2
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வெகுவிரைவில் மீண்டும் கட்சியில் ஒன்றிணைவார்கள். கட்சியின் பிரதான பதவிகள் மறுசீரமைக்கப்படும். 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் நாங்களே ஆட்சியைக் கைப்பற்றுவோம்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தின் போது பல்வேறு காரணிகளால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியில் மீண்டும் ஒன்றிணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கட்சியில் இருந்து விலகிச் சென்ற முன்னிலை சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் நடைபெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வெகுவிரைவில் மீண்டும் கட்சியில் ஒன்றிணைவார்கள். கட்சியின் பிரதான பதவிகள் மறுசீரமைக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இந்த அரசு செயற்படுகின்றது. 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும். அதற்கான நடவடிக்கைகளைத் தற்போது மேற்கொண்டுள்ளோம்.” – என்றார்.