தமிழக அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் என்றும் நினைவுகூரத்தக்க அரசியல் ஆளுமை ஜெயலலிதா. பெண்களின் முன்னேற்றத்துக்காக ஜெயலலிதா தீட்டிய பல்வேறு திட்டங்களே, அவரை ‘அம்மா’ என அனைவராலும் போற்றிப்புகழ வைத்தது.
சமீப காலமாக இந்தியாவின் பல்வேறு மாநில தேர்தல்களின்போதும் பெண்களுக்கான உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. அதுபோல கவர்ச்சிகரமான பெண்களுக்கான வாக்குறுதிகளை அறிவிக்கும் கட்சிகளே தேர்தலில் வெற்றி வாகையும் சூடி வருகின்றன.
இப்போது தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ள இந்த ஃபார்முலாவை, 1991 முதலே தனது தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமையும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தியவர் ஜெயலலிதா. பெண்களுக்காக அவர் கொண்டுவந்த திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
தொட்டில் குழந்தை திட்டம்: ஜெயலலிதாவின் முதல் ஆட்சிகாலமான 1991- 1996ல் ‘தொட்டில் குழந்தை’ திட்டத்தை கொண்டுவந்தார். பெண் சிசுக்கொலை அதிகமாகவும், பெரும் அதிர்வலைகளையும் தமிழகத்தில் உருவாக்கிய அந்த காலகட்டத்தில் இந்தத் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக பார்க்கப்பட்டது.
கைவிடப்படும் குழந்தைகள் தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் மூலம் பெறப்பட்டு காப்பகங்களில் வளர்க்கபட்டார்கள் அல்லது தத்துக் கொடுக்கப்பட்டனர். இத்திட்டம் ஜெயலலிதாவின் அடுத்தடுத்த ஆட்சி காலங்களில் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தால் ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: பொருளாதார காரணங்கள், எதிர்காலம் பற்றிய கவலையால் பெண் சிசுக் கொலை அதிகரித்தது. இதனை தடுக்கும் வகையில் ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை’ 1992-ல் கொண்டுவந்தார் ஜெயலலிதா. இத்திட்டத்தில் பெண் குழந்தைகள் பெயரில் குறிப்பிட்ட தொகை வைப்புநிதியாக செலுத்தப்பட்டது.
இத்திட்டமும் ஜெயலலிதாவின் அடுத்தடுத்த ஆட்சி காலங்களில் மேம்படுத்தப்பட்டு, தற்போது ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அவர் பெயரில் ரூ.50 ஆயிரமும், இரு பெண் குழந்தைகள் இருப்பின் அவர்கள் பெயரில் தலா ரூ.25 ஆயிரமும் வைப்பு நிதியாக அரசால் செலுத்தப்படுகிறது. இத்திட்டமும் இப்போதுவரை பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மகளிர் காவல் நிலையங்கள்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு, தமிழகத்தில் 1992-ம் ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்களை உருவாக்கினார் ஜெயலலிதா. பாதிக்கப்படும் பெண்கள் நம்பிக்கையுடன் புகாரளிக்கும் இடமாக இப்போதுவரை மகளிர் காவல் நிலையங்கள் விளங்கி வருகிறது. அதேபோல இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய கமாண்டோ படையும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்: பெண்களின் திருமணத்தின்போது பெற்றோர்களுக்கு உதவும் வகையில் ஏற்கெனவே இருந்த ‘மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவி திட்டத்தை’ தாலிக்கு தங்கமும் வழங்கும் திட்டமாக மாற்றினார் ஜெயலலிதா. இதன்படி பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ஒரு பவுன் தங்கமும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது. பெண்களிடையே பெரும் வரவேற்பை இந்த திட்டம் பெற்றது.
அம்மா உணவகம்: அனைவரும் பசியின்றி உணவுபெற வேண்டும் என்ற லட்சியத்தோடு கொண்டுவரப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். தமிழகத்தில் இத்திட்டம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. மிக மிக குறைவான விலையில் தரமான உணவு வழங்கும் இத்திட்டம் ஏழைகள், நடைபாதையில் வசிப்போர், குறைவான ஊதியம் பெறும் தொழிலாளர்கள் என பலரின் பசியை இப்போதுவரை போக்கி வருகிறது.
பல்வேறு மாநிலங்களும் இந்தத் திட்டத்தை தற்போது செயல்படுத்துகின்றன. உணவளிக்கும் லட்சியம் என்பதை தாண்டி அம்மா உணவகங்களில் உணவு சமைக்கும் பணி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்டன. இதன்மூலமாக ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
கோயில்களில் அன்னதானம்: கோயில்களில் இலவச அன்னதானம் வழங்கும் திட்டம் ஜெயலலிதாவால் 2011-ம் ஆண்டில் தொடங்கிவைக்கப்பட்டது. இத்திட்டமும் அடுத்தடுத்து பல்வேறு கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இலவச சைக்கிள், லேப்டாப்: பெண் குழந்தைகள் மற்றும் ஏழை மாணவர்களும் சிறப்பான கல்வியைப் பெற பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், லேப்டாப் வழங்கும் திட்டம் போன்றவை ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் தொடங்கப்பட்டன. அதுபோல சீருடைகள், பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு உபகரணங்களும் இவரால் வழங்கப்பட்டன.
கர்ப்பிணி பெண்களுக்கான திட்டங்கள்: மகப்பேறு கால நிதியுதவி திட்டம் ஏற்கெனவே இருந்தாலும், அதற்காக உதவித் தொகையை அதிகரித்தார் ஜெயலலிதா. ஏழை பெண்களுக்காக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகளும் இவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டன. அதுபோல அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்களுக்கு 16 பொருட்கள் அடங்கிய ‘குழந்தைகள் நல பரிசு பெட்டகம்’ ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அறிமுகமானது. மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்துக்காக ‘மகப்பேறு சஞ்சீவி திட்டத்தையும்’ கொண்டுவந்தார்.
பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள்: பாலூட்டும் தாய்மார்கள் பயணத்தின்போது சந்திக்கும் சிரமங்களை தவிர்க்க பேருந்து நிலையங்களில் ‘தனி அறைகள்’ உருவாக்கப்பட்டன. இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அனைத்து பொது இடங்களிலும் இப்போது ‘பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள்’ ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்த ‘இலவச நாப்கின் திட்டம்’ இவரது ஆட்சிகாலத்தில் அறிமுகமானது.
அதுபோல மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டத்தில் மேம்பாடு, பெண் விவசாயிகளுக்கான முன்னோடி திட்டங்கள், அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கான முன்னுரிமை என எண்ணற்ற செயல் திட்டங்களை மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு உருவாக்கினார் ஜெயலலிதா.
இப்படி பெண்களுக்காக அவர் கொண்டுவந்த எண்ணிடங்காத திட்டங்கள், பெண்களின் முன்னேற்றம் என்ற அளவுகோலை தாண்டி சமூக முன்னேற்றத்துக்கும் வித்திட்டது. இதனால்தான் அனைத்து மக்களாலும் அன்போடு ‘அம்மா’ என அழைக்கப்பட்டார் ஜெயலலிதா.
| பிப்.24 – இன்று ஜெயலலிதா பிறந்த நாள் |