நாமக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் திங்கள் அன்று (டிசம்பர் 16) அதிகாலையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ‘குறிப்பிட்ட 36 நிமிடங்கள் தியானம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்’ என்று பழனி ஜோதிடர் ஒருவர் பேசும் யூடியூப் வீடியோவே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
அனுமதியின்றி தியானம் நடத்தியதால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாக மத்திய தொல்லியல் துறை அதிகாரி கூறுகிறார்.
ஆனால், முறையான அனுமதி பெற்ற பின்னரே தியான நிகழ்ச்சி நடந்ததாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜோதிடர் கூறுகிறார்.
ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டாலும் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கூறுகிறது.
என்ன நடந்தது?
நாமக்கல் மாவட்டம் கோட்டை சாலையில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவில், மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
குடவரைக் கோவிலான லட்சுமி நரசிம்மர் கோவிலில் பூஜை, பராமரிப்பு ஆகிய பணிகளை மட்டும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கவனித்து வருகிறது. இதர நிர்வாகம் முழுவதும் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
இந்த நிலையில், மார்கழி முதல் நாளான திங்கள் அன்று (டிசம்பர் 16) காலை 5 மணியளவில் லட்சுமி நரசிம்மர் கோவிலின் நடையை அர்ச்சகர்கள் திறந்துள்ளனர். அதற்கு முன்னதாக அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்துள்ளனர்.
இதுகுறித்து அர்ச்சகர்கள் கேட்ட போது, “மார்கழி முதல் நாளான இன்று காலை 6.30 மணியில் இருந்து 7.15 மணி வரையில் தியானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் செல்வம் பெருகும் என ஜோதிடர் கூறியுள்ளார்” என்று அங்கிருந்த மக்கள் கூறியுள்ளனர்.
இந்து சமய அறநிலையத் துறை சொல்வது என்ன?
“வழக்கமாக மார்கழி மாதங்களில் பக்தர்கள் அதிகமாக வருவது வழக்கம். திங்கள் அன்று ஆயிரக்கணக்கானோர் கூடியதை எதிர்பார்க்கவில்லை. இதுவரை இந்தக் கோவிலில் இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை” என்கிறார், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் இளையராஜா.
“கூட்டம் கூடுவதற்கு பழனியை சேர்ந்த ஜோதிடர் பிருகு பிரபாகரன் என்பவர் அளித்த யூடியூப் பேட்டியே காரணம்” என பிபிசி தமிழிடம் கூறிய இளையராஜா, “லட்சுமி நரசிம்மர் கோவிலில் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்தால் செல்வம் பெருகும் என ஜோதிடர் கூறியுள்ளார். இதைக் கேட்டு மக்கள் திரண்டுவிட்டனர்” என்கிறார்.
“ஆனால், இந்தக் கூட்டத்தில் நாமக்கல்லை சேர்ந்த மக்கள் பெரியளவில் இல்லை. சென்னை, கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். மலேசியாவில் இருந்தும் சிலர் வந்திருந்தனர்.” என்கிறார் இளையராஜா.
“கோவிலின் உள் மண்டபத்தில் வடக்கு திசையில் அமர்ந்து அமைதியாக தியானம் செய்தனர். அதில் எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், தரிசனம் செய்யும் போது மட்டும் கூட்டம் முண்டியடித்தது” என்கிறார், இளையராஜா.
“கோவிலுக்கு வருமாறு மக்களை ஒருங்கிணைப்பதற்கு வாட்ஸ்ஆப் குழுக்கள் எதுவும் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. மாறாக, யூடியூப்பில் ஜோதிடர் அளித்த பேட்டியே மக்களை கோவிலுக்கு வர வைத்தது” என்று பெயர் குறிப்பிட விரும்பாத கோவில் ஊழியர் ஒருவர், பிபிசி தமிழிடம் கூறினார்.
வீடியோவில் ஜோதிடர் என்ன பேசியிருந்தார்?
ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதற்குக் காரணமானதாகக் கூறப்படும் யூடியூப் வீடியோவில், ஜோதிடர் பிருகு பிரபாகரன் சில தகவல்களைக் கூறியிருக்கிறார்.
‘அனைவரையும் குபேரனாக்கும் கிரக நிலை சூட்சுமம்’ என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோவில், ஒன்பதரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விசேஷமான நாளில் தியானம் செய்ததால், தனக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். அப்படிப்பட்ட சிறப்பான நாளாக டிசம்பர் 16-ம் தேதி அமைந்துள்ளதாகக் கூறியுள்ள பிரபாகரன், “இந்நாளில் நாமக்கல் நாமகிரி தாயாரும் லட்சுமி நரசிம்மரும் எழுந்துள்ள கோவிலில் பூஜை செய்து, 36 நிமிடங்கள் வடக்கு திசையில் அமர்ந்து தியானம் செய்தால் பொருளாதாரத்தில் அதிபதியாக வாழ முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அறிவியல் விஞ்ஞானி கூறுவது என்ன?
இதுபோன்ற சம்பவங்கள், கவலை தரக் கூடிய நோயாக இந்தியாவில் பரவி வருவதாக கூறுகிறார், ஓய்வு பெற்ற அணு ஆராய்ச்சித் துறை விஞ்ஞானியும் பிரேக் த்ரூ சயின்ஸ் சொசைட்டியின் ஆலோசகருமான வெங்கடேசன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பூமியில் உள்ள அற்புதங்களின் பின்னணியில் ஒரு சக்தி இருப்பதாக மக்கள் நம்புவது வேறு. பணம் வரும் என்பதற்காக கோவிலுக்கு செல்கிறார்கள் என்றால் அதை நம்பிக்கையாக பார்க்கக் கூடாது” என்றார்.
ஜோதிடர் பிரபாகரன் கூற்றை மறுத்த அவர், “வானத்தில் குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என என்ன நிகழ்வு நடந்தாலும் இதுபோன்ற சடங்குகளில் ஈடுபடுமாறு சிலர் கூறுகின்றனர். மக்கள் எதற்கு செவி சாய்க்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்” என்றார்.
“போலீஸில் புகார்” – தொல்லியல் அதிகாரி
“ஜோதிடர் கூறியதால் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். ஆனால், இதற்கு மத்திய தொல்லியல் துறையின் அனுமதியைப் பெறவில்லை என்பதால் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்” என்கிறார், மத்திய தொல்லியல் துறையின் உதவி கண்காணிப்பாளர் கோகுல்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தியானம் நடத்த உள்ளதாக ஞாயிறு அன்று நாமக்கல்லை சேர்ந்த இரண்டு பேர் அனுமதி கேட்டனர். சென்னையில் உள்ள மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்ற பிறகே எந்த நிகழ்வையும் நடத்த வேண்டும் எனக் கூறினோம். ஆனால், அதையும் மீறி நடத்திவிட்டனர்” என்கிறார்.
“கோவில் வளாகத்துக்குள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றாலும் தங்களிடம் அனுமதி பெற வேண்டும்” என்று கூறிய கோகுல், “குழந்தைகள், பெரியவர்கள் வருவார்கள் என்பதால் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் ஊக்குவிப்பதில்லை” என்றார்.
ஜோதிடர் கூறுவது என்ன?
பிபிசி தமிழிடம் பேசிய ஜோதிடர் பிருகு பிரபாகரன், “அரசுத் துறையில் உரிய அனுமதிகளைப் பெற்ற பின்னரே தியானம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய தொல்லியல் துறை கூறும் தகவலில் உண்மை இல்லை” என்கிறார்.
“ஒன்பதரை ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தியானம் செய்ததன் காரணமாக எனக்கு பொருளாதார உயர்வு ஏற்பட்டதால், அதைப் பற்றி யூடியூப்பில் பேசினேன். 500 பேர் வருவார்கள் என நினைத்தேன். ஆனால், ஏராளமானோர் கூடிவிட்டனர்” என்று அவர் கூறினார்.
“தியானத்துக்கு வர முடியாதவர்கள் வீட்டிலேயே தியானம் செய்யலாம் எனவும் கூறியிருந்தேன். எங்களால் எந்தவித சலசலப்பும் ஏற்படவில்லை” எனவும் பிருகு பிரபாகரன் கூறுகிறார்.
அனுமதி வாங்கியது யார்?
மத்திய தொல்லியல் துறை அதிகாரி கூற்றுக்கு மாறாக, முறையான அனுமதி பெற்றிருப்பதாக ஜோதிடர் பிருகு பிரபாகரன் கூறியதால் அதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்று கேட்டோம். அதற்குப் பதிலளித்த அவர், தனது ஆதரவாளரான பூபதி என்பவர் அனுமதி வாங்கியதாகவும், அவரிடம் பேசிவிட்டு ஆதாரங்களைத் தருவதாகவும் கூறினார். ஆனால், அதன் பிறகு அவர் தொடர்பில் வரவில்லை. அவர் ஆதாரங்களைத் தந்தால் அவை இந்த கட்டுரையில் சேர்க்கப்படும்.
மத்திய தொல்லியல் துறை உதவி கண்காணிப்பாளர் கோகுலிடம் பிபிசி தமிழ் சார்பில் இதுகுறித்து மீண்டும் பேசிய போது, “அனுமதியில்லாமல் தியானம் நடத்தினர். உள்ளூரை சேர்ந்த இரண்டு பேர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம்” என்று கூறினார். அந்த 2 பேரில் ஜோதிடர் பிருகு பிரபாகரன் குறிப்பிட்ட பூபதியும் ஒருவர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு