பட மூலாதாரம், Rachel Bloor
-
- எழுதியவர், டிஃபானி டர்ன்புல்
- பதவி, சிட்னி
திங்கட்கிழமை நள்ளிரவு தனது படுக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ரேச்சல் ப்ளூர் என்ற ஆஸ்திரேலிய பெண், நள்ளிரவில் தூக்கம் கலைந்தபோது தன்னுடைய மார்பின் மேல் கனமான பொருள் ஒன்று இருப்பதை உணர்ந்தார்.
தனது செல்ல நாய்க்குட்டி தான் தன் மீது படுத்திருக்கிறது என்று நினைத்த அவர், தனது கைகளால் துழாவினார். ஆனால் தொட்டதும் வழுவழுப்பாக இருந்ததும், நெளிந்து கொண்டிருந்ததும் அது தனது நாய்க்குட்டி இல்லை என்று அவருக்கு உணர்த்தியது.
அதிர்ச்சியடைந்த ரேச்சல் ப்ளூர், போர்வையைத் தனது கழுத்து வரை இழுத்துக்கொண்டு அதற்குள் பதுங்கிக் கொண்டார். அருகில் இருந்த அவரது கணவர் படுக்கையருகே இருந்த லைட்டை போட்டபோது, படுக்கையில் இருந்தது பாம்பு என்பது தெரியவந்தது.
‘2.5 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு’
“அசையாதே. உன் மேல் சுமார் 2.5 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று படுத்திருக்கிறது என்று கணவர் சொன்னார்,” என்று ரேச்சல் ப்ளூர் பிபிசியிடம் தெரிவித்தார்.
முதலில் ரேச்சலின் வாய் உளறியது. சமாளித்துக் கொண்ட அவர், அறையில் இருந்த தனது செல்லப்பிராணிகளை உடனடியாக வெளியேற்றும்படி உத்தரவிட்டார்.
