கடுங்குளிரில் சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கும் நிர்வாண துறவிகள்….
அந்தக் கடுங்குளிரிலும், முழுவதும் சாம்பல் பூசப்பட்ட அவர்களது உடலில் ஓர் ஆடைகூட இல்லை. சில நேரங்களில் அவர்கள் இடுப்பில் சாமந்திப் பூக்களால் ஆன மாலை, சில நேரங்களில் கைகளில் மேளம்…
பிரயாக்ராஜில் இந்த ஆண்டு கும்பமேளாவில் பல சாதுக்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆயினர்.
தங்களது வினோதமான தவமுறைகள் மற்றும் நடத்தை காரணமாக செய்திகளில் இடம் பிடிப்பவர்கள் நாகா சாதுக்கள். இவர்களில் சில சாதுக்கள் ஆக்ரோஷமான நடவடிக்கைக்காகவும், பத்திரிகையாளர்களைத் தாக்கியதற்காகவும் செய்திகளில் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இந்த சாதுக்கள் ஒரு காலத்தில் போராளி சாதுக்களாக இருந்ததாக வரலாறு கூறுகிறது.
கடந்த 18ஆம் நூற்றாண்டில் நடந்த பானிபட் யுத்தமாகட்டும், அகமது ஷா அப்தாலியுடன் போரிட்டதாகட்டும், அல்லது பல ராஜபுத்திர அரசர்களுக்கு ராணுவ உதவி அளித்ததாகட்டும் , நாகா சாதுக்கள் அவற்றில் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
நாகா சாதுக்கள் யார்?
இந்து மதத்தின் இரண்டு பிரிவுகளான சைவமும் வைணவமும் இந்திய ஆன்மீக வரலாற்றில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
சிவனை நம்புகிறவர்கள் சைவர்கள் என அழைக்கப்படுகிறார்கள்; விஷ்ணுவின் அவதாரங்களான ராமர் மற்றும் கிருஷ்ணரை நம்புகிறவர்கள் வைணவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
மொத்தம் உள்ள 13 அகாடாக்களும் சைவம், வைணவம் மற்றும் சீக்கியத்தின் செல்வாக்கு அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
வைணவ அகாடாக்களில் உள்ள சாதுக்கள் வைராகிகள் என்றும் சைவ அகாடாக்களில் உள்ள சாதுக்கள் தஷ்னமி அல்லது சன்னியாசிகள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். ஆகவே நாகா சன்னியாசிகள் சைவ அகாடாக்களில் மட்டும் காணப்படுகின்றனர்.
கும்பமேளாவில் காணப்பட்ட நாகா சாதுக்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்கள் எவ்வாறு உருவாகிறார்கள், வழக்கமாக எங்கு வாழ்வார்கள் மற்றும் எப்படி தீட்சை பெறுகிறார்கள் என்பது குறித்து நீங்கள் இங்கு படிக்கலாம்.
நாகா சாதுக்கள் பற்றிய பல கேள்விகளுக்கு விடை தேடியபோது, அவர்களில் பலர் தங்களது முன்னோர்கள் போராளிகளாக இருந்தார்கள் எனச் சொல்லிக் கொண்டார்கள்.
பத்திரிகையாளர் தீப்தி ராவத், தன்னுடைய “Kumbh Mela : A Perspective” (கும்ப் மேளா – ஒரு பார்வை) என்ற நூலில் இதுகுறித்து தகவல்களை அளித்துள்ளார்.
“நாட்டில் அந்நிய சக்திகள் பீதியை ஏற்படுத்தியபோது, புனிதர்கள் சிலர் சங்கராச்சாரியாரிடம் சென்று மதத்தைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்திப் போராட அனுமதி கேட்டனர். சங்கராச்சாரியார் அதை எதிர்த்தார்.”
“ஆனாலும், ஒரு குழுவினர் பிரிந்து சென்று ஆயுதங்களை ஏந்தினர். அறநூல்களுடன் அவர்கள் ஆயுதப் பயிற்சியும் மேற்கொண்டனர். அவர்கள் அந்நியர்களுடன் போராடி இந்து மதத்தைப் பாதுகாத்தனர்,” என அந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற நாகா சாதுக்களை கொண்ட ரிசர்வ் படைப்பிரிவு
பழைய அகாடாவுடன் தொடர்புடைய தனபதி மஹந்த் பிரசாந்த் கிரி என்ற நாகா சாதுவிடம் பேசும்போது அவரும் இதே போன்றுதான் தெரிவித்தார்.
