• Fri. Oct 10th, 2025

24×7 Live News

Apdin News

நவாஸ்கனி வெற்றிக்கு எதிரான வழக்கில் ஒபிஎஸ் நேரில் ஆஜராகி 38 ஆவணங்கள் சமர்ப்பிப்பு | OPS appeared in court submitted 38 documents for election oriented case

Byadmin

Oct 9, 2025


சென்னை: ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ்கனி வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி 38 ஆவணங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, தன்னை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை விட, ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், நவாஸ்கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வேட்புமனுக்களில் உண்மை தகவல்களை மறைத்துள்ளதாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒபிஎஸ் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான 38 சாட்சி ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது நவாஸ்கனி தரப்பில், ஒபிஎஸ் தாக்கல் செய்த சில ஆவணங்கள் குறைப்பாடுகளுடன் இருப்பதாகவும், முழுமையாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, குறைப்பாடுகளை சரி செய்து முழுமையான ஆவணங்களை தாக்கல் செய்ய ஒபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.



By admin