சென்னை: தவெக தலைவர் விஜய் தனது தமிழக சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.13) அன்று திருச்சியில் தொடங்கினார். அந்த சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து நாளை (செப்.20) நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக தவெக தலைமை நிலையக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஐகோட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், ‘‘தவெக தலைவ தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகம் முழுவதும் அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை எந்தவொரு பாரபட்சமும் பார்க்காமல் உடனுக்குடன் அனுமதி வழங்க டிஜிபிக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொண்டர்கள் வரவேண்டும் என்றும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது என்றும் நிபந்தனை களை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
அதேபோல அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும்போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையிலான விதிமுறைகளை வகுக்க வேண்டும். அரசியல் கட்சியினருக் கிடையே பாரபட்சம் காட்டக்கூடாது.
பொது சொத்துகள் அல்லது பொதுமக்களின் தனிப்பட்ட உடமைகள் சேதப்படுத்தப்பட்டால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும்’’ எனக்கூறி, இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தவெக தரப்பில் நாளைய சுற்றுப்பயணம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகே காலை 11.00 மணிக்கும், திருவாரூர் மாவட்டம், நகராட்சி அலுவலகம் அருகில், தெற்கு வீதியில் மாலை 3.00 மணிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.