கட்சியின் பதில் பொதுச்செயலாளராகச் செயற்பட்டு வரும் ப.சத்தியலிங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
மாவை அனுப்பிவைத்த கடிதத்தின் சாராம்சமாவது:-
“சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரின் பதவி வெற்றிடமானபோது, கட்சியின் தலைவரான எனது பரிந்துரையின் அடிப்படையில் பதில் பொதுச்செயலாளராக சத்தியலிங்கம் தெரிவுசெய்யப்பட்டார். கட்சியின் பதில் பொதுச்செயலாளர் கட்சித் தலைவரின் அறிவுறுத்தலுக்கு அமையவே செயற்பட வேண்டும் என்று யாப்பு கூறுகின்றது. ஆனால், கட்சியின் பதில் பொதுச்செயலாளரான மருத்துவ கலாநிதி சத்தியலிங்கம் எனது ஆலோசனைகளைப் பின்பற்றவில்லை.
அத்துடன், டிசம்பர் மாதம் 14ஆம் திகதி கூட்டப்பட்ட கூட்டம் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை. அந்தக் கூட்டம் தன்னிச்சையாகக் கூட்டப்பட்ட கூட்டம் என்பதுடன், எதிர்வரும் 28ஆம் திகதிய கூட்டத்தின் (இன்றைய) நிகழ்ச்சி நிரல் (மாவையின் பதவி விலகல் தொடர்பான வாக்கெடுப்பு) தேவையற்றதொன்று. வாக்கெடுப்பு நடத்தி தலைவர் பதவியைத் தீர்மானிப்பது என்பது அடிப்படை அற்ற முன்னெடுப்பாகும்.
2024ஆம் ஆண்டின் பொதுத்தேர்தல் அறிக்கையைக் கட்சித் தலைமையகத்தில் வைத்து நானே தயாரித்தேன். அந்த அறிக்கை எனது இல்லத்தில் வைத்தே, புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன், பதில் பொதுச்செயலாளர்கள் மற்றும் திருவாளர்கள் ம.ஆ.சுமந்திரன், ஆனோல்ட் முன்னிலையில் ஊடகங்களுக்கு வெளியிட்டோம்.
தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நான் அறிவித்தபோது, சிறீதரனைத் தலைமைப் பதவியை ஏற்குமாறு கோரியிருந்தேன். அது செயற்படுத்தப்படாமையால், நானே கட்சித் தலைவராகத் தொடர்கின்றேன். அத்துடன், பதவி விலகல் கடிதத்தை நான் எழுதிய பின்னர் கூட்டப்பட்ட கூட்டங்கள் சிலவற்றில் கட்சித் தலைவர் என்ற ரீதியிலேயே எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.” – என்றுள்ளது.