந்துவிட்டது’ என்றெல்லாம் அவர் மனத்தில் எண்ணங்கள் தோன்றின. பழைய காட்சிகள் அவர் மனத்தில் தோன்றின. ‘நர்மதா என் நர்மதா. சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும் நர்மதா.’ சம்பத் தன்னை ஆராய்வதைப்போல் பார்ப்பதை உணர்ந்த நர்மதா தலையைக் குனிந்துகொண்டாள். பிறகு தலையை நிமிர்த்தி, “காபி சாப்பிடறீங்களா” என்று கேட்டாள். சம்பத் தலையை அசைத்தார். அவள் நாற்காலியிலிருந்து எழுந்தாள். இப்போது சற்று பூசினாற்போல இருந்தாள். வயதாகியிருப்பது தெரிந்தது.
‘பார்த்தேயிருக்க வேண்டாமோ. ஏற்கெனவே மனதில் இருந்த தோற்றம் மாறுகிறதே’ என்ற நினைப்பு அவருள் ஓடியது. அவள் அடுக்களைக்குள் சென்று காபி தயாரித்தாள். அவள் மனதில் பழைய சம்பத்தின் இளைய தோற்றம், காட்சிகள் தோன்றின. ‘சம்பத்திற்கு தொப்பை விழுந்திருக்கிறது. லேசாக நரைத்திருக்கிறது. முகத்தில் பழைய சம்பத் தெரிகிறது’ என்று அவளுக்கு நினைப்பு ஓடியது.
அவள் வந்து ஸ்டூலை இழுத்து அதன்மேல் காபி உள்ள டவரா டம்ளரை வைத்தாள்.
“நீங்க அப்பிடியேதான் இருக்கிங்க. வயதானது தெரிகிறது. அவ்வளவுதான்” என்றான் சம்பத்.
“நீங்களும் அப்படித்தான் எனக்குத் தெரிகிறது” என்றாள் நர்மதா.
ஆனந்த குமார் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
“அந்தக் காலம் அந்தக் காலம்தான். இந்தக் காலம் இந்தக் காலம்தான்” என்று சொல்லி நர்மதா சிரித்தாள். அவள் கன்னத்தில் குழி விழுவதை சம்பத் பார்த்தார்.
ஆனந்த குமார் முகவரி எழுதியிருந்த சீட்டை வாங்கி அந்த இடம் இருக்குமிடத்தை விவரித்தார். விடைபெறும் நேரம் வந்துவிட்டது என்பதை சம்பத் உணர்ந்தார். நர்மதாவைப் பார்த்து, “காபி நல்லா இருந்தது” என்றார். அவள் புன்னகைத்த முகத்துடன் இருந்தாள்.
சம்பத் எழுந்தார். ஆனந்த குமாரும் நர்மதாவும் வாசல்வரை வந்தார்கள். காரை ஆன் செய்து கதவைத் திறந்து ஏறினார். நர்மதாவின் சிரிப்பை நினைத்துக்கொண்டார். சற்று தூரம் சென்றதும் காரை மெதுவாக ஓடும்படி செய்து பின்னால் பார்த்தார். நர்மதா கேட்டைப் பிடித்துக்கொண்டு கார் சென்ற திசையைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டார்.
– சுரேஷ்குமார இந்திரஜித்
நன்றி : அகழ் இணையம்