மதுரை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது என பாஜக கல்வியாளர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என். தியாகராஜன் இது குறித்து கூறியதாவது: தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களை திமுக வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகிறது. நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கு எவ்விதமான நல திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுத்த நிதிகளையும் முறையாக பயன்படுத்தவில்லை. தமிழக சிறுபான்மையினர் நலவாரியம் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் இல்லாமல் முதல்வர் ஸ்டாலினை புகழ் பாடும் வாரியமாக உள்ளது.
திமுகவும், தமிழக சிறுபான்மையினர் நல வாரியமும் சேர்ந்து கிறிஸ்தவ சிறுபான்மையினர் பேராயர்களை, அருட்தந்தையர்களை குருமார்களை கன்னியாஸ்திரிகளை பாஸ்டர்களை, கிறிஸ்தவ ஊழியங்கள் செய்பவர்களை திமுகவின் தேர்தல் முகவர்களாக மாற்றியுள்ளது.
இந்நிலையில் கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் மத்தியில் பிரச்சார தொடக்கமாக கிறிஸ்மஸ் விழாவை பல மண்டலங்களாக பிரித்து கொண்டாட திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன் மூலம் கிறிஸ்தவர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.
இருப்பினும் 2026 தேர்தலில் கிறிஸ்தவ சிறுபான்மையின மக்கள் திமுகவை நம்பி ஏமாற மாட்டார்கள், குறிப்பாக கிறிஸ்தவ சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கண்டிப்பாக திமுகவுக்கு இந்த முறை வாக்களிக்க மாட்டார்கள். கிறிஸ்தவ சிறுபான்மையினர் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளை நம்பி ஏமாறக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.