பட மூலாதாரம், Getty Images
மகாத்மா காந்தி 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி கொல்லப்பட்டார்.
காந்தி கொல்லப்பட்டதை பற்றி நினைக்கும்போது நமக்கு முதலில் தோன்றும் ஒரே பெயர் நாதுராம் கோட்சே.
நாதுராம் கோட்சேவே நீதிமன்றத்தில் இந்த கொலைக்கு தான் மட்டுமே காரணம் என வாக்குமூலம் கொடுத்தார்.
எனினும் காந்தி கொலை வழக்கில் மொத்தம் 9 பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
நாராயண் தத்தாத்ரே ஆப்தே, நாதுராம் விநாயக் கோட்சே, விஷ்ணு ராமச்சந்திர கர்கரே, விநாயக் தாமோதர் சாவர்க்கர், திகம்பர் ராமச்சந்திர பாகே, சங்கர் கிஸ்தய்யா, மதன்லால் காஷ்மீர்லால் பஹ்வா, கோபால் விநாயக் கோட்சே மற்றும் டாக்டர். தத்தாத்ரே சதாசிவ் பார்ச்சுரே. இவைதான் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரின் பெயர்கள்.
இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மகாத்மா காந்தி கொலையை திட்டமிட்டது யார்?
இந்த கொலையின் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்? இவர்களின் பின்னணி என்ன? இவர்களின் தொழில் என்ன? இவர்கள் எப்படி ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர்? இவர்கள் எந்த அமைப்பில் வேலை செய்தனர்?
பட மூலாதாரம், Getty Images
1. நாராயண் ஆப்தே
இந்த கொலையின் முக்கிய குற்றவாளி நாதுராம் கோட்சே பற்றி கடைசியாக பார்க்கலாம். முதலில் நாராயண் ஆப்தே பற்றி பார்க்கலாம்.
காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரில் இவரும் ஒருவர். கோட்சேவைப் போலவே இவரும் முக்கியமான நபர்.
உண்மையை சொல்லவேண்டுமென்றால், காந்தியைக் கொல்லப்படுவதற்கு முன்பு வரை இந்தக் கும்பல் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் ஆப்தேதான் தலைமை தாங்கினார். இருப்பினும், ஜனவரி 20 அன்று காந்தியைக் கொல்லும் முயற்சி தோல்வியடைந்தது.
இந்தநிலையில் கொலைக்கான முழுப் பொறுப்பையும் கோட்சே ஏற்றுக்கொண்டார்.
நாராயண் ஆப்தே பற்றி தகவல் அளிக்கும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனும் ‘லெட்ஸ் கில் காந்தி’ புத்தகத்தின் ஆசிரியருமான துஷார் காந்தி, “இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் நாராயண் ஆப்தே இந்த கும்பலின் தலைவராக இருந்தார். காந்தி மீது இறுதித் தாக்குதலை நடத்திய நாதுராம் கோட்சே இந்தக் கும்பலின் விசுவாசமான உறுப்பினராக இருந்தார். ஆப்தேவுடன் அவருக்கு மிக நெருக்கமான உறவு இருந்தது” என்று கூறுகிறார்.
பட மூலாதாரம், Courtesy: Nana Godse
அகமதுநகரில் இருந்தபோது, நாராயண் ஒரு துப்பாக்கி சுடுதல் கிளப்பை நிறுவினார். 1939-ஆம் ஆண்டு, அவர் இந்து மகாசபையின் அகமதுநகர் கிளையில் சேர்ந்தார். இந்தக் காலகட்டத்தில்தான் அவர் நாதுராம் கோட்சேவைச் சந்தித்தார்.
துஷார் காந்தி தனது புத்தகத்தில், “நாராயண் ஆப்தே மிகவும் வெளிப்படையானவர், தன்னம்பிக்கை கொண்டவர் மற்றும் பெண்களை வசீகரிப்பவர். அவர் பெண்கள், மது என பலவற்றில் மிகுந்த ஈர்ப்பு கொண்டிருந்தார். பிராமணர்களைப் போலல்லாமல், அவர் புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை கூட சாப்பிட்டார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காந்தி கொலை வழக்கில் நாராயண் ஆப்தே குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Rupa & Company, 2007
2. விஷ்ணு ராமச்சந்திர கர்கரே
விஷ்ணு ராமச்சந்திர கர்கரே ஒரு ஹோட்டல் உரிமையாளராகவும், இந்து மகாசபையின் அகமதுநகர் கிளையின் தலைவராகவும் இருந்தார்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த விஷ்ணு கர்கரே, மும்பையில் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தார். 10 வயதில், இல்லத்திலிருந்து சென்று, ஒரு தேநீர் கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
சிறு வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வந்த இவர், தீவிர இந்துத்துவத்திற்கு குரல் கொடுக்கும் வழக்கறிஞராக ஆனார்.
துஷார் காந்தி அவரைப் பற்றி, “தெருக்களில் ஒரு ஆதரவற்றவராக வளர்ந்த ஒரு குழந்தை, தனது கடுமையான வாழ்க்கை மீது கடுமையான வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவரது இளமைப் பருவத்தில் சமூகம் அவரை கொடூரமாக நடத்தியிருக்கலாம். அவர் பின்னர் ஒரு கடுமையான கோபக்காரனாக மாறினார். அவரது கோபத்தின் முக்கிய இலக்கு இஸ்லாமியர்களாக இருந்தது.” குறிப்பிட்டுள்ளார்.
பின், அகமதுநகரில் ஒரு சிறிய ஹோட்டலை திறந்து நடத்தி வந்த கார்கே பொருளாதார ரீதியாக பலமானவராக மாறினார்.
“இந்து மகாசபையில் பணம் மற்றும் செல்வாக்கு கிடைத்ததால், கர்கரேவின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்தன.” என துஷார் காந்தி கூறுகிறார்.
பட மூலாதாரம், Madhushree Publication
‘காந்தியைக் கொன்றது ஏன்?’ என்ற தனது புத்தகத்தில் கர்கரே பற்றிய தகவல்களை அளித்துள்ளார் அசோக் குமார் பாண்டே.
“பிரிவினைக்குப் பிறகு அகதிகள் அகமதுநகருக்கு வரத் தொடங்கிய பிறகு, கர்கரே மிகுந்த ஆர்வத்துடன் நிவாரணப் பணிகளைத் தொடங்கினார். அங்கு சுமார் 10,000 அகதிகளுக்கு வசதிகளை வழங்கினார். அதே நேரத்தில், அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கினார். மும்பையைச் சேர்ந்த அகதி மதன்லால் பஹாவா இவரின் கூட்டாளியானார். அவரது உதவியுடன், முஸ்லிம் பழ விவசாயிகளை மிரட்டி பழ வியாபாரத்தை தொடங்கினார். காந்தியை கொல்வதற்கான முயற்சியில், தனது குழுவிற்கு பணம், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் கர்கரே” என்று என்கிறார் அசோக் குமார் பாண்டே
காந்தி கொலையில் விஷ்ணு கர்கரே குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
3. மதன்லால் பஹ்வா
மதன்லால் பஹ்வாவைத் தவிர, காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்றும், சித்பவன் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் துஷார் காந்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாபின் மாண்ட்கோமெரி மாவட்டத்தில் உள்ள பாக்பட்டன் கிராமத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஒரே அகதி மதன்லால் பஹ்வா ஆவார்.
இந்தியாவுக்குள் அகதிகள் நுழையத் தொடங்கியபோது மதன்லால் குவாலியருக்கு வந்தார். அங்கிருந்து நகரத்திற்கு வந்தபோது விஷ்ணு கர்கரேவுடன் மதன்லாலுக்கு பழக்கம் ஏற்பட்டது. கர்கரே அங்கு ஒரு பழக் கடை நடத்த மதன்லாலுக்கு பணம் கொடுத்தார். கர்கரேவின் ஆதரவில் இருந்த மதன்லால், அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார்.
“1947 டிசம்பரில் கர்கரே மூலம்தான் மதன்லால் புனேவில் கோட்சே மற்றும் ஆப்தேவை சந்தித்தார். அதன் பிறகு, காந்தியைக் கொல்லும் சதியில் அவர் ஒரு பகுதியாக ஆனார்” என அசோக் குமார் பாண்டே அவரைப் பற்றி தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
மதன்லால் பஹ்வா காந்தி கொலையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
4. திகம்பர் ராமச்சந்திர பாகே
காந்தி படுகொலை வழக்கில் திகம்பர் பாகே அப்ரூவர் ஆனார். இவர் அளித்த சாட்சிகள் வழக்கில் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. திகம்பர் பாகே புனேவில் ஆயுதங்களை விற்பனை செய்து வந்தார். கர்கரே அடிக்கடி அவரிடமிருந்து ஆயுதங்களை வாங்குவார்.
“பாகே மிகவும் உற்சாகமான மற்றும் துடிப்பான ஒரு விற்பனையாளர். அவரிடம் வரும் வாடிக்கையாளர்கள் ஒருபோதும் வெறுங்கையுடன் திரும்ப மாட்டார்கள். அவரது தொழிலின் முக்கிய ரகசியமே, அவர் வாடிக்கையாளர்களுக்கு பிடித்ததை உடனடியாக வழங்குவதே ஆகும்.” என துஷார் காந்தி கூறியுள்ளார்.
காந்தியைக் கொல்ல நடந்த பல முயற்சிகளில் பயன்படுத்தப்பட்ட பல ஆயுதங்களை பாகேதான் விநியோகித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
5. சங்கர் கிஸ்தய்யா
இவரின் கடந்த காலத்தை பற்றி அதிக தகவல்கள் இல்லை. இவர் பாகேவின் வேலைக்காரராக இருந்தார். இந்த முழு சதித்திட்டத்திலும் அவர் தற்செயலாக ஈடுபட்டுள்ளார்.
“ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனான இவரை ஆயுதக் கிடங்கின் இயக்குநரான பாகே, ஊதியம் தருவதாக கூறி சோலாப்பூரில் இருந்து அழைத்து வந்தார். ஆனால் கடினமாக உழைத்த பிறகும் அவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அந்த நேரத்தில், அவர் ஒரு முறை தப்பிக்க முயன்றார். அதன் பிறகு, பாகே அவரைப் பிடித்து, அவரின் பிரபலத்தை பயன்படுத்தி, வழக்கில் சிக்க வைத்தார். அதன் பிறகு, பாகேவின் அடிமையாக மாறுவதைத் தவிர இவருக்கு வேறு வழியில்லை.” என அசோக் குமார் பாண்டே இவரைப் பற்றி குறிப்பிடுகிறார்.
உண்மையில், சங்கர் கிஸ்தய்யாவுக்கு இந்தியும் மராத்தியும் சரியாகப் புரியவில்லை. டெல்லிக்குச் செல்லும் வரை அவர் யாருடைய கொலையில் ஈடுபட்டார் என்பது கூட அவருக்குத் தெரியாது.
ஆயுள் தண்டனை பெற்ற இவர் இதன் அடிப்படையில், பின்னர் விடுவிக்கப்பட்டார்.
பட மூலாதாரம், Getty Images
6. கோபால் கோட்சே
கோமால் கோட்சே, நாதுராம் கோட்சேவின் சகோதரர். படுகொலை நடந்த சமயத்தில் கோபாலுக்கு 27 வயது. நாதுராம் திருமணமாகாதவர். கோபால் திருமணமானவர். மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, கோபால் ராணுவத்தின் ஆயுதத் துறையில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார்.
இரண்டாம் உலகப் போரின்போது இரான், இராக்கில் ஆங்கிலேயர்களுடன் இணைந்து பணியாற்றினார். தனது சகோதரரின் வற்புறுத்தலின் பேரில் இந்த சதித்திட்டத்தில் இணைந்தார்.
“காந்தியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்திற்காக அவர் தனது பதவியில் இருந்து ஒரு சிறிய விடுப்பு எடுத்துக்கொண்டு வந்தார். பின்னரே வேலையை விட்டார். தனது சகோதரரின் சாதி வெறியால் பாதிக்கப்பட்டார். நாதுராம் இவரை விட சுமார் 10 வயது மூத்தவர். ஆனால் இதற்கு முன்பாக இருவரும் இணைந்து தீவிரமாக பணியாற்றியதில்லை.” என அசோக் குமார் பாண்டே எழுதியுள்ளார்.
கோபால் கோட்சே குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
7. தத்தாத்ரே சதாசிவ் பார்ச்சுரே
காந்தியின் கொலைக்கு 2 நாட்களுக்கு முன்பு வரை கோட்சே மற்றும் ஆப்தேவுக்கு உரிய ஆயுதம் கிடைக்கவில்லை.
இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பெரேட்டா துப்பாக்கியை வழங்கியவர்தான் தத்தாத்ரே சதாசிவ் பார்ச்சுரே.
இவர் ஆயுர்வேதம்மற்றும் ஹோமியோபதிக்கான மருத்துவமனை வைத்திருந்தார்.
“படன்கர் பஜாரில் உள்ள அவரது வீடு இந்து மகாசபையின் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டது. இவர் ஒரு இந்து ராஷ்டிர சேனாவையும் உருவாக்கி, சுயமாக அறிவிக்கப்பட்ட தளபதியாக இருந்தார்” என்று அசோக் குமார் பாண்டே அவரைப் பற்றி கூறுகிறார்.
“இவர் கோட்சேவை ஆல்வரில் உள்ள இந்து மகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ் ரகசிய பயிற்சி முகாமில் சந்தித்தார்” என்றும் கூறுகிறார்.
“தத்தாத்ரே அதிகம் பேசக்கூடியவர். காந்தியின் படுகொலை செய்தி குவாலியரை அடைந்ததும், இந்த சதியில் தனது ஈடுபாட்டை ஒப்புக்கொண்டார். இந்த செய்தி அரசு நிர்வாகத்தை அடைந்ததும் இவர் கைது செய்யப்பட்டார்.” என துஷார் காந்தி அவரைப் பற்றி எழுதியுள்ளார்.
மகாசபையின் அலுவலகப் பொறுப்பாளராக, தத்தாத்ரே நீண்ட காலமாக கோட்சேவுடன் நெருக்கமாக பழகியிருந்தார்.
ஆயுள் தண்டனை பெற்ற இவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
8. விநாயக் தாமோதர் சாவர்க்கர்
காந்தி படுகொலையில் இவரின் பங்கு நிரூபிக்கப்படவில்லை. இவருக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் இவரை விடுதலை செய்தது.
நாதுராம் கோட்சேவின் குடும்பம் 1929- ஆம் ஆண்டு இவரது வீட்டிற்கு அருகே குடியேறியது.
கோபால் கோட்சே தனது ‘காந்திஹத்யா அனி மி’ என்ற புத்தகத்தில், குடியேறிய 3வது நாளில் நாதுராம், சாவர்க்கரை சந்திக்கச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
”Gandhi’s Assassin: The Making of Nathuram Godse and His Idea of India” என்ற புத்தகத்தில் எழுத்தாளர் திரேந்திர ஜா இந்த சந்திப்பைப் பற்றி விவரிக்கிறார்.
அதில், “கோட்சே ஏன் சாவர்க்கரை சந்திக்கச் சென்றார் என்பதற்கான தெளிவான பதிவு எதுவும் இல்லை. அவர்களின் முதல் சந்திப்பை யார் ஏற்பாடு செய்தார் என்பதும் தெரியவில்லை. கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவின் கூற்றுப்படி, கோட்சே குடும்பம் 1929-ல் ரத்னகிரிக்கு குடிபெயர்ந்தபோது சாவர்க்கருக்கும், நாதுராம் கோட்சேவுக்கும் இடையே ஒரு பிணைப்பு உருவாகியிருக்கலாம். தற்செயலாக, கோட்சே குடும்பம் வசித்த வீடு, சாவர்க்கர் முதன்முதலில் ரத்னகிரிக்கு வந்தபோது தங்கியிருந்த அதே வீடாகும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Penguin
இது பற்றி துஷார் காந்தி, “நாதுராம், சாவர்க்கரின் வீட்டிற்கு தவறாமல் செல்லத் தொடங்கினார். நாதுராமுக்கு ஒரு குரு கிடைத்தார். அவரது அரசியல் பயிற்சியும் தொடங்கியது.” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “சாவர்க்கரின் வடிவத்தில் இவருக்கு ஒரு தந்தையின் நிழல் கிடைத்தது. இந்து சமூகத்தின் விழிப்புணர்வையும், இந்துத்துவாவின் ஆக்ரோஷமான பங்கையும் சாவர்க்கர் வலியுறுத்தியது நாதுராமின் இளம் மனதைக் கவர்ந்தது, அவர் சாவர்க்கரின் தீவிர பக்தராக மாறினார்.” என அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
9. நாதுராம் விநாயக் கோட்சே
1910-ஆம் ஆண்டு மே 19 அன்று அஞ்சல் துறையில் பணிபுரிந்த விநாயக் கோட்சேவுக்கு ஒரு மகன் பிறந்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில் இதற்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளும் பிறந்ததும் இறந்துவிட்டன.
எனவே, ஒரு ஆண் குழந்தை பிறந்தால், பெண்ணைப் போல வளர்ப்பதாக சபதம் எடுத்துக்கொண்டார்.
எனவே ராமச்சந்திரா எனப் பெயரிட்டாலும் பையனின் மூக்கில் மூக்குத்தி குத்தி பின் நாதுராம் என்று பெயரிடப்பட்டது. கோபால் கோட்சே இந்தத் தகவலை பகிர்ந்தார்.
“நாதுராம் தனது மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், ஒரு அரசு அலுவலகத்தில் எழுத்தராக வேலை செய்ய வேண்டும், வீட்டுப் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். ஆனால் நாதுராமுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை.” என அவரின் வளர் பருவம் பற்றி அசோக் குமார் பாண்டே எழுதியுள்ளார்.
Gandhi’s Assassin: The Making of Nathuram Godse and His Idea of India’என்ற புத்தகத்தில், “காலம் கடந்துவிட்டது, தேர்வுகள் நெருங்கி வந்தன. கோட்சே அதற்கு நன்றாக தயாராகவில்லை. 1929-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் உயர்நிலைப் பள்ளி தேர்வில் தோல்வியடைந்தார். ஆங்கிலத்தில் அவரது மதிப்பெண்கள் மிகக் குறைவாக இருந்தது. இதனால் அவருக்கு உயர்கல்விக்கான சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் அவர் பள்ளி படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். விரக்தி மற்றும் திடீர் முடிவு காரணமாக அவர் பள்ளியை விட்டு வெளியேறினார். இந்தத் தோல்வி அவரை மீண்டும் ஒரு கடினமான மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையில் ஆழ்த்தியது.” என எழுத்தாளர் திரேந்திர ஜா எழுதியுள்ளார்.
பின் பிழைப்புக்காக கர்ஜாத்தில் உள்ள தனது தந்தையிடம் சென்ற நாதுராம், அங்கு தச்சுத் தொழிலைக் கற்றுக் கொண்டு தச்சராக வேலை செய்யத் தொடங்கினார். அவரது தந்தை இடமாற்றம் செய்யப்பட்டப் பிறகு, அவர் ரத்னகிரிக்குச் சென்றார். அங்குதான் அவர் விநாயக் தாமோதர் சாவர்க்கரை சந்தித்தார். இங்குதான் நாதுராம், விநாயக் தாமோதர் சாவர்க்கரின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டார்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது தந்தை ஓய்வு பெற்ற பின் அவரது குடும்பம் சாங்கில்-ல் குடியேறியது.
“சாங்கில்-க்கு குடிபெயர்ந்த பின், கோட்சே தையல் கற்றுக் கொண்டு சொந்தமாக ஒரு கடையை தொடங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் அங்கு ஒரு பழக்கடையையும் தொடங்கினார். அவரது குடும்பத்தினர் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினர், ஆனால் நாதுராமுக்கு அதில் அதிக ஆர்வம் இல்லை.” என அசோக் குமார் பாண்டே தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
“நிராகரிப்பு மற்றும் தோல்வி பயம் கோட்சேவை தொடர்ந்து வேட்டையாடியது. பல முறை, குறிப்பாக ஜனவரி 20, 1948 அன்று காந்தியைக் கொல்லத் தவறிய பிறகு, கோட்சே தனது விமர்சகர்களை மௌனமாக்கவும், ஒரு முறையாவது வெற்றி பெற்றதாக காட்டவும் விரும்பினார். இந்த மனநிலையுடன்தான் காந்தி மீதான தனது இறுதித் தாக்குதலை தொடுத்தார். இறுதியாக, ஜனவரி 30, 1948 அன்று, அவர் காந்தியைச் சுட்டார். இறுதியாக விநாயக் கோட்சேவின் மூத்த மகன் தான் செய்த ஒரு விஷயத்தில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறை.” என துஷார் காந்தி தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு