நாகை: நாகையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவந்த மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாகை வந்திருந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை மாணவர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களைச் சந்தித்து ஊக்கமளித்தார். பயம் இன்றி தேர்வு எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்பள்ளி தேர்வு மையமாக செயல்படுவதால் அருகாமையிலுள்ள பள்ளி மாணவர்கள் சிறப்பு பேருந்தில் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களையும் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். “மாணவச் செல்வங்களே மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் தேர்வு எழுதுங்கள்.” என்று அப்போது அவர் அறிவுரை கூறினார்.
நாகை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 33 தேர்வு மையங்களில் 71 பள்ளிகளைச் சேர்ந்த ஆண்கள் 3002, பெண்கள் 3687 என மொத்தம் 6689 மாணவர்கள் எழுதுகின்றர். பள்ஸ் 1 பொதுத் தேர்வை 33 மையங்களில் 72 பள்ளிகளைச் சேர்ந்த ஆண்கள் 3257 பேர், பெண்கள் 4117 பேர் என மொத்தம் 7374 மாணவர்கள் எழுதுகின்றனர்.
தேர்வுப் பணியில் 671 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பறக்கும்படை உறுப்பினர்கள் 75 பேர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் 97 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 121 பேர் தேர்வு எழுதுகின்றனர். அவர்கள் சொல்வதை எழுதுபவர், கூடுதல் நேரம் உட்பட அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.