“எங்கள் முன்னோர் சனாதன தர்மத்தை பாதுகாக்கப் போராடினர், அதற்கு அவர்கள் அற நூல்களுடன் ஆயுதங்களையும் ஏந்தினர்,” என்று அவர் கூறினார்.
கிட்டத்தட்ட அனைத்து நாகா சாதுக்களும் இதைக் கூறினாலும், வரலாற்று உண்மை வேறாக இருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
தீப்தி ராவத் தன்னுடைய ‘கும்ப் மேளா: எ பெர்ஸ்பெக்டிவ்’ என்ற நூலில் “இந்த சாதுக்கள் எப்போது ஆயுதங்களை எடுத்தார்கள் என்பதற்கு வரலாற்றில் திடமான குறிப்புகள் ஏதும் இல்லை. இருப்பினும், இந்த சாதுக்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தி எப்படி அரசியல் அதிகாரத்துடன் தொடர்புகொண்டு பொருளாதார சக்தி பெற்றார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாகா சாதுக்கள் பயிற்சி பெற்ற ரிசர்வ் ஆயுதப்படை போலச் செயல்பட்டதாக பல வரலாற்று ஆசிரியர்களும் சொல்கின்றனர்.
சில கிரிகள் மற்றும் கோஸாவிகள் அவர்களுடைய பயிற்சி பெற்ற படையுடன் ஆவத் நவாப், பரத்பூரின் ஜாட் ராஜா, பனாரஸின் ராஜா, பண்டல்காண்டின் ராஜாக்கள், மராத்திய ராஜா மாதவ்ஜி சிந்தியா, ஜெய்ப்பூர் மற்றும் ஜெய்சல்மரின் மகாராஜாக்களுக்காகப் போரிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் முகலாயர்களுக்காகப் போரிட்டதற்கும் வரலாற்றில் பல ஆதாரங்கள் உள்ளன.
அதற்குப் பதிலாக, அப்போதைய அரசர்களிடம் அவர்கள் ஆண்டு சம்பளமும், நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
வரலாற்று ஆசிரியர் ஆனந்த் பட்டாசார்யாவின் “தி தஸ்னமி சன்னியாசிஸ் ஏஸ் ஏஸ்செடிக்ஸ் அண்ட் வாரியர்ஸ் இன் தி எய்டீன்த் அண்ட் நைன்டீன்த் செண்சுரீஸ்” என்ற நூலை மேற்கோள் காட்டும் தீப்தி ராவத், “போதுமான ஆதாரங்கள் இல்லாததால். தஸ்னமி நாகா சாதுக்கள் எப்போது தோன்றி பரவினார்கள் என்பதைக் கூறுவது கடினம். இருப்பினும், அவர்களின் இருப்பு மொகலாய பேரரசின் வீழ்ச்சியின்போது வெளிச்சத்திற்கு வந்ததாகத் தெரிகிறது.
இந்தக் காலகட்டத்தில் பிராந்திய அரசுகளின் கை ஓங்கியபோது தஸ்னமி சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியது. அதன் பின்னர், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் எதிர்க்கப்படும் வரை அவர்கள் வேகமாகப் பரவினர். அவர்கள் துணை ராணுவப் படைகளாக இந்தியா முழுவதும் பரவிக் கிடந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
18ஆம் நூற்றாண்டில் செயல்பட்ட பெரிய நாகா சாதுக்கள் படை
இந்திய வரலாற்றாசிரியர் சர் ஜாதுநாத் சர்க்கார் எழுதிய ‘எ ஹிஸ்டரி ஆஃப் தஸ்னமி சன்னியாசிஸ்’, என்ற புத்தகத்தில் நாகா சாதுக்கள் பற்றியும் அவர்கள் போரிட்ட பல்வேறு யுத்தங்கள் குறித்தும் விரிவான தகவல்களை அளித்துள்ளார்.
அவர்கள் எந்த அரசர்களுக்காகப் போரிட்டனர், எப்போது போரிட்டனர் என்ற விரிவான வரலாற்றை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது புத்தகத்தில் அவர், 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று முக்கிய தஸ்னமி நாகா சாதுக்கள் பற்றிய தகவல்களைத் தருகிறார். நாகா சாதுக்களில் ராஜேந்திர கிரி கோஸவி மற்றும் அவரது சீடர்களான இரண்டு சகோதரர்கள் அனுபகிரி கோஸவி மற்றும் உம்ராவ்கிரி கோஸவி ஆகியோரின் வரலாற்றை அவர் விவரித்துள்ளார்.
அனுபகிரி மற்றும் உம்ராவ்கிரி ஆகிய இரண்டு நாகா சாதுக்கள் போராளிகளாக முக்கியப் பங்காற்றியிருப்பதாகப் பார்க்கப்படுகிறது. அவர்கள் உச்சத்தில் இருந்தபோது அவர்கள் காலாட்படை, குதிரைப்படை என 40,000 நாகா சாதுக்கள் கொண்ட படையை வழிநடத்தினர், என்று சர் ஜாதுநாத் சர்கார் தனது படைப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1751ஆம் ஆண்டு முதல் 1753 வரை ராஜேந்திர கிரி, முகலாய அரசர் அகமத் ஷாவின் வாஸிராக(பிரதமர்) இருந்த சஃப்தர் ஜங்கிற்கு வேலை செய்தார். அந்தக் காலத்தில் அவாத்தின் ஆட்சியாளராக இருந்த சஃப்தர் ஜங்கின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளிலும் ராஜேந்திர கிரி ஒரு முன்னணி வீரராக இருந்தார்.
கடந்த 1753இல் ராஜேந்திர கிரியின் இறப்புக்குப் பிறகு அவரது சீடர்களான அனுப் கிரி மற்றும் உம்ராவ் கிரி, சஃப்தர் ஜங்கையும் அதன் பின்னர் அவரது மகன் ஷுஜா-உத்- தவ்லாவையும் தொடர்ந்து ஆதரித்து அவர்களுக்காகப் பணியாற்றினர்.
அகமத் ஷா அப்தாலிக்கு எதிராக போராடிய நாகா சாதுக்கள்
கடந்த 1756இல் ஆஃப்கானிஸ்தானின் அகமது ஷா அப்தாலி இந்தியாவின் மீது படையெடுத்தார். அப்தாலிக்கு எதிராக அனுப்கிரி தலைமையில் பல போர்கள் நடைபெற்றதாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.
நாகா சாதுக்கள் தொடர்ந்த இந்தப் போரின் விவரங்களை சர் ஜாதுநாத் சர்க்கார் தனது “எ ஹிஸ்டரி ஆஃப் தஸ்னமி நாகா சன்னியஸிஸ்’ நூலில் விவரித்துள்ளார்.
அவர் அளித்த தகவலின்படி, நாகா சாதுக்கள் அகமது ஷா அபதாலியை மதுராவில் நேரடியாக எதிர்கொண்டனர். அப்தாலி உருவாக்கிய குழப்பத்தைத் தடுக்க நாகா சாதுக்கள் முன்வந்து போராடினர்.
“அப்தாலி சூறையாடியதற்கு எதிராக சுமார் 40,000 நாகா சாதுக்கள் போராடினர். அவர்களில் சுமார் 2,000 நாகா சாதுக்கள் போரில் உயிரிழந்தனர். ஆனால் அவர்கள் கோகுலத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில் அவமதிக்கப்படாமல் காப்பாற்றினர்,” என்கிறார் சர் ஜாதுநாத் சர்க்கார்.
மராட்டிய அதிகாரத்துடன் நாகா சாதுக்களின் உறவு வளர்ந்தது எப்படி?
கடந்த 1750இல் வட இந்தியாவில் அரசியல் நிலைத்தன்மை இல்லாத சூழல் இருந்தது. அந்த நேரத்தில், பேஷ்வா பாலாஜி பாஜிராவ் தலைமையிலான மராத்தியர்கள் வட இந்தியாவில் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்த விரும்பினர். 1759இல் நஜிப்-உத்- தவ்லாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியைக் கைப்பற்ற மராட்டியர்கள் திட்டமிட்டிருந்தனர். அவரது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளை நோக்கி அவர்கள் படையெடுத்தனர்.
வலுவான மராட்டிய படை ஒருபுறம் தாக்கிக்கொண்டிருக்க, மறுபுறம் ஏராளமான நாகா சாதுக்களை கொண்ட படை நஜிப்-உத்-தவ்லாவுக்கு உதவ முன்னேறிக் கொண்டிருந்தது. இந்த யுத்தம் அனுப்கிரி மற்றும் உம்ராவ்கிரி தலைமையில் நடைபெற்றது.
மராட்டிய படைகளைத் தடுத்து நிறுத்துவதில் நாகா சாதுக்கள் முக்கியப் பங்காற்றினர். மராட்டியர்களிடம் இருந்து தன்னையே காத்துக்கொள்ள நஜிப்-உத்-தவ்லா வலுவான சுக்ததல் கோட்டையில் தஞ்சமடைந்தார்.
அந்த நேரத்தில், அவரைப் பிடிப்பதற்காக மராட்டிய படைத் தலைவர் கோவிந்த் பல்லால், தனது 10,000 குதிரைப்படையினருடன் நஜிபாபாத் நோக்கிப் படையெடுத்தார்.
இந்த முக்கிய தருணத்தில், நாகா போராளிகள் மராட்டியர்களை இரவில் தாக்கினர். மராட்டியர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அவர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த எதிர்பாராத தாக்குதலில் மராட்டியர்கள் பெரும் இழப்பைச் சந்தித்தனர். இதில் அவர்களுடைய வீரர்களில் 200-300 பேர் கொல்லப்பட்டனர். பலர் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டதுடன் அவர்களின் ஆயுத தளவாடங்களில் பெரும்பகுதி பறிமுதல் செய்யப்பட்டது.
மாராட்டியர்களின் தாக்குதலில் நஜிப்-உத்- தவ்லாவை காப்பாற்றியவர்கள் நாகா சாதுக்கள்தான்.
அதன் பின்னர் ஷுஜா-உத்-தவ்லாவின் படை நஜிப்-உத்-தவ்லாவுக்கு உதவ வந்தது. இறுதியில் மராட்டியர்கள் பின்வாங்க வேண்டியிருந்தது. சுருக்கமாகச் சொல்வதானால், இந்தப் போரில் மராட்டியர்களை பின்வாங்கச் செய்ததில் நாகா சாதுக்களின் பங்கு முக்கியமானது என்கிறார் சர் ஜாதுநாத் சர்க்கார்.
பானிபட் யுத்தத்தில் நாகா சாதுக்களின் பங்கு என்ன?
அனுப்கிரி தலைமையிலான நாகா சாதுக்கள் மூன்றாம் பானிபட் யுத்தத்தில்(1761) முக்கியப் பங்காற்றினர். அந்த போரில் அவர்கள் முகலாய பேரரசர் மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் பக்கம் நின்று மராட்டியர்களுக்கு எதிராகப் போரிட்டனர்.
உண்மையில் அவர்களது நிர்வாணக் கோலம் ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “இஸ்லாமியர்கள் முன் தங்களது பிறப்புறுப்புகளையும் பிட்டங்களையும் காட்டுவதற்கு இவர்களுக்கு எப்படி சுதந்திரம் இருக்கலாம்?” என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
சாதுக்களின் நிர்வாணக் கோலத்தால் அதிருப்தியடைந்த ஆப்கன் ஆட்சியாளர்கள் அவர்களைத் தங்களது முகாமிலிருந்து விலகியிருக்க உத்தரவிட்டனர்.
இருப்பினும், அந்த போரில் நாகா சாதுக்கள் அவர்கள் பக்கம் நின்று விசுவாசமாகப் போரிட்டனர். மராட்டியர்கள் இந்த யுத்தத்தில் வீழ்த்தப்பட்டனர். மராட்டிய வீரர்கள் விஸ்வாஸ்ராவ் மற்றும் சதாசிவ்ராவ் பஹு ஆகிய இருவரும் போரில் உயிரிழந்தனர்.
அந்த நேரத்தில் விஸ்வாஸ்ராவ் மற்றும் சதாசிவ்ராவ் பஹுவின் இறுதிச் சடங்குகளை கங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர், மற்றும் சந்தனக் கட்டைகளைக் கொண்டு நாகா துறவி அனுப்கிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நிறைவேற்றியதாக ஜாதுநாத் சர்க்காரின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களைத் தனது ‘கும்ப் மேளா: எ பெர்ஸ்பெக்டிக்வ்’ புத்தகத்தில் அளித்துள்ள பத்திரிகையாளர் தீப்தி ராவத், ஷபீனா கஷ்மீயின் ஆய்வுக் கட்டுரையை மேற்கோள் காட்டியுள்ளார்.
கடந்த 1761ஆம் ஆண்டு பானிபட் யுத்தத்திற்குப் பிறகு, நவாபின் உத்தரவுப்படி, போரில் உயிரிழந்த மராட்டிய வீரர்களின் உடல்களை, நாகா வீரர்கள் இந்துமத மரபுகள்படி தகனம் செய்தனர் என “பிரம் ரிலிஜியஸ் ரேடிகலிஸாம் டு ஆர்மி பட்டாலியன்ஸ்- நாகாஸ் அண்ட் கோஸாவிஸ் இன் தி ஆர்மி ஆஃப் தி நவாப்- வாஜிர்ஸ் ஆஃப் அவாத் டில் தி 1770ஸ்” என்ற ஆய்வுக் கட்டுரையில் ஷபீனா கஷ்மீ கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ரோஹிலா மற்றும் ஆவாத் படைகள் மராட்டிய படைகளைத் தோற்கடித்தன. அந்த நேரத்தில் மராட்டிய தளபதிகள் விஸ்வாஸ்ராவ் மற்றும் சதாசிவ்ராவ் உள்ளிட்ட 28,000 மராட்டிய வீரர்களின் உடல்கள் பல கட்டங்களுக்குப் பிறகு ஷுஜா-உல்-தவ்லாவின் வசம் வந்தன. அவர் அவற்றைத் தகனம் செய்வதற்காக அனுப்கிரி கோஸாவியிடம் அளித்தார்.”
நாகா சாதுக்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவும் போரிட்டனர். அனுப்கிரி பல போர்களில் போரிட்டார். அவர் ‘ஹிம்மத் பகதூர்’ என்றும் அழைக்கப்பட்டார்.
கடந்த 1761இல், அவர் முகலாயர்களுடன் இணைந்து மராட்டியர்களுக்கு எதிராகவும், ஆப்கானிஸ்தனியர்களுக்கு ஆதரவாகவும் பானிப்பட் யுத்தத்திலும் போரிட்டார்.
மூன்று ஆண்டுகள் கழித்து, பக்ஸர் யுத்தத்தில் அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முகலாயர்கள் பக்கம் நின்று போரிட்டார். பின்னர் அனுப்கிரி, ஆங்கிலேயர்களுடன் சேர்ந்தார்.
ஆங்கில ஆசிரியர் வில்லியம் பின்ச்சின் கூற்றுப்படி, நாகா சாதுக்களின் அணி மாற்றத்தின் உதவியுடன்தான் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் அதிகாரத்தை நிறுவ முடிந்தது. அவர், வாரியர் ஏஸ்செடிக்ஸ் ஆண்ட் இண்டியன் எம்பயர்ஸ்’ என்ற புத்தகத்தை இதனை குறிப்பிட்டுள்ளார்.
“முகலாயர்கள் மற்றும் மராட்டியர்களின் வீழ்ச்சியையும் ஆங்கிலேயர்களின் வளர்ச்சியையும் கவனமாக ஆய்வு செய்தால், வரலாற்றில் அனுப்கிரி கோஸவியின் முக்கியத்துவம் தெளிவாகிறது,” என பின்ச் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1803இல் மராட்டியர்களை வீழ்த்தி டெல்லியை கைப்பற்ற ஆங்கிலேயர்களுக்கு உதவியதில் அனுப்கிரி கோஸாவி முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இந்த வெற்றிக்குப் பிறகுதான் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உலகில் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்தது, எனவும் அவர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
நாகா சாதுக்கள் பல ராஜபுத்திர அரசர்களுக்காகவும் போரிட்டனர். 18ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில், சூரஜ்மால் தலைமையிலான ஜாட் ஆட்சியாளர்கள் வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தினர். ராஜ்புதனா, ஜோத்பூர், ஜெய்சல்மர், பரோடா, கட்ச், மேவார், அஜ்மீர், மற்றும் ஜான்ஸியின் பல அரசர்களுக்காக நாகா சாதுக்கள் போரிட்டனர்.
ஆனால், ராஜேந்திர கிரி மற்றும் அவரது சீடர்களான உம்ராவ்கிரி மற்றும் அனுப்கிரி வரலாற்றில் அதிகம் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களது முக்கியத்துவம் அவாதின் நவாப், டெல்லியின் முகலாய பேரரசர், மற்றும் மராட்டிய மன்னர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தஸ்னமியில் வேறு எந்த நாகா சாதுவும் இவ்வளவு உயர்ந்த பொறுப்பை அடைந்தது இல்லை.
ஆனால் அவர்கள் தவிர, ராஜ்புதனா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களின் ஆட்சியாளர்களுக்காக தீரத்துடன் போரிட்ட நாகா துறவிகள் பலர் உள்ளனர்.
அவர்கள் உம்ராவ்கிரி போன்ற மாவீரர்களாக இல்லாவிட்டாலும். அவர்கள் வெளிப்படுத்திய வீரமும் விசுவாசமும் குறிப்பிடத்தக்கவை.
துரதிர்ஷ்டவசமாக அவர்களது வரலாறு பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடப்பதுடன், விரிவான பதிவுகள் இல்லை. அதனால் அவற்றை முழுமையாக ஆவணப்படுத்துவது வரலாற்று ஆய்வாளர்களுக்கு கடினமாகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு