• Thu. Apr 30th, 2026

24×7 Live News

Apdin News

நாசிக் டிசிஎஸ் வழக்கில் நடப்பது என்ன? மதமாற்ற குற்றச்சாட்டு மற்றும் விசாரணை குறித்து கேள்விகள் எழுவது ஏன்?

Byadmin

Apr 30, 2026


வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) அன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது
படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) அன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது

“என் கணவர் குண்டுவெடிப்பை நிகழ்த்தினாரா? ஒரே இரவில் ஏன் எட்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டன, ஏன் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள்?” நாசிக் டிசிஎஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மனைவி எழுப்பியுள்ள கேள்விகள் இவை.

நாசிக் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, காவலில் இருந்த தனது கணவரைப் பார்க்க வந்த அந்தப் பெண், ஒட்டுமொத்தச் சூழலையும் கண்டு குழப்பத்தில் இருந்தார்.

வழக்கில் இணை குற்றஞ்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ள ஷாரூக் குரேஷியின் தந்தை ஷௌகத் குரேஷி, உறவினர்களின் கூட்டத்தில் காத்திருந்தார். நாங்கள் அவர்களிடம் பேச முயன்றோம்.

நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஷௌகத் குரேஷி, “என் மகன் இப்படி எதையும் செய்திருப்பான் என நான் நினைக்கவில்லை. ஆனால் அவன் விடுதலை ஆகும் வரை, மகனுக்காக இங்கு வருவது எனக்குக் கடமையாகும். ஷாரூக் குற்றவாளி என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கட்டும், ஆனால் ஊடகங்களில் நடப்பவற்றை என்னால் பார்க்க முடியவில்லை” என்றார்.

அன்று விசாரணை சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்களும், பாதுகாப்புக்காக அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகளும் அந்த மூன்று மணி நேரமும் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தனர்.

By admin