• Sat. Dec 21st, 2024

24×7 Live News

Apdin News

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் | Lankan pirates attack fishermen of Nagapattinam; cause damages to their fishing nets

Byadmin

Dec 21, 2024


நாகை: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களை கடுமையாக தாக்கி அவர்களிடமிருந்து வலை உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கோடியக்கரையில் ஏராளமான மீனவர்கள் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். அந்தவகையில் அக்கரைப்பேட்டை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு மூலம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த கண்ணன் மகன் ராஜ்குமார் (25), காளிமுத்து மகன் ராஜேந்திரன் (49), சென்னையை சேர்ந்த ம்னோகரன் மகன் நாகலிங்கம் (45) ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் வெள்ளிக்கிழமை இரவு கோடியக்கரைக்கு தென் கிழக்கே 25 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டு இருக்கும்போது அங்கு இரண்டு படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த கடற் கொள்ளையர்கள் ஆறுபேர், இவர்களது படகில் ஏறி மீனவர்களை இரும்புக் கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் உள்ளனர். இதில் ராஜ்குமாருக்கு தலை மற்றும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரனுக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. நாகலிங்கத்துக்கு உள்காயம் உள்ளது.

அரிவாளால் வெட்டி மீனவர்களை அச்சுறுத்திய கடற்கொள்ளையர்கள் அதைத் தொடர்ந்து படகில் இருந்த 300 கிலோ வலைகளை வெட்டி எடுத்து சென்றனர். அத்துடன் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்டவைகளையும் பறித்துச் சென்றனர். இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு கோடியக்கரைக்கு மீனவர்கள் திரும்பினர். அவர்களை சக மீனவர்கள் மற்றும் உறவினர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மற்றொரு படகில் கோடியக்கரையில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற பெருமாள்பேட்டையைச் சேர்ந்த சின்னையன் மகன் குமார் (48), காத்தவராயன் மகன் ஜெகன் (30), நடுக்காட்டான் மகன் லட்சுமணன் (40) ஆகியோர் 22 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களையும் தாக்கி மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றை பறித்துக் சென்றுள்ளனர். இந்த மீனவர்களுக்கு வெளிக் காயம் ஏதுமில்லை. உள்காயங்களுடன் நேற்று காலை கரைதிரும்பிய மீனவர்கள் தாங்கள் தாக்கப்பட்ட தகவலை தெரிவித்தனர்.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.



By admin