பட மூலாதாரம், Facebook
‘கோவில்களுக்கு எந்த சாதியும் உரிமை கோர முடியாது’ என கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பொன் காளியம்மன் கோவில் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு கொங்கு வேளாளர் சமூக மக்கள் தொடர்ந்த வழக்கில் இப்படியொரு தீர்ப்பு வெளிவந்துள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் ஏற்கெனவே அனுமதியைப் பெற்ற சாதியினருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறநிலையத்துறை கூறுகிறது.
நாமக்கல் மாவட்டம், பொன் காளியம்மன் கோவில் வழக்கில் என்ன நடந்தது? அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுவது என்ன?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது மரப்பரை ஊராட்சி. இங்கு அங்காளம்மன், மாரியம்மன், பெருமாள், பொன் காளியம்மன் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன.
இவற்றில் பொன் காளியம்மன் கோவிலை மட்டும் தனியாக பிரித்து அதன் நிர்வாகத்தைத் தங்களிடம் வழங்குமாறு கொங்கு வேளாளர் சமூகத்தினர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
இதற்கு அறநிலையத்துறையிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து, அறநிலையத்துறை ஆணையர் பரிசீலிக்க உத்தரவிடக் கோரி மரப்பரை ஊராட்சியை சேர்ந்த கணேசன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பட மூலாதாரம், Handout
தீர்ப்பில் நீதிபதி சொன்னது என்ன?
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியன்று தீர்ப்பளித்தார். தீர்ப்பின் தொடக்கத்தில், ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதியாரின் கவிதை வரிகளை அவர் மேற்கோள் காட்டியிருந்தார்.
கோவில் பொதுவானது என்பதால் அனைத்து பக்தர்களாலும் அதை வழிபடவும் நிர்வகிக்கவும் முடியும் எனக் கூறியுள்ள நீதிபதி பரத சக்கவர்த்தி, “சாதி என்பது ஒரு மதப் பிரிவு அல்ல” என தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
“சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்குவதற்கு கோவில்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். பெரும்பாலான பொதுக் கோவில்கள், குறிப்பிட்ட சாதியினரின் கோவில்களாக முத்திரை குத்தப்பட்டுள்ளன” எனவும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 25, 26 ஆகியவவை மத உரிமைகள் மற்றும் மத நடைமுறைகளை மட்டுமே பாதுகாக்கின்றன. அப்படிப் பார்த்தால் எந்த சாதியினரும் கோவிலுக்கு உரிமை கோர முடியாது” எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
சாதியின் அடிப்படையில் கோவிலை நிர்வகிப்பது மத நடைமுறை அல்ல. சாதி ஒருபோதும் மதப்பிரிவாக இருக்க முடியாது என்பதை உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோளாக சாதியற்ற சமூகம் உள்ளதாகக் கூறியுள்ள நீதிபதி, “சாதியை நிலைநிறுத்தும் எந்த ஒன்றையும் நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்பதை உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
அறநிலையத்துறைக்கு சிக்கலா?
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார் அறநிலையத்துறையின் உயர் அதிகாரி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் சில தகவல்களை தெரிவித்தார்.
“உயர் நீதிமன்ற உத்தரவின்படி பார்த்தால் எந்தக் கோவிலுக்கும் சாதி அடிப்படையில் நிர்வாகத்தை வழங்க முடியாது. இதற்கு முன்னதாக குலதெய்வ கோவில்களுக்கு உத்தரவை வாங்கியவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்” எனக் கூறுகிறார் அவர். தமிழ்நாடு அறநிலையத்துறை சட்டப்படி, நிர்வாக திட்டம் (Scheme) என்ற பெயரில் இவை வழங்கப்படுவதாக கூறிய அவர், “சாதி, ஊர்க்காரர்கள், கிராமங்கள் எனக் கோவில்களை பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன” எனக் கூறுகிறார்.
கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் குறிப்பிட்ட சாதியினர், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட குலதெய்வக் கோவில்களை மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட சாதியினரிடம் கோவில் நிர்வாகத்தைக் கொடுப்பதால் அறநிலையத்துறையின் பணிப்பளு குறைவதாகக் கூறும் அவர், “கணக்குகளை தணிக்கை செய்யும் வேலைகளை மட்டும் அறநிலையத்துறை மேற்கொள்கிறது” என்கிறார்.
‘சட்டத்துக்கு முரணானது’- புனித பாண்டியன்
பொன் காளியம்மன் கோவில் வழக்கின் தீர்ப்பு குறித்து ஆலய வழிபடுவோர் சங்கத்தின் மாநில தலைவர் டி.ஆர்.ரமேஷ், “கோவில்களில் காலம்காலமாக சிலருக்கு வழிபாட்டு உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அது சாதியை ஒட்டி வருவது அல்ல. கலாசாரத்தை ஒட்டி வருபவை.” எனக் கூறுகிறார்.
இந்தக் கூற்றை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய தலித் செயற்பாட்டாளரும் தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி ஆணைய முன்னாள் துணைத் தலைவருமான புனித பாண்டியன், “கோவில், வழிபாடுகள், பண்பாடுகள் என அனைத்தும் சாதிகளாக உள்ளன” எனக் கூறுகிறார்.
பட மூலாதாரம், Punitha Pandian
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில், திருவண்ணாமலை தென்முடியனூர் முத்து மாரியம்மன் கோவில், கும்பிடிப்பூண்டி வழுதலம்பேடு எட்டியம்மன் கோவில் ஆகியவற்றில் பட்டியல் சாதி மக்கள் வழிபாடு நடத்துவதில் சிக்கல் நீடிப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
“சாதியை உற்பத்தி செய்யும் இடமாக கோவில்கள் உள்ளன. கிராமக் கோவில்களில் இது கட்டமைக்கப்பட்ட ஒன்றாக உள்ளது” எனக் கூறுகிறார் புனித பாண்டியன்.
நாமக்கல் மாவட்டம் பொன் காளியம்மன் கோவில் நிர்வாகம் தொடர்பாக ஒரு சாதியினர் உரிமை கேட்பது என்பது சட்டத்துக்கு முரணாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக கூறும் புனித பாண்டியன், “இதை அரசு எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதையும் பார்க்க வேண்டும்” எனக் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு