• Fri. Aug 29th, 2025

24×7 Live News

Apdin News

நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | Chief Minister Stalin met Nallakannu and inquired about his well-being

Byadmin

Aug 29, 2025


சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலன் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமாகிய நல்லகண்ணு கடந்து ஆகஸ்ட் 22ம் தேதி அவரது வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 24.08.2025 அன்று மாலை அவர் உணவருந்தும்போது உணவுக்குழாயில் புரை ஏறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, இரவு 10.30 மணிக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்ட நேரத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வயது மூப்பின் காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சினைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இருதய நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு றிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலன் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார்.

முன்னதாக நேற்று, முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா விரைந்து நலம் பெற விழைகிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.



By admin