2
இந்தியா – நாகப்பட்டினம் வேளாங்கண்ணி மாதா தேவாலயம் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற தேவாலயமாகும்.
வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தின் கொடியேற்றம், நாளை வெள்ளிக்கிழமை (29) மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது.
தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து வைக்கவுள்ளார்.
அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடைபெறும். விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் மற்றும் அருட்சகோதரிகள் கலந்துகொள்வர்.
திருவிழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி மற்றும் தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
மறுநாள் 8ஆம் திகதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறும். அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில், திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
திருவிழாவையொட்டி நாகை மாவட்ட பொலிஸ் தலைமை அதிகாரி செல்வகுமார் தலைமையில் ஏராளமான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் வேளாங்கண்ணிக்கு இயக்கப்படுகின்றன.