சென்னை: மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நவீன உடற்பயிற்சி கூடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். அப்போது ஆண்களுக்கான உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டு, உடற்பயிற்சி கருவிகளை இயக்கி பரிசோதித்தார்.
அதேபோல், கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக, பட்டினம்பாக்கம் லூப் சாலையில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் சாந்தோம் கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதையும் துணை முதல்வர் திறந்துவைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன், மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.