சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையிலான ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்குடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்தை அனைத்து துறையிலும் முன்னேறிய மாநிலமாக உயர்த்திக் காட்டியுள்ளோம்.
அந்த வகையில், சுகாதாரத் துறை சார்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 ஆகிய திட்டங்களை தொடர்ந்து, மருத்துவ சேவைகளை கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.
அதன் அடிப்படையில், உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடியில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி அறிவித்தார். இதை செயல்படுத்தும் விதமாக, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்களை, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 2-ம் தேதி (நாளை) தொடங்கி வைக்க உள்ளேன்.
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் நடைபெறும் இந்த முகாம்களில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 388 வட்டாரங்களில் தலா 3 என 1,164 முகாம்கள், மண்டலத்துக்கு ஒன்று என சென்னை மாநகராட்சியில் 15 முகாம்கள், 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் தலா 4 என 20 முகாம்கள், அதைவிட குறைந்த மக்கள்தொகை உள்ள 19 மாநகராட்சிகளில் தலா 3 என 57 முகாம்கள் என்று மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசை பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் இவை நடத்தப்பட உள்ளன. பல துறைகளை ஒருங்கிணைத்து பள்ளி, கல்லூரி வளாகங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
சனிக்கிழமைதோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் நடைபெறும். 40 வயதுக்கு மேற்பட்டோர், நீரிழிவு, உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்பு உடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
முகாமில் அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவ சேவைகள் வழங்கப்படும். பொது மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின்படி எக்ஸ்ரே, இசிஜி, யுஎஸ்ஜி, கருப்பை வாய், மார்பக புற்றுநோய் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன. பயனாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக முகாமிலேயே உடனடியாக தெரிவிக்கப்படும்.
பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, இதயம், எலும்பியல், நரம்பியல், தோல், காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு, இயன்முறை, பல், கண், மனநலம், நீரிழிவு, குழந்தைகள் நலன், நுரையீரல், கதிரியக்கவியல் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த சிறப்பு நிபுணர்களை கொண்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் பதிவு, மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றும் முகாமில் வழங்கப்படும். அனைத்து மக்களும், குறிப்பாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் நடத்தப்படும் முதல்கட்ட பரிசோதனை அடிப்படையில் விரிவான பரிசோதனை பெறுவதற்காக மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் இந்த முகாமில் அவசியம் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.