0
ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் நாடு முழுவதும் உள்ள அலைபேசிகளில் இருந்து அவசரகால எச்சரிக்கை அமைப்புக்கான சோதனைச் சைரன் ஒலிகள் ஒலித்தன.
4ஜி மற்றும் 5ஜி அலைவரிசையுடன் இணைக்கப்பட்ட கைபேசிகளில் சுமார் 10 வினாடிகள் இந்த அதிர்வும் ஒலியும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது 2023 இல் நடத்தப்பட்ட முதல் சோதனைக்குப் பிறகு நடைபெறும் இரண்டாவது சோதனை ஆகும்.
பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் கூறுகையில், இந்தச் சோதனையின் போது நாடு முழுவதும் பல கோடி அலைபேசிகளில் வெற்றிகரமாக சைரன்கள் ஒலித்தன. தேசிய அவசரகாலச் சூழ்நிலைகளில் மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை இது என்று அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த எச்சரிக்கை ஒரு பயிற்சி மட்டுமே என்பதை தெளிவுபடுத்தும் செய்தி அலைபேசி பயனர்களுக்கு அனுப்பப்பட்டது.
இந்த எச்சரிக்கை ஒலியின் காரணமாக பல விளையாட்டு நிகழ்வுகள் தங்கள் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. ஹல் கேஆர் மற்றும் ஹல் எஃப்சி அணிகளுக்கு இடையிலான சூப்பர் லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஓவர்களுக்கு இடையில் எச்சரிக்கை ஒலித்தது.
அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பெண்கள் ரக்பி உலகக் கோப்பை போட்டியில், எச்சரிக்கைக்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு பெரிய திரையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஒலித்தபோது நடுவர் சிறிது நேரம் போட்டியை நிறுத்தினார்.
நாடகங்களைப் பார்வையிட வந்தவர்கள் தங்கள் அலைபேசிகளை நிறுத்தி வைக்கவும், வாகன ஓட்டிகள் கவனச்சிதறல் இல்லாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.