• Mon. Oct 27th, 2025

24×7 Live News

Apdin News

நவம்பரில் டில்லி செல்கின்றார் சஜித் – Vanakkam London

Byadmin

Oct 27, 2025


உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் நவம்பரில் டில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட இந்த விஜயத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த விஜயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் ஒருசிலர் மாத்திரம் இடம்பெறுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரலில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தியா – இலங்கை நட்புறவை வலுப்படுத்துவதில் சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் தாம் பாராட்டுவதாக பிரதமர் மோடி இதன் போது தெரிவித்திருந்தார்.

அத்தோடு ‘எமது விசேட கூட்டாண்மைக்கு இலங்கையில் கட்சி வேறுபாடுகளின்றி சகலராலும் ஆதரவு வழங்கப்படுகின்றது. எமது ஒத்துழைப்பும், உறுதியான அபிவிருத்திப் பங்களிப்பும் எமது இரு நாடுகளின் மக்களினதும் நலன்களால் வழிநடத்தப்படுகின்றன,’ என பிரதமர் மோடி சஜித்துடனான சந்திப்பின் பின்னர் தெரிவித்திருந்தார்.

இலங்கையும் இந்தியாவும் வளர்ச்சி வர்த்தகத்தில் மட்டுமல்ல, எமது மக்களின் நலனிலும் அளவிடப்படும் ஒரு பகிரப்பட்ட முன்னேற்றத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச பிரதமர் மோடியிடம் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு டில்லி சென்றிருந்ததோடு, அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு டில்லி சென்றிருந்தார்.

இந்நிலையில் விரைவில் சஜித் பிரேமதாச டில்லி செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin