பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
சில சமயங்களில் ஒரு காணொளி மட்டுமே ஒருவரின் கடைசிச் சிரிப்பு, கடைசி குரலாக எஞ்சிவிடுகிறது.
சிந்த்வாராவைச் சேர்ந்த ஷிவானி தாக்கரேவுக்கு, அந்த காணொளி அவருடைய இரண்டு வயது மகள் யோஜிதாவுடையது, அவர் இப்போது இந்த உலகில் இல்லை.
மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லாவின் கூற்றுப்படி, சிந்த்வாரா, பேதுல் மற்றும் பாண்டுர்ணா மாவட்டங்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் இதுவரை 20 குழந்தைகள் கலப்படமான இருமல் மருந்தை (Contaminated Cough Syrup) குடித்ததால் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் அதிகபட்சமாக சிந்த்வாராவில் 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் யோஜிதாவும் ஒருவர்.
சிந்த்வாரா மாவட்ட ஆட்சியர் ஹரேந்திர நாராயண், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார்.
யோஜிதாவின் தாய் ஷிவானி தாக்கரே, அழுது அழுது கண்கள் சிவந்து காணப்படுகிறார்.
தன் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசிய ஷிவானி , “உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை, யோஜிதா வீடு முழுவதும் கலகலப்பாகச் சுற்றிக் கொண்டிருந்தாள். என்னால் அவளைச் சமாளிக்கவே முடியவில்லை. அவளுக்குக் காய்ச்சல் வந்தபோது, அருகில் இருந்த மருத்துவர் இருமல் மருந்தை எழுதிக் கொடுத்தார். நாங்கள் அவளுக்கு நான்கு வேளை மருந்து கொடுத்தோம்… அதன் பிறகு அவள் உடல்நிலை மோசமடைந்தது. எங்கள் கையால் நாங்களே எங்கள் மகளுக்கு விஷம் கொடுக்கிறோம் என்பது எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றார்.
அதிர்ச்சியில் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள்
பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
பராசியா பகுதியில் உள்ள தெருக்களிலும் கடைகளிலும் மக்கள் இருமல் மருந்து பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தங்கள் குழந்தைகளைப் பற்றி அச்சத்தில் உள்ளனர்.
திங்கட்கிழமை இரவு பிபிசியிடம் பேசிய சிந்த்வாரா மாவட்ட ஆட்சியர் ஹரேந்திர நாராயண், “எங்களிடமிருந்து எங்கோ தவறு நடந்திருக்கிறது. ஒரு அசுத்தமான மருந்து சந்தைக்கு வந்துள்ளது. அதனால் பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க, இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று கூறினார்.
யோஜிதாவின் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில், நான்கு வயது உசைத்தின் வீட்டிலும் அமைதி நிலவுகிறது. வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரிடமும் உசைத்தின் தாய், அவனது புகைப்படத்தைக் காட்டி, “உசைத் வீட்டில் இருந்தால், வாழ்த்துத் தெரிவிக்காமல் யாரும் சாலையைக் கடக்க முடியாது என்பது இந்த வட்டாரத்தில் அனைவருக்கும் தெரியும்,” என்று கூறுகிறார்.
உசைத்தின் வீடு பராசியாவின் மேகசின் லைனில் உள்ளது. வீட்டின் வெளியே உள்ள குறுகிய சாலையில் அதிகாரிகளின் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
முதலமைச்சர் மோகன் யாதவ் உசைத் வீட்டிற்கு வர உள்ளார். இந்தச் சந்திப்பிற்காக முழு அரசு நிர்வாகமும் தயாராகி வருகிறது.
எதிரில் உள்ள ஒரு கடையில் மக்கள் முதலமைச்சரின் வருகை மற்றும் இருமல் மருந்து மரணங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு முதியவர், “இப்போது முதலமைச்சர் இங்கு வந்து என்ன பயன்? அதற்குப் பதிலாக அவர் அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்து, இந்த விஷ இருமல் மருந்தைச் சந்தையில் விற்க அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிகவும் நல்லது,” என்கிறார்.
இருமல் மருந்து மரணங்களில் இதுவரை என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் பராசியாவில் அடுத்தடுத்துப் பல குழந்தைகள் இறந்து கொண்டிருந்தனர். ஆறு குழந்தைகள் இறந்த பிறகு நிர்வாகம் விழித்துக் கொண்டது. செப்டம்பர் 23 ஆம் தேதி, குழந்தைகள் தொடர்ந்து இறப்பது குறித்து அதிகாரிகள் விசாரணை தொடங்கினர்.
விசாரணையில், இருமல் மருந்து குடித்த பிறகு சிறுநீரகம் செயலிழந்ததால் குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த மருந்து தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்தச் மருந்து சிந்த்வாரா மற்றும் சுற்றியுள்ள நகரங்களில் விற்பனைக்குக் கிடைத்துள்ளது.
தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் அறிக்கையில், இந்த நிறுவனத்தின் ஒரு தொகுதி மருந்துகளில் 48.6 சதவீதம் டயெதிலீன் கிளைக்கால் (Diethylene Glycol) இருப்பது கண்டறியப்பட்டது. இதுதான் இதற்கு முன்னர் காம்பியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் குழந்தைகளின் மரணத்திற்குக் காரணமான ‘விஷ’ ரசாயனம் ஆகும்.
இந்த அறிக்கைக்குப் பிறகு, மத்தியப் பிரதேச மருந்து கட்டுப்பாட்டுத் துறை சனிக்கிழமை அக்டோபர் 4 அன்று இருமல் மருந்துக்குத் தடை விதித்தது.
மேலும், அரசு மருத்துவர் பிரவீன் சோனி, இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் பிறர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து மருத்துவரை கைது செய்தனர்.
மருத்துவர் பிரவீன் சோனி பராசியாவில் அரசு குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
இந்தச் சம்பவத்தில் மருத்துவர் கைது செய்யப்பட்டது தவிர, சிந்த்வாராவின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாநிலத்தின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று மாவட்ட ஆட்சியர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் ஆலையை ஆய்வு செய்த தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை 350க்கும் மேற்பட்ட குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது.
மருந்து அழுக்கான மற்றும் முற்றிலும் சுகாதாரமற்ற சூழலில் தயாரிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள காற்று வடிகட்டிகள் மற்றும் காற்றோட்ட அமைப்புகள் வேலை செய்யவில்லை, இயந்திரங்கள் துருப்பிடித்திருந்தன. மேலும், மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தண்ணீரும் அசுத்தமாக இருந்தது.
சரியான பில் அல்லது அனுமதி இல்லாமல் 50 கிலோ புரோப்பிலீன் கிளைகாலை (Propylene Glycol) நிறுவனம் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. புரோப்பிலீன் கிளைகால் மருந்து தயாரிப்புத் தரத்தில் (Pharmaceutical Grade) இல்லை.
இதில் எதிலீன் கிளைக்கால் மற்றும் டை எதிலீன் கிளைக்கால் உள்ளதா என்று சோதிக்காமல், நிறுவனம் அந்தப் புரோப்பிலீன் கிளைகாலை மருந்து தயாரிப்பில் பயன்படுத்தியது.
அறிக்கையின்படி, நிறுவனத்தில் தர உத்தரவாதப் பிரிவு எதுவும் இல்லை. மேலும், மருந்து பரிசோதனை, தொகுதி வெளியீடு அல்லது திரும்பப் பெறுதல் (Batch Release or Recall) போன்ற எந்த நடைமுறையும் வகுக்கப்படவில்லை.
மருந்து மாதிரிகள் திறந்த சூழலில் எடுக்கப்பட்டன. இதனால் அசுத்தம் (Contamination) ஏற்படும் வாய்ப்பு அதிகரித்தது.
மருந்துதான் மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டும் குடும்பம், ஏற்க மறுக்கும் அரசு
பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
பராசியாவைச் சேர்ந்த பிரகாஷ் யதுவன்ஷி கடந்த 10 நாட்களாகத் தன் மகனின் ஆவணங்களுடன் அலைந்து கொண்டிருக்கிறார்.
குடும்பத்தின் கூற்றுப்படி, அவரது 7 வயது மகன் திவ்யான்ஷும் இதே அசுத்தமான இருமல் மருந்து குடித்து, பின்னர் சிறுநீரகம் செயலிழந்ததால் உயிரிழந்தான்.
“என் மகன் செப்டம்பர் 2 ஆம் தேதி இறந்தான். சிறுநீரகம் செயலிழந்ததாகச் சொன்னதால், மருந்துதான் காரணம் என்று முதலில் எங்களுக்குத் தெரியவில்லை. மருந்துதான் சிறுநீரகம் செயலிழக்கக் காரணம் என்று மருத்துவர்களுக்கும் அப்போது தெரியவில்லை. 6-7 குழந்தைகள் இறந்த பிறகுதான் நிர்வாகம் விழித்துக் கொண்டது. இருமல் மருந்தால் சிறுநீரகம் செயலிழக்கிறது என்று டிவியில் கேட்டபோது, நாங்கள் எங்கள் மகனின் மருந்துகளைப் பார்த்தோம். அதில் அந்தச் மருந்தும் எழுதப்பட்டிருந்தது. மற்ற குழந்தைகளைப் போலவே அவனுக்கும் அதே அறிகுறிகள் மற்றும் நிலை இருந்தது,” என அவர் சொல்கிறார்.
அரசு தன் மகனின் மரணம் இருமல் மருந்தால் ஏற்பட்டது என்று ஏற்க மறுப்பதாக பிரகாஷ் யதுவன்ஷி குற்றம் சாட்டுகிறார்.
“நாங்கள் கடந்த 10 நாட்களாக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்கிறோம், ஆனால் யாரும் செவிசாய்க்கவில்லை. முதலமைச்சரைச் சந்திக்க முயற்சித்தேன், ஆனால் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவர்கள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க முயற்சிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.”
இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் பிபிசியிடம், “எங்களுக்குக் கிடைக்கும் சரியான விவரங்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். மேலும், சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்,” என்று கூறினார்.
குழந்தைகளின் சிகிச்சைக்காக சிலர் தங்கள் ஆட்டோவை விற்றனர், சிலர் நகைகளை விற்றனர். இப்போது குடும்பங்களின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது.
உசைத்தின் தந்தை யாசின் கான், “உசைத் எங்கள் பகுதியின் உயிர். அவனுக்குச் மருந்து கொடுத்தபோது, இரண்டு நாட்களுக்குப் பிறகு அவனுக்கு சிறுநீர் வெளியேறுவது நின்றுவிட்டது. மருத்துவர்கள் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாகக் கூறினர். நாங்கள் பராசியாவில் இருந்து சிந்த்வாராவுக்கும், அங்கிருந்து நாக்பூருக்கும் ஓடினோம், ஆனால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை,” என்று கூறினார்.
யாசின் சிகிச்சைக்காகத் தனது ஆட்டோ, மனைவியின் தையல் இயந்திரம் மற்றும் நகைகள் அனைத்தையும் விற்றுவிட்டார்.
அதே நேரத்தில், பிரகாஷ் யதுவன்ஷி, தன் மகனின் சிகிச்சைக்காக சுமார் 7 லட்சம் ரூபாய் செலவானதாகவும், இதற்காக தன் ஒரு ஏக்கர் வயலையும் அடகு வைக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.
“நாங்கள் பணத்தைப் பற்றி கவலைப்படவில்லை. வீட்டின் சேமிப்பு அனைத்தையும் செலவிட்டோம். வயலை அடகு வைத்தோம். எங்களுக்கு இரண்டு முறை ஏமாற்றம் ஏற்பட்டது. முதலில் குழந்தைக்கு விஷ மருந்து கொடுத்தோம். இப்போது இந்த மரணம் அதனால் தான் ஏற்பட்டது என்று அரசு ஏற்கத் தயாராக இல்லை. ஆனால் மருந்தால் தான் சிறுநீரகம் செயலிழந்தது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.”
“என் மகனுக்கு எந்த நோயும் இல்லை. நாங்கள் நோய்க்குச் சிகிச்சை அளிக்கச் சென்றோம்… ஆனால் மருந்து அவனுக்கு எதிரியாக மாறிவிட்டது. இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்,” என்று உசைத்தின் தந்தை கூறுகிறார்.
குழந்தைகள் இறந்த பிறகு, பராசியாவின் சுகாதார அமைப்பு அம்பலமாகிவிட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
சிறந்த சுகாதார வசதிகள் 150 கி.மீ தொலைவில்
பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
மத்தியப் பிரதேச அரசியலில் சிந்த்வாரா மாவட்டத்தின் பெயர் மிகவும் முக்கியமானது. இது காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் கோட்டையாகக் கருதப்பட்டது.
கமல்நாத் 1980 முதல் 2024 வரை சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சி இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது.
“அரசியல் லாபம் கிடைத்த பிறகு, இங்குள்ள தலைவர்கள் சிந்த்வாராவின் சுகாதார வசதிகளில் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. இங்கு சீரொலி பரிசோதனை (Sonography) மற்றும் டயாலிசிஸ் போன்ற அத்தியாவசிய சிகிச்சைகளை செய்ய முடிவதில்லை. இங்குத் தகுந்த மருத்துவ நிபுணர்கள் இல்லை. உடல்நிலை மோசமடைந்தால், இங்கிருந்து நாக்பூருக்கு நேரடியாகக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது,” என பராசியாவைச் சேர்ந்த விஜய் டஹாரியா கூறியுள்ளார்.
பராசியாவில் தனியார் மருத்துவமனைகள் நிறைந்து காணப்படுகின்றன. பராசியா பகுதியில் உள்ள 2.8 லட்சம் மக்களுக்கு முக்கிய அரசு மருத்துவமனையை தவிர ஒரேயொரு சமூக சுகாதார மையம் (Community Health Centre) மட்டும்தான் உள்ளது.
“சமூக சுகாதார மையத்தில் பல சிகிச்சைக் கருவிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பல இயந்திரங்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்த மருத்துவமனைக்கு அதிக மின்சாரம் தேவைப்படும். ஆனால் மருத்துவமனையில் போதுமான மின் நுகர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை,” என அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சுகாதார ஊழியர் பிபிசியிடம் கூறினார்.
“பெரிய இயந்திரங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன, எனவே இங்கு ஒரு கனரக மின்மாற்றி தேவை. அதை இயக்கத் தேவையான மின்மாற்றி இன்னும் நிறுவப்படாததால் எக்ஸ்ரே இயந்திரம் தூசு படிந்து கிடக்கிறது.” என்று அவர் கூறினார்.
பராசியாவில் சுகாதார வசதிகள் இல்லாததால் மக்கள் நாக்பூருக்குச் செல்ல வேண்டியுள்ளது.
மாவட்ட ஆட்சியரும் இதை ஒப்புக்கொண்டு, “இங்கு வரையறுக்கப்பட்ட அளவே வளங்கள் இருப்பதால், பெரும்பாலான மக்கள் தீவிர நோய்களுக்குச் சிகிச்சை பெற நாக்பூருக்குச் செல்கிறார்கள்,” என்று கூறுகிறார்.
பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
பிபிசி மராத்தி செய்தியாளர் பாக்யஸ்ரீ ராவத்தின் கூற்றுப்படி, சிந்த்வாரா மாவட்ட நோயாளிகள் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பிற தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாக்பூர் மாநகராட்சி சுகாதாரத் துறை அனைத்து நோயாளிகளின் நிலையையும் கண்காணித்து வருகிறது.
“நாக்பூரில் மொத்தம் 36 கடுமையான மூளையழற்சி நோய்க்குறி (அக்யூட் என்செபலைடிஸ் சிண்ட்ரோம் Acute Encephalitis Syndrome – AES) நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் இறந்துவிட்டனர். இறந்தவர்களில் 13 பேர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 6 பேர் கிழக்கு விதர்பா (மகாராஷ்டிரா) வைச் சேர்ந்தவர்கள்,” என நாக்பூர் மாநகராட்சி சுகாதார அதிகாரி மருத்துவர் தீபக் செலோகார் சொல்கிறார்.
இந்தச் சம்பவங்களில் இரண்டு வகையான மூளையழற்சி (என்செபலைடிஸ்) பாதிப்புகள் காணப்பட்டன.
மகாராஷ்டிரா நோயாளிகளுக்குச் சாதாரண மூளையழற்சி மட்டுமே காணப்பட்டது. அதே சமயம், மத்தியப் பிரதேச நோயாளிகளுக்கு மூளையழற்சியுடன் சிறுநீரகம் செயலிழப்பும் காணப்பட்டது.
“நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா நோயாளிகளுக்கு சிறுநீரக திசு ஆய்வு (Renal Biopsy) செய்யப்பட்டது. அதில், இந்தச் சிக்கல் இருமல் மருந்தில் உள்ள டயெதிலீன் கிளைக்கால் காரணமாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டன,” என்று செலோகார் கூறினார்.
இதற்குப் பிறகு, மத்தியப் பிரதேச நிர்வாகம் அந்த இருமல் மருந்தைச் சோதனை செய்தது. அதில் அதிகப்படியான அளவு டயெதிலீன் கிளைக்கால் கண்டறியப்பட்டது. இந்த அசுத்தமான சிரப் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகளிடமும் காணப்பட்டது.
மருத்துவமனை மற்றும் சிகிச்சை குறித்த மக்களின் அச்சம்
பட மூலாதாரம், ROHIT LOHIA
பராசியாவின் சமூக சுகாதார மையத்தில் கடந்த இரண்டு நாட்களாக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. பல தாய்மார்கள் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்துள்ளனர்.
தனது 11 மாதக் குழந்தைக்கு மருந்து கொடுத்துக்கொண்டிருந்த கிருஷ்ணா டஹாரியா, “பயம் வர ஆரம்பித்துவிட்டது ஐயா… ஆனால் என்ன செய்வது… குழந்தைகளைப் பற்றிய விஷயம். இப்போது நாங்கள் அரசு மருத்துவமனைக்கு வருகிறோம். ஏனெனில் வெளியே அல்லது தனியார் மருத்துவமனையில் குழந்தைகளைக் காட்டுவதற்கும் நாங்கள் பயப்படுகிறோம். மேலும், மருத்துவர்களும் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தயங்குகிறார்கள்,” என்று கூறினார்.
“நாங்கள் மருத்துவமனைக்குச் செல்வதையே நிறுத்திவிடுவோம். சளி, இருமல் போன்ற சிறிய நோய்களுக்கே மருத்துவர்கள் நிறைய மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்கள். சிறிய குழந்தைகளின் உடலால் எத்தனை மருந்துகளைச் செரிக்க முடியும்?” என மற்றொரு குடும்ப உறுப்பினர் சொல்கிறார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகுப் பராசியாவின் சமூக சுகாதார மையத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளே ஆவர்.
இங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலான மருத்துவர்கள் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிப்பதைத் தவிர்க்கிறார்கள்.
“பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் கிளினிக்கில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மருத்துவர் மற்றும் நோயாளிக்கு இடையிலான நம்பிக்கையும் குறைந்துள்ளது,” என தனியார் கிளினிக் நடத்தும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மருத்துவர் கூறினார்.
பராசியாவில் சுகாதார அமைப்பின் குறைபாடு குறித்து பேசிய அவர், “பராசியா ஒரு சிறிய இடம், எனவே மாநிலத்தின் பல பகுதிகளைப் போலவே இங்கும் சுகாதார வசதிகள் இல்லை. இந்தச் சம்பவம் நடக்கவில்லை என்றால், இங்குள்ள சுகாதார அமைப்பின் குறைபாடுகளைப் பற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள். மாறாக, எல்லாம் அப்படியே தொடர்ந்திருக்கும். இங்கு பெரிய மருத்துவமனை இல்லை. அரசு மருத்துவர்கள் வெளிப்படையாகத் தனியார் கிளினிக்குகளை நடத்துகிறார்கள். அவர்கள் இஷ்டம்போல் மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்கள். யார் பொறுப்பேற்பது?” என்று கேள்வி எழுப்பினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு