பட மூலாதாரம், Getty Images
நள்ளிரவு 12:30 மணி, இன்னும் தூங்கவில்லை, லேசாக பசிப்பது போல் உணர்கிறீர்கள்.
உங்கள் கைபேசியில் ஆன்லைன் உணவு டெலிவரி தளத்தில் உங்களுக்குப் பிடித்த பிரியாணி கடையை தேர்வு செய்து ஆர்டர் செய்தால் அடுத்த அரை மணிநேரத்தில் சூடான பிரியாணி உங்கள் கைகளில்…
சென்னை போன்ற நகரங்களில் இரவு ஷிஃப்டில் பணிபுரியும் ஊழியர்கள் உள்பட பலரும் இதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளனர். நள்ளிரவில் விற்பனையைத் தொடங்கும் கடைகளுக்கு நேரடியாக சென்று பிரியாணி சாப்பிட்டு அதனை வீடியோவாக சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்களும் இருக்கிறார்கள்.
அது தவிர, நள்ளிரவு உணவகங்களுக்கு ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகள் கைகொடுக்கின்றன. நேரில் சென்று சாப்பிட இயலாதவர்கள் வீட்டிற்கே ஆர்டர் செய்து வரவைக்கலாம் என்பதால் நள்ளிரவில் பிரியாணி, ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளை உட்கொள்வது எளிதான ஒன்றாக மாறி வருகிறது.
ஆனால், இவ்வாறு இரவில் மிகத் தாமதமாக பிரியாணி போன்ற உணவுகளை சாப்பிடுவதால் நம் உடலுக்குள் என்ன நடக்கிறது? இப்படிச் செய்வது ஆரோக்கியத்திற்கு உகந்ததா?
‘நம் உடலுக்கென ஒரு ‘கடிகாரம்’ உள்ளது’
மூத்த இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணியின் கூற்றுப்படி, நமது உடல் சர்க்காடியன் ரிதம் என்று அழைக்கப்படும் ஓர் உயிரியல் கடிகாரத்தைப் பின்பற்றுகிறது.
“இது 24 மணிநேர உள்கடிகாரம். நாம் எப்போது தூங்குகிறோம், எப்போது விழிக்கிறோம், பசியெடுக்கும் நேரம், சுறுசுறுப்பாக உணரும் மற்றும் சோர்வாக உணரும் காலகட்டம் எனப் பல்வேறு உடலியல் செயல்பாடுகளைத் தீர்மானிப்பது இந்தக் கடிகாரம்தான்,” என்கிறார் அவர்.
மூளையால் கட்டுப்படுத்தப்படும் இந்த உயிரியல் கடிகார முறை, ஒளி மற்றும் இருளுக்கு தக்கபடி வினையாற்றுவதாகவும் அவர் விவரித்தார். “பகலில் நாம் சுறுசுறுப்பாக உணர்வோம், இரவில் உடல் ஓய்வுக்குத் தயாராகிறது. அதோடு, இரவில் இதயம், நுரையீரல் போன்ற சில குறிப்பிட்ட பாகங்கள் தவிர பிறவற்றின் செயல்பாடுகளும் குறைகின்றன.”

“காலையில் இருந்து மதியம் வரை சுறுசுறுப்பாக இருப்போம். அதற்குப் பிறகு சிறிது சிறிதாக உடல் ஓய்வை நோக்கி நகரத் தொடங்கும். இதே செயல்பாடுதான் மூளை முதல் இரைப்பை, குடல் வரை அனைத்திலுமே நடக்கிறது. ஒருவர் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த உணவு இரைப்பையில் இருந்து வெளியே வருவதற்கு மூன்று மணிநேரம் எடுக்கும். இரவு சுமார் 7 மணிக்கு சாப்பிட்டால், 10 மணிக்குத் தூங்கச் செல்லும்போது, குடல் அடுத்த 8 மணிநேரத்திற்கு ஓய்வெடுக்க, தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள தேவையான வேலைகளைச் செய்யும்” என்று விளக்கினார் மருத்துவர் பாசுமணி.
ஆனால், இந்த உயிரியல் கடிகாரத்தின்படி ஒருவரது வாழ்க்கை முறை அமையவில்லை என்றால், அதன் விளைவாக அந்தக் கடிகாரம் குழம்பிவிடும் என்றும், அது உடலியல் செயல்பாடுகளில் தாக்கம் செலுத்தும் எனவும் கூறுகிறார் மூத்த இரைப்பை குடல் மருத்துவரான அருள் பிரகாஷ்.
பட மூலாதாரம், Getty Images
இரவில் பிரியாணி சாப்பிட்டால் என்ன நடக்கும்?
“நமது உடலியல் அமைப்பு, நள்ளிரவில் அதிக கலோரி கொண்ட உணவை ஜீரணிக்க ஏதுவான வகையில் வடிவமைக்கப்படவில்லை,” என்கிறார் மருத்துவர் அருள்பிரகாஷ்.
மேலும் பேசிய அவர், “அதிகளவிலான கலோரிகள் அடங்கிய உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடும் போது செரிமான செயல்முறை பாதிக்கப்படும். உதாரணமாக பிரியாணியை எடுத்துக் கொள்வோம். இது பொதுவாக, கார்போஹைட்ரேட், கொழுப்பு, உப்பு, எண்ணெய் ஆகியவற்றை அதிகளவில் கொண்டுள்ளது. நள்ளிரவில் அதைச் சாப்பிடும் போது, அதாவது, இரைப்பை மற்றும் குடல் ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் சாப்பிடுவது, பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்,” என்று தெரிவித்தார்.
“இதனால், இரவில் வளர்சிதை மாற்றம் குறையும். செரிமானம் ஆகும் வேகம் மட்டுப்படுவதால் உணவு நீண்டநேரம் வயிற்றிலேயே இருக்கும். அதனால், வயிறு வீக்கம், அமிலத்தன்மை, வாயு, அசௌகரியம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்” என்கிறார் மருத்துவர் அருள்பிரகாஷ்.

ஒரு நாளைக்கு என்ன தேவையோ அந்த அளவுக்கு மட்டும் சாப்பிடுவதுதான் சரியானது என்று அறிவுறுத்தும் அவர், இதுபோன்ற வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவதால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது, எடை கூடுவது, அதிகமான உணவு உடலில் சேர்வதால் கொழுப்பு அதிகரிப்பது என்று பல பின்விளைவுகளுக்கு வித்திடும் என்று எச்சரித்தார்.
பொதுவாக, பகலில் இதுபோன்ற உணவுகளை உட்கொள்ளும்போது, அதற்குப் பிறகு உடல் பல்வேறு பணிகளில் ஈடுபடுவதால், செரிமானத்திற்குத் தேவையான நேரம் கிடைக்கும். ஆனால், இரவில் அத்தகைய சூழல் அமைவதில்லை என்கிறார் மருத்துவர் பாசுமணி.
“நள்ளிரவு 12 மணிக்கு ஒருவர் பிரியாணி சாப்பிட்டால், அது செரிமானம் ஆவதற்கு 3 அல்லது 4 மணி ஆகும். அதுவரைக்கும் இரைப்பை மற்றும் குடலுக்கு ஓய்விருக்காது. பிறகு அப்படியே, அது மறுநாளுக்கான வேலைகளைத் தொடங்க வேண்டும். இது அதற்கான உயிரியல் கடிகாரத்தைக் குழப்பிவிடுவதால், அதன் செயல்பாடுகள் பாதிக்கப்படும்,” என்று விளக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
இரவில் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் என்ற ஆய்விதழில் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வறிக்கை, நள்ளிரவில் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை விரிவாக ஆராய்ந்தது.
ஆய்வுக் குழு, சராசரியாக சுமார் 8.7 ஆண்டுகளுக்கு பல்வேறு நபர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்து இந்த ஆய்வை மேற்கொண்டது.
அவர்களில், இரவு தாமதமாகச் சாப்பிடாதவர்களை (அதாவது இரவு 10 மணிக்கு முன்பாகச் சாப்பிட்டு முடித்தவர்கள்), 10 மணிக்குப் பிறகான நேரங்களில் சாப்பிட்டவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ஆய்வுக் குழு முக்கியமான ஒன்றைக் கண்டறிந்தது.
அதன்படி, “இரவில் மிகவும் தாமதமாகச் சாப்பிட்டவர்களுக்கு, குறிப்பாக நீரிழிவு நோய் பாதிப்பு வரும் ஆபத்து அதிகமாக இருந்தது. குறிப்பாக, இரவு 11 மணி முதல் 12 மணி வரை மற்றும் நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரையிலான நேரத்தில் சாப்பிட்டவர்களிடையே இந்த ஆபத்து அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது.”
இரவு 11 மணிக்கு உள்ளாக சாப்பிட்டோருக்கு இவ்வளவு தீவிரமான அபாயம் இல்லை என்றும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அடிக்கடி நள்ளிரவில் சாப்பிடுவோருக்கு நீரிழிவு உள்படப் பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
அந்த ஆய்வின்படி, இரவில் சாப்பிடும் உணவில், உதாரணமாக எண்ணெய், வறுத்தவை, சர்க்கரை அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்ற அதிக கலோரி கொண்ட உணவுகளாக இருந்தால், ஆபத்து அதிகம்.
பட மூலாதாரம், Getty Images
இரவு நேரத்தில் சாப்பிடுவது குறைந்த கலோரிகளை கொண்ட, இலகுவான உணவுகளாக இருந்தால், அதிக அபாயம் இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
“இப்படியாக நள்ளிரவில் தொடர்ந்து சாப்பிடுவது, உடல் பருமன், கொழுப்பு, நீரிழிவு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். அதோடு, குடலில் அமிலத்தன்மை சீர்குலைவது, செரிமானக் கோளாறு ஆகிய பாதிப்புகளும் ஏற்படும்” என்றார் மருத்துவர் அருள் பிரகாஷ்.
ஏனெனில், “ஓரளவு கொழுப்பைத்தான் நம் உடலால் செரிக்க முடியும். மீதமுள்ள அனைத்துமே உடலிலேயே தங்கிவிடும். இதனால் நீண்டகால அளவில் பார்த்தால், மாரடைப்பு வரைக்கும்கூட இட்டுச்செல்லும்,” என்று எச்சரித்தார்.
இரவு ஷிப்ட் பணியாளர் என்ன செய்யலாம்?
இரவுநேரத்தில் சாப்பிடுவதால் ஒரு சதவிகிதம்கூட நன்மை இல்லை என்று கூறிய அவர், இயன்ற அளவுக்கு உடலின் உயிரியல் கடிகாரத்தின் அடிப்படையில் செயல்பாடுகளை, திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது என்று அறிவுறுத்தினார்.
ஆனால், இன்றைய சூழலில் பல துறைகளில் இரவுநேர ஷிஃப்ட்களில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் பலருக்கும் இருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தொழிற்சாலை ஊழியர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் எனப் பலரும் இரவு முழுக்கப் பணியாற்றும் சூழலில் உள்ளனர். இந்த நிலையில் ஒருவர் இரவு முழுக்க விழித்திருக்கும் போது எதையுமே சாப்பிடாமல் இருக்கவும் முடியாது.
அப்படியான வாழ்க்கை மற்றும் பணிச் சூழலைக் கொண்டவர்களுக்கு, பகலில் தூங்குவது ஒரு வழக்கமாக இருக்கும். அப்படிப்பட்டோருக்கு மருத்துவர்கள் கூறும் உயிரியல் கடிகாரத்தின் செயல்முறை வேறாக இருக்குமா அல்லது நள்ளிரவில் சாப்பிடுவது அத்தியாவசியமான ஒன்றாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

அதுகுறித்துக் கேட்டபோது, “அனுதினமும் ஒரே மாதிரியாக இரவு முழுக்க விழித்திருந்துவிட்டு, பகலில் ஓய்வெடுக்கும் நபராக இருந்தால், அவர்களின் உடலிலுள்ள சர்காடியன் ரிதம், அதற்கேற்ப தகவமைந்திருக்கும். ஆனால், நடைமுறையில் அப்படி நடப்பதில்லை. ஒருவர் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இரவுப் பணியில் கண் விழித்திருந்துவிட்டு, வார இறுதியில் இரண்டு நாட்களுக்கு பகலில் விழித்திருக்க வேண்டியுள்ளது.
இப்படி, ஒவ்வொரு வாரமும் தூக்கம் மற்றும் விழித்திருக்கும் நேரத்தை ஏற்ற இறக்கத்துடன் மாற்றியமைத்துக் கொண்டே இருப்பது, உயிரியல் கடிகாரத்தைக் குழப்பிவிடும். எப்போது தூங்க வேண்டும், எப்போது செயல்பட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என உடலுக்குக் குழப்பம் ஏற்பட்டால், அது ஒட்டுமொத்த இயக்கத்தையே பாதிக்கும்” என்று விளக்கினார் மருத்துவர் அருள்பிரகாஷ்.
அதேவேளையில், இரவுப் பணியில் இருப்பவர்கள் சாப்பிடுவது குறித்துப் பேசிய மருத்துவர் பாசுமணி, இரவு முழுக்க விழித்திருப்பவர்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், பிரியாணி, நூடுல்ஸ் போன்ற அதிக கலோரி கொண்ட உணவுகளுக்குப் பதிலாக, பழங்கள், பழச்சாறுகள், முட்டை, காய்கறிகள் போன்ற எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும் என்று பரிந்துரைக்கிறார் பாசுமணி.
மேலும், “இரவு வேலையில் இருப்பவராகவே இருந்தாலும், பணி முடிந்து வந்து காலையில் தூங்கச் செல்லும் முன்பாகத் தனது காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தூங்கி எழுந்த பிறகு அடுத்த வேளை உணவை உட்கொள்ள வேண்டும்.
இறுதியாக இரவில் பணிக்குச் செல்லும் முன்பாக சாப்பிட்டுவிட வேண்டும். இவை போக, பணிச்சூழலின் இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடக் கூடிய எதுவாக இருந்தாலும் கலோரி குறைவான, எளிமையான உணவாக இருக்க வேண்டும்,” என்று அறிவுறுத்தினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு