பட மூலாதாரம், SANSAD TV
மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் இன்று (ஏப்ரல் 02) தாக்கல் செய்தார். இந்த மசோதா தொடர்பாக மக்களவையில் கடும் விவாதம் நடைபெற்று வருகிறது.
திமுக சார்பில் பேசிய ஆ.ராசா, அம்மசோதாவை கடுமையாக எதிர்த்தார். சட்ட நடைமுறைகளின்படி மத்திய அரசு திருத்தங்களை மேற்கொள்ளவில்லை என கடந்த கால உதாரணங்களை மேற்கோள்காட்டி பேசினார். இந்த மசோதா முஸ்லிம்களின் சொத்துகளை அபகரிக்கும் முயற்சி என ஆ.ராசா பேசினார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? மசோதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தலைவர்கள் பேசியது என்ன?
கிரண் ரிஜிஜு பேசியது என்ன?
முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் நேற்று இதுதொடர்பாக கூட்டம் நடத்தி, இந்த மசோதாவை எதிர்ப்பதாக முடிவு செய்திருந்தன.
மற்றொருபுறம், புதன்கிழமை அனைத்து எம்.பிக்களும் மக்களவைக்கு வருகை தர வேண்டும் என, பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஏழை முஸ்லிம்களுக்கு பயன் விளைவிப்பதற்காகவே இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், ANI
அவர் கூறுகையில், “இந்த மசோதாவை எதிர்ப்பவர்களின் மனதில் நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என உறுதியாக இருக்கிறேன். நேர்மறையான எண்ணத்துடன் இந்த மசோதாவுக்கு அனைவரும் ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன்.” என தெரிவித்தார்.
அதிகாரிகள், பொதுச் சமூகம், மத நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த மசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த மசோதா குறித்து எட்டு மணிநேரம் விவாதம் நடைபெறும். தேவை ஏற்படின், விவாதத்துக்கான நேரம் நீட்டிக்கப்படும்.
“திருத்தங்களுடன் இந்த மசோதாவை நாங்கள் கொண்டு வந்திருக்கும்போது, நீங்கள் (எதிர்க்கட்சியினர்) அரசியலமைப்பு சட்டத்துக்கு ஏற்றதாக இல்லை என்கிறீர்கள். ஆனால், நீங்கள் மசோதாவில் இல்லாததை கூறுகிறீர்கள். இப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் தவறாக வழிநடத்துகிறீர்கள்.” என்றார் கிரண் ரிஜிஜு.
மற்ற அனைத்து சட்டங்களையும் விட வக்ஃப் சட்டம் மேலானது என அவர் கூறியபோது, எதிர்க்கட்சியினர் முழக்கமிட ஆரம்பித்தனர்.
அப்போது கிரண் ரிஜிஜு, “இந்த மசோதாவின் மூலம், அரசு எந்தவொரு மதம் சார்ந்த நிறுவனம் மீதோ அல்லது மத செயல்பாடுகளின் மீதோ தலையிடாது. வக்ஃப் வாரியம் எந்தவொரு மத நிறுவனத்தின் நிர்வாகத்திலும் தலையிடாது.” என கூறினார்.
வக்ஃப் வாரியத்தின் சொத்துக்கள் வருமானத்தை ஈட்டாததால், அவற்றை சிறப்பாக நிர்வகிப்பதற்கான தேவை உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆ. ராசா பேசியது என்ன?
இந்த மசோதா குறித்து தன் பேச்சை தொடங்கிய ஆ. ராசா, “மத்திய அமைச்சரின் தைரியமான பேச்சைக் கேட்டேன். அவருக்கு இப்படிப்பட்ட தைரியம் எங்கிருந்து வந்தது? நாடாளுமன்றத்தில் இப்படிப்பட்ட கட்டுக்கதைகளை கூறுவதற்கு எங்கிருந்து தைரியம் வந்தது?
நீங்கள் இன்று பேசியதை நாளை எழுத்துபூர்வமாக தொகுத்து, அதை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டும் சரியாக இருந்தால், நான் இந்த அவையிலிருந்து ராஜினாமா செய்கிறேன் என சவால் செய்கிறேன்.” என கூறினார்.
மேலும் பேசிய அவர், “இந்த மசோதாவை 2024ல் அறிமுகம் செய்தபோது, இந்த மசோதாவை உருவாக்க எது தூண்டியது என்பதற்கு ஒரு காரணத்தைக் கூறினீர்கள். தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினீர்கள்.
மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை செயலாளர் ஆகியோர் அதற்கான ஆதாரங்களை காண நேரில் சென்றனர். அவர்கள் திரட்டிய தகவல்களை கூட்டுக்குழு முன்பு அளித்தனர். அதில், நீங்கள் (அமைச்சர்) நாடாளுமன்றத்தில் கூறியது கட்டுக்கதைகள் என அவர்கள் நிரூபித்துள்ளனர்” என ஆ. ராசா தெரிவித்தார்.
இப்போது நாடாளுமன்ற கட்டடமே வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் என்று புதிய கதை விடுவதாக, ஆ. ராசா பேசினார். ஆ. ராசா இதை கூறும்போது ஆளும்கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டனர்.
இந்த சட்ட மசோதா அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் மத சுதந்திரம், சிறுபான்மையினர் நலனுக்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், ANI
திருத்த மசோதாவில் வக்ஃப் சொத்து கணக்கெடுப்பு என குறிப்பிடப்பட்டுள்ளதும் தவறானது என குறிப்பிட்ட அவர், ஏற்கெனவே 90% சொத்துக்கள் கணக்கெடுக்கப்பட்டு விட்டதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்கள், பதிவு செய்தல், சொத்துக்கள் கணக்கெடுப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வக்ஃப் வரையறை என ஐந்து திருத்தங்களிலும் 2013ல் செய்யப்பட்ட திருத்தத்திலிருந்து ஏதேனும் புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ளதா என காட்டினால், நான் உங்களுக்கு ‘சல்யூட்’ செய்கிறேன், ஆனால் உங்களால் காட்ட முடியாது” என அவர் மத்திய அமைச்சரை நோக்கி தெரிவித்தார்.
1995, 2013 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் முழுவதுமாக இந்த திருத்த மசோதாவில் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமாஜ்வாதி எம்.பி. அகிலேஷ் யாதவ், “தனது தோல்வியை மறைக்கும் போதெல்லாம், பாஜக சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறது. முஸ்லிம் சகோதரர்களின் நிலங்களை கணக்கெடுப்பது குறித்து பாஜக பேசுவதன் மூலம், மகா கும்பமேளாவில் இந்துக்கள் இறந்ததை மூடி மறைக்க பார்க்கிறது,” என குற்றம் சாட்டினார்.
மேலும், காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இந்த மசோதாவுக்கு எதிராக பேசினர்.
அமித் ஷா கூறியது என்ன?
பட மூலாதாரம், ANI
வக்ஃப் திருத்த மசோதா பற்றிய எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார்.
“இந்த மசோதா குறித்து அறியாமலோ அல்லது அரசியல் காரணங்களுக்காகவோ (எதிர்க்கட்சி) உறுப்பினர்களின் மனதில் தவறான புரிதல்கள் உள்ளன, நாடாளுமன்றம் மூலமாக இதுகுறித்து நாடு முழுவதும் தவறான புரிதல்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில விஷயங்களை தெளிவுபடுத்த நான் முயற்சிக்கிறேன்” என்றார்.
“முஸ்லிம் அல்லாத யாரும் வக்ஃப் வாரியத்துக்குள் வர மாட்டார்கள். இதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். எந்தவொரு முத்தவல்லியோ (வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பவர்கள்), வக்ஃப் வாரியத்தில் உள்ளவர்களோ முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க மாட்டார்கள்.” என தெரிவித்தார்.
“மத நிறுவனங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை சேர்க்க எந்த ஏற்பாடும் இல்லை, நாங்கள் அவ்வாறு செய்ய விரும்பவில்லை.”
“எனவே, சமத்துவ உரிமை போய்விட்டது, இரண்டு மதங்களுக்கு இடையில் சமத்துவம் இல்லை, முஸ்லிம்களின் மத உரிமைகளில் அரசு தலையிடும் என்று பெரியளவில் பேசுகின்றனர். ஆனால், எதுவும் நடக்கப் போவதில்லை” என்று அமித் ஷா கூறினார்.
“இந்தச் சட்டம் முஸ்லிம் சகோதரர்களின் மத நடவடிக்கைகளிலும், அவர்கள் நன்கொடையாக அளித்த சொத்துக்களிலும் தலையிடுவதற்காகவே உருவாக்கப்படுகிறது என்பது தவறான கருத்து. சிறுபான்மையினரை பயமுறுத்தி ஒரு பெரிய தவறான கருத்தைப் பரப்புவதன் மூலம் வாக்கு வங்கியை உருவாக்க இது செய்யப்படுகிறது.”
“முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் மத்திய வக்ஃப் கவுன்சிலிலும், வக்ஃப் வாரியத்திலும் எங்கு வைக்கப்படுவார்கள்? அவர்களின் வேலை என்ன? அவர்களின் வேலை, மத நடவடிக்கைகளை நிர்வகிப்பது அல்ல. மாறாக, வக்ஃப் வாரியத்தின் நிர்வாகம் நன்றாக நடக்கிறதா, இல்லையா என்பதைப் பார்ப்பதே அவர்களின் வேலை” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், ANI
வக்ஃப் மசோதா – பின்னணி
இந்த சட்ட மசோதா ஆகஸ்ட், 2024ல் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், அந்த திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, அக்குழு அறிக்கை சமர்ப்பித்த நிலையில் இந்த மசோதா இன்று கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கலானது.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் கட்சி, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), லோக் ஜனசக்தி தளம் (ராம் விலாஸ் பஸ்வான்) ஆகிய கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), தேசிய மாநாட்டு கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக ஆகிய கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
முதன்மையாக இந்த திருத்த மசோதாவில் மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம்கள் அல்லாதோரை சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது தவிர, அரசாங்க வசம் உள்ள வக்ஃப் சொத்தின் உரிமை கோரல் குறித்த இறுதி முடிவை மாவட்ட ஆட்சியர் எடுப்பார், மேலும் அவரது அறிக்கையின் அடிப்படையில் சொத்தை அரசு கணக்கில் சேர்க்கலாம் எனும் அம்சத்துக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மசோதாவில், கணக்கெடுப்பு நடத்தும் உரிமை வக்ஃப் வாரியத்திலிருந்து மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட மசோதாவில், மத்திய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களும் இரண்டு பெண் உறுப்பினர்களும் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்கள் தவிர, போஹ்ரா மற்றும் ஆககானி பிரிவினருக்கு தனித்தனி வாரியங்களை அமைப்பது குறித்து பேசப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு