0
நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார்.
பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை முறையான சட்ட கட்டமைப்பின் கீழ் பதிவு செய்வது அவசியமாகும்.
அத்துடன், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும் சமூக அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்.
பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை ஒதுக்கி வைப்பதால் அவர்கள் மேலும் பாதிக்கப்படுகின்றனர்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைப் பாலியல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி முறைமையை விரிவாக்குவது அவசியமாகும்.
95 சதவீதமான பாலியல் தொழிலாளர்கள் தற்போது ஆணுறை உள்ளிட்ட பாதுகாப்பான முறைகளைப் பயன்படுத்தி வருவதால் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களும் கணிசமாக குறைவடையும் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேலும் தெரிவித்தார்.