• Mon. Nov 25th, 2024

24×7 Live News

Apdin News

நாமக்கல்லில் கடையடைப்பு போராட்டம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Namakkal: Shop Keepers protest demanding buses to come inside old bus stand

Byadmin

Nov 25, 2024


நாமக்கல்: பழைய பேருந்து நிலையத்துக்குள் புறநகர் பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தி நாமக்கல்லில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் நாமக்கல் மாநகர பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் அருகே முதலைப்பட்டியில் கடந்த 10-ம் தேதி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையத்தினுள் புறநகர் பேருந்துகள் வருவதில்லை. நகர பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் மட்டுமே வந்து செல்கின்றன.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்த நபர்கள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக வணிகர் சங்கத்தினர் புகார் எழுப்பியுள்ளனர்.

இதற்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று (நவ.,25-ம் தேதி) ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அழைப்பு விடுத்தது. இப்போராட்டத்திற்கு நாமக்கல் நகர ஹோட்டல்கள், பேக்கரிகள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கம், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், பாத்திரக்கடை உரிமையாளர்கள் சங்கம், மளிகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், மருந்து வணிகர் சங்கம், ஆட்டோமொபைல் சங்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதன்படி இன்று காலை 6 மணி முதல் நாமக்கல் மாநகரில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக பழைய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், மருந்து கடைகள், பூ மார்க்கெட் உள்ளிட்டவை முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்தன.

இதனால் பரபரப்பாக காணப்படும் பழைய பேருந்து நிலைய வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. இக்கடையடைப்பு போராட்டம் மாலை 6 வரை நடைபெற உள்ளது. பழைய பேருந்து நிலையத்திற்குள் புறநகர் பேருந்துகள வந்து செல்ல வேண்டும். பழைய பேருந்து நிலையத்திற்குள் கடை நடத்துபவர்களின் வாழ்வாதரம் பாதுக்காக்கப்பட என்பதை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டம் இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் என வணிகர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதனிடையே கடையடைப்பு போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.



By admin