தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு மழை பெய்தும், காய்ந்தும் குறுவை சாகுபடி கெட்ட நிலையில், நிகழாண்டு நன்கு விளைச்சல் அடைந்தும் கெட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த சாகுபடிக்கு தேவையான தண்ணீரை பம்பு செட் மூலமும், காவிரி ஆற்றின் பாசனத்தின் மூலமும் பெற்று சாகுபடியை மேற்கொள்கின்றனர். இதற்காக, மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, ஜன.28ம் தேதி மூடப்படுவது வழக்கம். இதையொட்டி, கடந்த சில ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்வதற்கு முன்பாக வாய்க்கால்கள், வடிகால்கள், ஆறுகள் தூர் வாரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2016-ம் ஆண்டு குறுவை, சம்பா சாகுபடியின்போது போதிய மழை இல்லாததாலும், காவிரியில் உரிய தண்ணீர் வராததாலும் டெல்டா மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாத நிலையில், வாழ்வாதாரம் இன்றி தவித்தனர். இதனால், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மத்திய அரசிடம் இருந்து 2017-ம் ஆண்டு வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு பெற்று, விவசாயிகளுக்கு வழங்கியது. அதன் பிறகு வறட்சி இல்லாத நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு பருவமழையும் அவ்வப்போது கைகொடுத்து வந்தது.
அதன்பின், 2018ம் ஆண்டு கஜா புயலின் போதும், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழையின் போது அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்து வந்தன. இதனால், வறட்சி காலங்களிலும், மழை வெள்ள காலங்களிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். அப்போதெல்லாம், மத்தியக் குழுவினர், அமைச்சர்கள், அதிகாரிகள் பார்வையிட்டு, வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதியை வழங்கி வந்தனர்.
ஆனால், நிகழாண்டு வறட்சியும் இல்லை, மழை வெள்ளமும் இல்லை. குறுவையில் அதிக மகசூலும் கிடைத்துள்ளது. ஏக்கருக்கு சராசரியாக 2 ஆயிரம் கிலோ முதல் 4 ஆயிரம் கிலோ வரை விளைச்சல் அடைந்துள்ளது. இவ்வாறு விளைந்த நெல்லை அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தும், உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாததால் பெரும்பாலான இடங்களில் நெல் மணிகள் முளைவிட்டு வீணாகின. இதனால், மகசூல் கிடைத்தும் அந்த பலனை உரிய காலத்தில் அனுபவிக்க முடியவில்லையே என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் கூறும்போது, “டெல்டா மாவட்டங்களில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் அதிக மகசூல் கிடைத்துள்ளது. ஆனால், விளைந்த வெள்ளாமையை வீட்டுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை. காவிரி டெல்டாவில் 2016- 17ம் ஆண்டில் காய்ந்து கெடுத்தது. அதன் பிறகு 2023ல் மழை பெய்து கெடுத்தது. இந்த முறை விளைச்சல் அடைந்தும் கெட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தியிருந்தனர். ஆனால், சோதனை அறுவடை செய்யப்படவில்லை. அதற்குள் அறுவடையை விவசாயிகள் முடித்துவிட்டனர். அறுவடை முடிந்ததே தவிர, அதன் பலன் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில், பயிர்க் காப்பீடு செலுத்திய அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்” என்று ஜீவக்குமார் கூறினார்.