நல்லருள் தருவாய்
முருகா!….
நின் பாதம் நான்
தொழுதேன்.
கரங்கள் கூப்பி
தலைமேல்.
தலைவா உனை
வணங்கினேன்.
தாயும் நீயே – என்
தந்தையும் நீயே!
வாழ்வை வளமாக்கிட
வரம் தருவாயே!
தேன் இனிமை
கலந்திட
தொன்மைத் தமிழ்
நீ பேசிட.
நானிலம் வானில்
முகில் சேர.
நிலம் நனைந்திட – நீ
வரம் தந்திடு.
ஆவணித் திருவிழா.
தேரேறி நீ;
வலம் வந்திடும்
வாசலில் இருந்தார்.
உடலுருக்கி அவர்
உனை நம்பி.
நோன்பிருந்தார் திலீபன்.
நீயதை மறந்தாய்.
முருகா! முருகா!
உனைத் தினம்
நான் தொழுதேன்.
இனியொரு பொழுதில்.
வினையொழித்து நீ
திணை விளைத்தால்.
மனமொத்து கரம் கூப்பி
மீண்டும் தொழுவேன்.
வேல் கொண்டு நீ
கரம் தந்தால்
மீளாத நிலம் மீளும்
நம் மக்கள் வீடு திரும்பிட
செம்மணி போலொரு
வினை வந்தினி
நம்மைத் தீண்டாது
தமிழால் உனைப் பாடுவேன்.
நாடுகள் பல சென்றும்
வீடு உன் கோவில்
மனம் நாடி தமிழர்
ஆவணி திருவிழா வந்தாரே!
வேல் வடிவில் நீ
முருகா வந்திட!
கரம் தலைமேல் கூப்பி
அரோகரா உச்சரித்தேன்.
ஓம் முருகா !
முத்தமிழ் வேலா!
தமிழ் கடவுள் நீயென
ஆனபின்னும் சோகமோ?
வினை தீர்த்து இனி
திணை விளைய – நிலம்
காத்து நம்மை காப்பாய்
நல்லூர் பதி வேலா.
நதுநசி
The post நல்லூர் பதி வேலா | நதுநசி appeared first on Vanakkam London.