• Thu. Nov 27th, 2025

24×7 Live News

Apdin News

நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காண்க! சஜித் வேண்டுகோள்

Byadmin

Nov 27, 2025


திசைகாட்டி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை பக்கம் 72 இல் 20,000 பேரை ஆசிரியர் தொழிலுக்கு உள்ளீர்ப்போம் என்றும், 3,000 STEM பட்டதாரிகள் மற்றும் 9,000 STEM அல்லாத பட்டதாரிகள் தகவல் தொழிநுட்ப துறையிலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு, சுங்க திணைக்களத்திற்கு, வெளிநாட்டுச் சேவைக்கு, சுற்றுலா கைத்தொழிற்றுறைக்கு 3000 பேர் என்ற அடிப்படையில் தொழில்களைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில், இவ்வாறு இவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது, வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு ஒரு வருட பயிலுநர் பயிற்சிகளை வழங்கி, இடைப்பட்ட காலத்தில் இவர்களுக்கான ஒரு கொடுப்பனவைப் பெற்றுக் கொடுத்து, ஆட்சேர்ப்பு செய்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று புதன்கிழமை  (26) பாராளுமன்றத்தில் தனது யோசனையை முன்வைத்து தெரிவித்தார்.

கொரிய வேலைவாய்ப்பு பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமரிடம் முன்வைத்தார்.

வேலையில்லாப் பிரச்சினைக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தீர்வுகளைத் தேட வேண்டும். 2004 ஆம் ஆண்டு கொரியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் மொழிப் பரீட்சை உட்பட அனைத்து தகுதிகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டன.

சராசரியாக, ஒரு காலாண்டிற்கு சுமார் 1,500 முதல் 2,000 வேலை வாய்ப்புகள் இதன் மூலம் கிடைத்து வந்தன. 2023 முதல், ஒரு காலாண்டிற்கு கிடைத்து வந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை இன்று 200 க்கும் குறைவாகவே அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையால் சுமார் 5,000 பேர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த பரீட்சைத் தகுதிகள் 2 ஆண்டுகளுக்கு மாத்திரமே செல்லுபடியாகும், என்பதால், இக்காலப்பிரிவிற்குள் தகுதி பெற்றோரை கொரியாவிற்கு அனுப்பாவிட்டால், பெரும் தொகை பணத்தை கைவிடும் நிலை ஏற்படும்.

ஆகையால் இராஜதந்திர ரீதியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட 5,000 பேருக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுத்து, அவர்களுக்கு தொழில்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேட்டுக்கொண்டார்.

By admin