• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

நல்ல சகுனம் | ஒரு பக்க கதை | மணிராம் கார்த்திக்

Byadmin

Mar 8, 2025


காலை 8 மணிக்கு மேல்,

தனசேகரன் வேலைக்கு நேர்முக தேர்வுக்கு (இன்டர்வியு) போறதுக்கு புறப்பட்டு கொண்டிருந்தான்.

தனசேகரன் கல்லூரி படிப்பை முடித்து ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கும். வேலை கிடைக்கவில்லை.

புது புது கம்பெனிகளுக்கு இன்டர்வியு சென்று வந்து கொண்டு இருந்தான்.

எந்த கம்பெனியிலும் வேலை தரவில்லை. நிராகரிக்க பட்டான். அதற்கான காரணம் என்ன என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை.

அம்மா லக்ஷ்மி , “தனசேகரா, இன்டர்வியுக்கு கெளம்பிட்டியா. நல்லா சாமிய கும்பிடு. இந்த வேலையாவது கிடைக்கணும் அப்டின்னு வேண்டிக்கோ “ என்று மதுரை மீனாட்சி சொக்க்கநாதர் படத்தை பார்த்து கூறினாள்.

“சாமிய கும்பிட்டேன். நான் கிளம்புறேன் “ என்றான் தனசேகரன்.

“நில்லு ஒரு நிமிஷம் , எத்தன தடவ சொல்றது , சகுனம் பார்த்து போகணும்னு. நீ வீட்ல இருந்து வெளியில போறப்ப , நல்ல விசயத்த , இல்ல நல்ல ஆட்களை பார்த்துட்டு போகனும். அப்போ தான் போற காரியம் நல்லா நடக்கும். நம்ம காம்பவுண்ட்ல இருக்கிற ஆளு எல்லாம் பொறமை பிடிச்ச ஆளுக , அவங்கள பார்த்துட்டு போனா ஒன்னும் விளங்காது “ என்று கூறிவிட்டு , வாசலை நோக்கி நகர்ந்தாள் அம்மா லக்ஷ்மி.

எட்டி பார்த்து விட்டு , “தனசேகரா , இப்போ கெளம்பு . காம்பவுண்ட்ல யாரையும் காணோம். சீக்கிரமா கிளம்பு “ என்று அம்மா லக்ஷ்மி கூறியதும் , வேகமாக பைலை எடுத்து கொண்டு கிளம்பினான் தனசேகரன்.

அப்போது அந்த காம்பவுண்ட்ல கீழ் வீட்டை நோக்கி செல்லும் போது , அந்த கீழ் வீட்டில் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது.

“தம்பி கொஞ்சம் இரு. நீ புதுசா வேலைக்கு போக போற , நல்ல சகுனம் பார்த்து போகனும். நீ வேற அந்த தனசேகரன் முகத்தில முழிச்சிட்டு போயிராத. அவனுக்கு ஒரு வேலை கிடைக்க மாட்டேங்குது. ராசி இல்லாதவன். அவனுக்கு , அவன் அம்மாக்கு உன் மேல தான் ஒரு கண்ணு. கொள்ளிகண்ணு. இரு நான் வாசல்ல பார்த்துட்டு , சொல்றேன் அப்புறம் வரலாம் “ என்று தன் மகனிடம் கூறி கொண்டிருந்த பெண்ணின் குரல் , அந்த வீட்டு வாசலை கடந்து கொண்டு இருந்த தனசேகரனுக்கு கேட்டது.

அவளின் பேச்சு அவனுக்கு கோபம் வந்தாலும் , யோசிக்க வைத்தது. அப்போது தனசேகரனுக்கு புரிந்தது.

என் அம்மாவின் பேச்சும் இப்படிதானே மற்றவர்களை காயப்படுதிருக்கும் என்று.

சகுனம் பார்ப்பது சரியா தவறா என்பதை விட , அவர்கள் எடுக்கும் முயற்சியே அவர்களின் செயலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.

 

– மணிராம் கார்த்திக்

 

நன்றி : சிறுகதைகள்.காம்

By admin