ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, தனக்கான தேர்தல் சின்னத்தை சுயமாக வரைந்து, தேர்தல் ஆணைய அங்கீகாரத்துக்காக வழங்கியுள்ளது.
2016-ல் மெழுகுவர்த்தி சின்னத் திலும், 2019 முதல் 2021 வரை கரும்பு விவசாயி சின்னத்திலும் தேர்தலை சந்தித்த நாம் தமிழர் கட்சிக்கு, 2024 மக்களவைத் தேர்தலின்போது உரிய நேரத்தில் விண்ணப்பிக்கத் தவறியதால் கரும்பு விவசாயி சின்னம் பறிபோனது. இந்த சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் வைத்துள்ள சின்னங்கள் பட்டியலில் இருந்து மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.
மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகள் பெற்றதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி முதல்முறையாக களமிறங்குகிறது.
இந்நிலையில், புலி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு செய்யப்பட்டது. ஆனால், உயிருடன் உள்ள விலங்குகளை சின்னமாக ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், சின்னங்கள் பட்டியலில் இருந்து ஒரு சின்னத்தை தேர்வு செய்யலாம் அல்லது தாங்களாக ஒரு சின்னத்தை வரைந்து கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: நாம் தமிழர் கட்சிக்கு புலி சின்னம் மறுக்கப்பட்ட நிலையில், சின்னங்கள் பட்டியலில் உள்ள கரும்பு விவசாயி சின்னமும் மறுக்கப்பட்டுள்ளது. வேறு மாநில இடைத்தேர்தலில் இந்த சின்னம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, விவசாயி சின்னத்தை நாங்கள் வரைந்து, அதற்கு தேர்தல் ஆணைய ஒப்புதல் பெறவுள்ளோம். இதற்காக பல்வேறு வகையான விவசாயி உருவப் படங்களை வரைந்துள்ளோம். இவற்றில் 3 படங்களை அனுப்பி, தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கும் படத்தை சின்னமாக இன்று (ஜன. 20) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தனது கட்சிக்கு இதேபோல சின்னத்தை வரைந்து கொடுத்து, தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.